2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சாவகச்சேரி பொது சந்தையின் மூலம் சாவகச்சேரி நகர சபைக்கு தினசரி வருமானமாக 20,000 ரூபா

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 28 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


சாவகச்சேரி பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கைகளுக்காகவும், பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் உள்வரும் அனைத்து தரப்பினர்களிடமிருந்தும் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 ரூபா வருமானமாக அறவிடப்படுவதாக சாவகச்சேரி பொதுச்சந்தையின் மேற்பார்வையாளர் சி.கணேசமூர்த்தி - தமிழ்மிரரின் உழைப்பாளிகள் பகுதிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”சாவகச்சேரி சந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று பிரதான சந்தைகளில் ஒன்றாக விளங்குகிறது. இதர பிரதான சந்தைகளாக யாழ்ப்பாண பொதுச்சந்தை, மற்றும் திருநெல்வேலி பொதுச்சந்தை போன்றன அமைந்துள்ளன. ஏனைய இரு பிரதான சந்தைகளில் விற்பனையாகும் பொருட்களின் விலைகள் (விசேடமாக மரக்கறிகளின்) சாவகச்சேரி சந்தையுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகவே காணப்படுகின்றது. ஏனெனில், சாவகச்சேரி பகுதியை பொறுத்தமட்டில் ஏனைய பகுதிகளை விட உற்பத்தி நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுகின்றது”.

”சாவகச்சேரி சந்தையில் எந்த வியாபாரியும் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்காக அவர்கள் முதலாவதாக எமது நகரசபையை சேர்ந்த அதிகாரிகளுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். 5x5 சதுர அடி விற்பனைப் பகுதி ஒன்றுக்கு தினசரி கட்டணமாக 25ரூபா அறவிடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு உற்பத்தி பொருளையும் விற்பனைக்காக சந்தையினுள் கொண்டு வரும் போது மொத்தப் பெறுமதியில் 4 வீதத்தை வரிப்பணமாக செலுத்த வேண்டும்”.

”அதுபோலவே சாவகச்சேரி சந்தை வளாகத்தில் வாகனங்கள் தரிப்பிட கட்டணமும் அறவிடப்படுகிறது. சந்தையினுள் உட்பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் சற்று அதிகமாக அமைந்துள்ளது. வளாகத்தில், சந்தையின் வெளிப்புறமாக வாகனங்கள் தரிப்பதற்கு நியமக்கட்டணங்கள் அறவிடப்படுகிறது”.

”சாவகச்சேரி சந்தையை பொறுத்தமட்டில் வாரத்தின் ஏழுநாட்களும் வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஆயினும் சனிக்கிழமை பெரிய சந்தை எனும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதாவது சனிக்கிழமைகளில் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும் தினமாகும். இவ்வாறான நாட்களில், நகரசபைக்கான வருமானமும் 25000 ரூபா எனு்ம அளவுக்கு அதிகரிக்கும்”.

இவ்வாறு திரட்டப்படும் பணங்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது. அத்துடன் இந்தப்பணம் யாவும் நகரசபையின் மூலம் சந்தை அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக நாளொன்றுக்கு 20இற்கும் மேற்பட்ட மரக்கறி வியாபாரிகள் தமது வர்த்தக நடவடிக்கைகளை இங்கு முன்னெடுக்கின்றனர். இதை தவிர புடவை கடைகள், மளிகை கடைகள், மீன்சந்தை, பழங்கள் வியாபாரம் மற்றும் அணிகலன்கள் வியாபாரம் போன்ற பல்வேறு தரப்பட்ட நடவடிக்கைகள் இங்கு இடம்பெறுகின்றன” என்றார்.

இப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்திருந்த எமக்கு, இச்சந்தை வளாகத்தில் நீர் வசதிகள், மலசல கூட வசதிகள் போன்றன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆயினும், இன்னமும் முழுமையான நிர்மாணப்பணிகள் இடம்பெறமால் தற்காலிகமான முறையில் அமைந்த கூடாரங்களிலேயே ஆடை வியாபாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமையையும் காண முடிந்தது.

இது குறித்து சந்தை மேற்பார்வையாளரிடம் வினவிய போது, ”யுத்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தம்புள்ளையிலிருந்தும் பொருட்கள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே நாளாந்தம் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைவருக்கும் இடவசதிகளை வழங்கக்கூடிய வகையில் எமது கட்டிடங்கள் இல்லை. நகர சபையின் மூலம் தற்காலிகமாக ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப கூடாரங்கள் அமைத்து அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன” என்றார்.

நாளாந்தம் சராசரியாக 20000 ரூபாவை இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வருமானமாக பெறும் சாவகச்சேரி நகர சபை, வடபகுதியில் அமைந்துள்ள பிரதான சந்தைகளில் ஒன்றான சாவகச்சேரி பொது சந்தையின் கட்டிட வசதிகளை மேம்படுத்துமாயின், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு பெரிதும் நன்மை பயப்பதாக அமைந்திருக்கும்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .