2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு சவாலளிக்குமா பாகிஸ்தான்?

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பகலிரவு டெஸ்ட் போட்டியாக அடிலெய்ட்டில் நாளை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டியில் இனிங்ஸால் தோல்வியடைந்த பாகிஸ்தான், அவுஸ்திரேலிய மண்ணில் தமது தொடர் டெஸ்ட் தோல்விகளுக்கு முடிவு கட்டுவதற்கு பாரியளவு முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டியுள்ளது.

அந்தவகையில், முதலாவது போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்போட்டியின் இரண்டு இனிங்ஸ்களிலும் பிரகாசித்திருக்காத ஹரீஸ் சொஹைலை இமாம்-உல்-ஹக் மூலம் பிரதியீடு செய்யலாம் எனக் கூறப்படுகிறது. தவிர, அபிட் அலி மூலம் இஃப்திஹார் அஹ்மட்டை பிரதியீடு செய்யக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

பந்துவீச்சுப் பக்கத்தைப் பொறுத்தவரையில் முதலாவது போட்டியில் மொஹமட் அப்பாஸைச் சேர்க்காததே கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், 16 வயதான வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷாவை அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்க பாகிஸ்தான் தயங்கினால், அவரை மொஹமட் அப்பாஸ் பிரதியிடகூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இல்லையெனில் தொடர்ந்தும் அதே பந்துவீச்சுவரிசையே இப்போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் சவாலை வழங்க வேண்டுமானால், குறிப்பிடத்தக்க முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையைப் பெற வேண்டியுள்ளது. அந்தவகையில், பாபர் அஸாம், அசாட் ஷஃபிக் ஆகியோர் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெறுவதிலேயே பாகிஸ்தானின் வெற்றிவாய்ப்புகள் தங்கியுள்ளன.

மறுபக்கமாக, ஆஷஸ் தொடரின்போது வேகப்பந்துவீச்சாளர்களை அவுஸ்திரேலியா மாற்றியிருந்தபோதும் இப்போட்டியில் முதலாவது போட்டியில் விளையாடிய அதே பந்துவீச்சுக் குழாமுடனேயே அவுஸ்திரேலியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், தற்போது ஜேம்ஸ் பற்றின்சன் அணித் தேர்வுக்கு தகுதியுடையவராய் உள்ளபோதும் பகலிரவுப் போட்டிகளைப் பொறுத்தவரையில் ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸின் பெறுபேறுகள் அதிசிறப்பானவையாகக் காணப்படுகின்றன.

அந்தவகையில், அவுஸ்திரேலிய அணியில் எதுவித மாற்றமும் இருக்காது எனக் கருதப்படுகின்றபோதும், அடுத்து வரும் போட்டிகளில் தனதிடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ட்ரெவிஸ் ஹெட் ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

இந்நிலையில், இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், ஐந்தாமிடத்திலிருந்து, நான்காமிடத்திலுள்ள தென்னாபிரிக்காவை ஐந்தாமிடத்துக்கு பின்தள்ளி, நான்காமிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .