2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா நியூசிலாந்து?

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, சிட்னியில் இலங்கை நேரப்படி நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

தாம் இறுதியாகப் பங்கேற்ற தென்னாபிரிக்காவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 0-3 என அவுஸ்திரேலியா வெள்ளையடிக்கப்பட்டதுடன் அதன் அண்மைய கால ஒருநாள் சர்வதேசப் போட்டி பெறுபேறுகள் பின்னடைவாகக் காணப்படுகின்ற நிலையில் அவுஸ்திரேலியாவில் வைத்து தமது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து வெல்வதற்கான சிறந்த வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகிறது.

தமது முதன்மை வேகப்பந்துவீச்சாளர்கள் லொக்கி பெர்கியூசன், மற் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட் இல்லாமலே சொந்த மண்ணியில் இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என இந்தியாவை வெள்ளையடித்திருந்த நியூசிலாந்து தமது முதன்மை வேகப்பந்துவீச்சாளர்களை காயத்திலிருந்து மீளப்பெற்றுள்ள நிலையில் பலமானதாகக் காட்சியளிக்கிறது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கின்றபோதும் தொடர்ச்சியான பெறுபேறுகளை பெறுவது அவசியமாவதுடன், மர்னுஸ் லபுஷைன், மத்தியூ ஷோர்ட், மிற்செல் மார்ஷ், அலெக்ஸ் காரி, மத்தியூ வேட் போன்ற வீரர்கள் மத்தியவரிசையில் சிறப்பாகவும் இனிங்ஸின் இறுதி நேரங்களில் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி வெற்றிடமாகக் காணப்படும் மத்தியவரிசையை பூர்த்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது.

இதுதவிர, மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், கேன் றிச்சர்ட்ஸன், அடம் ஸாம்பா உள்ளிட்டோருக்கு ஒத்துழைக்கக்கூடியதாக ஐந்தாவது பந்துவீச்சாளராக ஜொஷ் ஹேசில்வூட் அல்லது அஸ்தன் அகர் ஆகியோர் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளனர்.

நியூசிலாந்தின் அச்சுறுத்தும் முதற்தெரிவு வேகப்பந்துவீச்சு வரிசையை விட இந்தியாவுக்கெதிரான தொடரில் பிரகாசித்த கைல் ஜேமிஸன், டிம் செளதி உள்ளிட்டோரும் வித்தியாசமான சவால்களை வழங்குகின்றனர்.

இதுதவிர, றொஸ் டெய்லர் முன்னிலையிலிருக்க, அணித்தலைவர் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கொல்ஸ், டொம் லேதம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிரான்ட்ஹொம் உள்ளிட்டோரை உள்ளடக்கிய துடுப்பாட்டவரிசை பலமானதாகக் காணப்படுகையில் பொறுப்புணர்ந்து செயற்படுமிடத்து அவுஸ்திரேலியாவில் வைத்து தமது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் வெற்றியை நியூசிலாந்து பெற்றுக் கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .