2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகள்: இத்தாலி, ஸ்பெய்ன் வென்றன

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான, இன்று அதிகாலை நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் இத்தாலி, ஸ்பெய்ன் உள்ளிட்டவை வென்றுள்ளன.

தம்நாட்டில் நடைபெற்ற குழு ஜே போட்டியொன்றில் 9-1 என்ற கோல் கணக்கில் ஆர்மேனியாவை, யூரோ கிண்ணத் தொடருக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற இத்தாலி வென்றிருந்தது.

இத்தாலி சார்பாக, சிரோ இம்மொபைல் மற்றும் நிக்கொலோ ஸனிலோ ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், நிக்கொலோ பரெல்லா, அலெஸியோ றோமக்னொலி, ஜோர்ஜினியோ, றிக்கார்டோ ஒர்சொலினி, ஃபெடெரிக்கோ சியேஸா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றிருந்தனர். ஆர்மேனியா சார்பாகப் பெறப்பட்ட கோலை எட்கர் பபயான் பெற்றிருந்தார்.

இதேவேளை, தம்நாட்டில் நடைபெற்ற குழு எஃப் போட்டியொன்றில் 5-0 என்ற கோல் கணக்கில் றோமானியாவை, யூரோ கிண்ணத் தொடருக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற ஸ்பெய்ன் வென்றது. ஸ்பெய்ன் சார்பாக, ஜெரார்ட் மொரெனோ இரண்டு கோல்களையும், ஃபபியான் ருய்ஸ் பெனா, மிகேல் ஒயர்ஸ்பல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜிப்ரால்டரில் இன்று அதிகாலை நடைபெற்ற குழு டி போட்டியொன்றில் அவ்வணியை 6-1 என்ற கோல் கணக்கில் வென்று இக்குழுவில் முதலிடம் பிடித்த சுவிற்ஸர்லாந்து, யூரோ கிண்ணத் தொடருக்குத் தகுதிபெற்றது.

சுவிற்ஸர்லாந்து சார்பாக, செட்ரிக் இஃப்டென் இரண்டு கோல்களையும், ருபென் வர்காஸ், கிறிஸ்டியன் ஃபஸ்னாச்ட், லொறிஸ் பெனிட்டோ, கிரனிட் ஸாகா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஜிப்ரால்டர் சார்பாக, றீஸ் ஸ்டைஷே ஒரு கோலைப் பெற்றார்.

இதேவேளை, அயர்லாந்துக் குடியரசின் மைதானத்தில்  நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்து குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்று யூரோ கிண்ணத் தொடருக்கு டென்மார்க் தகுதிபெற்றது. டென்மார்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்டின் பிறைத்வைட் பெற்றிருந்த நிலையில், அயர்லாந்துக் குடியரசு சார்பாகப் பெறப்ப்பட்ட கோலை மற் டொஹெர்ட்டி பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .