2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலாநிதி எ.எம்.எ.அஸீஸ்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காலித்.எம்.பாறுக்

கடந்த 64 வருடங்களுக்கு மேலாக அளப்பரிய சமூக தொண்டுகளை செய்துகொண்டு வருகின்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவை கடந்த 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டது. மிகச் சிறந்த கல்விமானும் ஆற்றல்மிகு நிர்வாகியும் புலமைமிக்க அறிஞனும் தூரநோக்காளரும் சமூக சேவையாளருமாகிய கலாநிதி எ.எம்.எ.அஸீஸினால் நிலைநிறுத்திவைக்கப்பட்ட இந்நிறுவனம் சமூகத்தின் குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கான சேவைகளை வழங்கி வருகின்ற நிறுவனமாக நிலைத்து நிற்கின்றது.

அபுபக்கர் முஹம்மது அப்துல்  அஸீஸ் 1911 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி யாழ்.நகர் வண்ணார் பண்ணையில் பிறந்தார். முதுமைக்காலத்தில் குறிப்பாக பல்துறைகளிலும் சமூகத்துக்கும் பயன்மிகு சேவைகளை வழங்குவதற்கு அவர், ஆர்.கே.எம்.வைத்தீஸ்வரர் வித்தியாலயம், யாழ்.நகர் இந்துக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கற்றுகொண்ட கல்வியும் அறிவாற்றல்கள் நிறைந்த ஆசிரியர் பெருந்தகைகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பயிற்சியும் பக்கப்பலமாக இருந்தன.

1933இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் சிறப்பு பட்டம் பெற்ற அஸீஸ், அரசினால் அளிக்கப்பட்ட புலமைப்பரிசில் பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பைத் தொடர்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

இலங்கைச் சிவில் சேவைப் பரீட்சையில் தேறிய முதலாவது முஸ்லிமாகத் திகழ்ந்த அஸுஸ் தன்னுடைய பட்டப்பின்படிப்பைத் தொடராது, நிர்வாக சேவையில் இணைந்துகொள்வதற்காக 1935 தாய்நாடு திரும்பினார்.

எகிப்தில் ஆரம்பிக்கப்பட்ட 'முஸ்லிம் வாலிபர் இயக்கம்' அயல் நாடுகளிலும் பரவி வருகின்ற தகவலை எச்.ஏ.ஆர்.கிப் என்பவரின் (Wither Islam) இஸ்லாம் எவ்விடத்துக்கு எனும் ஆக்கத்தில் 1933 இல் கண்ணுற்ற அஸீஸ் 'முஸ்லிம் வாலிபர் இயக்கம்' எனும் சொற்பிரயோகத்தினால் மிகவும் கவரப்பட்டார்.

இரண்டாவது உலக மகா யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை காரணமாக, உணவு உற்பத்தியை அதிகரித்துகொள்ள வேண்டிய அத்தியாவசியத் தேவை அரசுக்கு இருந்தமையால் 1942 இல் அஸீஸ் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற திடமான அறிவுறுத்தலுடன் கல்முனை நகருக்கு உதவி அரச அதிபராக அனுப்பப்பட்டார்.

இரண்டே இரண்டு வருடங்களில் அவர், உணவு உற்பத்தி பெருக்கத்தில் படைத்த அரும்பெரும் சாதனை பலராலும் போற்றப்பட்டது.
1944 ஜனவரி மாதத்தில் கொழும்புக்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்ட அஸீஸ் பெப்ரவரி மாதத்தில் கண்டி மாநகரில் உதவி அரச அதிபராக கடமைகளை ஏற்றார்.

1915 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கண்டி, முஸ்லிம் சங்கத்தின் தலைவராக அஸுஸ் தெரிவு செய்யப்பட்டார். இந்தச் சங்கத்தின் பெயரை 'கண்டி முஸ்லிம் வாலிபர் சங்கம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென அஸீஸ் முன்மொழிந்தமை ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.

1945 இல் 'யங் முஸ்லிம்' (முஸ்லிம் வாலிபர்) எனும் பிரசுரத்தையும் அவர் ஆரம்பித்து வைத்தார். இந்தச் சங்கத்தில் 29.7.1944 இல் அவர் நிகழ்த்திய தலைமை உரையில் 'வை.எம்' எனும் ஆங்கில எழுத்துக்கள் 'யங் மென்' (வாலிபர்) எனும் பதங்கள், சரீர வயதை அல்லது வயதெல்லையைக் குறிக்க கூடாது எனவும் மாறாக இலட்சியம், விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் ஆகிய பண்புகளை கொண்ட மனோநிலையைக் குறிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே, 'முஸ்லிம் வாலிபர் இயக்கத்தில் வயது வேறுபாடின்றி அனைவருக்கும் இடமுண்டு எனவும் கூறினார். 1945 இல் அரச தகவல் அதிகாரியாக நியமனம் பெற்று கொழும்புக்கு மாற்றப்பட்டார்.

அஸீஸும் அன்னாரின் பாரியார் உம்முவும் 1947 இல் இங்கிலாந்துக்கு பிரயாணமொன்றை மேற்கொண்டனர். இந்தப் பிரயாணத்தின்போது எகிப்திலும் சில நாட்கள் தங்கி இருந்ததினால் 1947  பெப்ரவரி மாதம் தெய்ரோ நகரில் அமைந்திருந்த 'வை.எம்.எம்.ஏ' நிறுவனத்துக்கு அஸீஸ் ஒருமுறை விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது அந்நிறுவனத்தின் அமைப்பு முறைகள் உள்ளிட்ட வேறு பல விடயங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட அவருக்கு, இலங்கையிலும் இவ்வாறான ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற ஓர் உள்ளார்வம் உண்டாகியது.

1948 இல் சிவில் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற கலாநிதி ரி.பி.ஜயாவை தொடர்ந்து, கொழும்பு ஸஹிராக் கல்லூரியின் அதிபராகப் பதவி ஏற்று வாலிபர் அமைப்புத் தொடர்பாக, தான் கொண்டிருந்த கருத்துக்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்தார்.

அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் பல முஸ்லிம் வாலிபர் சங்கங்கள் இயங்கிவந்தன. எச்.ஏ.மர்ஜானினால் 1917 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட முகத்துவாரம் முஸ்லிம் வாலிபர் சங்கம் அவற்றில் பழமை வாய்ந்ததாக இருந்ததுடன், அதன் தலைவராக வைத்தியர் கலாநிதி எம்.சி.எம்.கலீல் செயற்பட்டு வந்தார். முஸ்லிம் வாலிபர் அமைப்பில் முக்கிய பிரமுகராய் பின்னர் திகழ்ந்த எம்.லாபிர் காசிம், 1948இல் எ.எம்.எ.அஸீஸ சந்தித்து மாளிகாவத்தை முஸ்லிம் வாலிபர் சங்கம் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து கலந்தாலோசித்தார்.

இதன் பயனாக 1949 இல் மாளிகாவத்தை முஸ்லிம் வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது. வாலிபர் சங்கங்கள் தனியாகவும் வேறுபட்டும் செயற்பட்டன. அவை ஒரு சேவைப்பணிக்கூற்றையோ அல்லது அடையாளச் சின்னத்தையோ கொண்டிருக்கவில்லை.

02.04.1950இல் மாளிகாவத்தை, புதுக்கடை, குருவை வீதி, முகத்துவாரம் மற்றும் மத்திய முஸ்லிம் வாலிபர் சங்கங்கள், எ.எம்.எ.அஸீஸ் தலைமையில் ஸாஹிராக் கல்லூரியில் ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். இயங்கிக்கொண்டிருந்த அனைத்து முஸ்லிம் வாலிபர் சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் 'அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கம்' பேரவையை நிறுவுதல் வேண்டும் என்ற கருத்து ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

30.04.1950ஆம் திகதி, 17 முஸ்லிம் வாலிபர் சங்கங்களிலிருந்து 67 பேராளர்கள்;;; கலந்துகொண்ட ஒரு மாநாடு, ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எ.எம்.எஅஸுஸ் தலைவராகவும் லாபிர் காசிம்; செயலாளராகவும் கொண்ட அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப்  பேரவை தோற்றுவிக்கப்பட்டது.

இது ஒரு வரலாற்று முக்கியத்துவமானதாகும். அனேக முன்னணி முஸ்லிம் பிரமுகர்கள் ஒருங்கிணைந்து இந்தப் பேரவைக்கு ஆதரவு அளித்தார்கள். 1952ஆம் ஆண்டு வருடாந்த மாநாடு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து எ.எம்.எ.அஸுஸின் வதிவிடமான 'மெடோ சுவீட்' எனும் இல்லத்தில் ஒரு விருந்துபசாரமும் இடம்பெற்றது. முதலாவது மாநாட்டின் பின்பு, அஸுஸின் வழிகாட்டலின் பிரகாரம் அமைப்பு விதிகள், பணிக்கூற்று அடையாளச் சின்னம், பேரவைக்கீதம் மற்றும் நிறம் ஆகியவை தொடர்பான இணக்கம் எட்டப்பட்டது.

அமைப்பு விதிகளின் பிரதான குறிக்கோள் 'இஸ்லாம் மதம் போதிக்கின்ற உயர்ந்த மரபு மேம்பாடுகளுக்கு ஏற்றவாறும் நவீன மானுட வாழ்க்கை முறைகளின் ஒவ்வொரு அங்கத்திற்கும் சிறப்பான சேவைகளை வழங்கித் தங்களுடைய தாய்நாட்டுக்கும்  பாரிய பணிகள் ஆற்றக்கூடியதுமான ஆற்றல் மிகுந்த மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்' என்பதாகும். 1968ஆம் ஆண்டின் 31ஆம் இலக்கச் சட்டம் மூலமாக 22.06.1968இல் இந்தப் பேரவை கூட்டிணைக்கப்பட்டது.

பேரவையின் பணிக்கூற்று சுருக்கமான 'விசுவாசம், ஐக்கியம், ஒழுக்கம்' ஆகிய பதங்கள் மார்ஹும் முகமதலி ஜின்னாஹ்வினால் வழங்கப்பட்டவையாகும். சங்கத்தின் அடையாளச் சின்னத்தின் மேல் பகுதி, 'இஸ்லாம் மதத்தைக் குறிக்கின்ற புனித கஃபாவையும் சுற்றியுள்ள சங்கிலிப் பிணைப்பு ஐக்கியத்தையும் குறிக்கின்றன. 

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளான இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ் வணக்கம் ஆகியவற்றை குறிப்பதாக நட்சத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை ஆகும். பேரவைக்கீதம் எகிப்திலிருந்து பெறப்பட்டது.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை இலங்கையில் ஒரு பிரதான முஸ்லிம் வாலிபர் தன்னார்வத் தொண்டர் நிறுவனமாக விளங்குவதுடன், நாடு முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட கிளைச் சங்கங்களை கொண்டு செயற்படுகின்றது.

எ.எம்.எ.அஸீஸை  மிகவும் நெருக்கமாக விரும்பி இருந்த அமைப்பு, அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை ஆகும். மூன்று வருடங்கள் இவ்வியக்கத்தின் தலைவராக விளங்கிய அவருடைய ஆலோசனையும் வழிகாட்டலும் அன்னார் 24 நவம்பர் மாதம் 1973ஆம் இல் இறையடி சேரும் வரையிலும் இப்பேரவைக்கு கிடைத்து வந்தன.

(காலித்  எம்.பாறுக்; முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் முன்னைநாள் தலைவரும் தற்போது கலாநிதி எ.எம்.எ.அஸிஸ் மன்றத்தின் செயலாளரும் ஆவார். அஸீஸ் அதிபராக இருந்த காலப்பகுதியில் ஸாஹிராக் கல்லூரியில் மாணவராக இருந்துள்ளார்.)

தமிழில். எஸ்.எம்.எம்.யூசுப்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .