2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சவால் மிக்கது பொருளாதார சூழல்: பிரஜீத்

A.P.Mathan   / 2013 மே 24 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


வியாபார நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக முறையில் முன்னெடுத்துச் செல்வது என்பது மிகவும் சவாலான ஒரு விடயமாக அமைந்துள்ளது. அதுபோலவே, புதிய வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக எம்மில் பலருக்கு பல்வேறுவிதமான ஆக்கபூர்வமான சிந்தனைகள் காணப்பட்ட போதிலும், அவற்றை செயற்படுத்துவதற்கு போதியளவு நிதி குறைபாடுகள் மற்றும் முதலீடுகள் இன்மை போன்றன பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளன. இதுபோன்ற நிலைகளில் எமக்கு யாராவது உதவமாட்டார்களா என எண்ணும் வேளைகளை கூட நாம் கடந்து வந்திருப்போம். 
 
இதுபோன்ற சூழ்நிலையில் காணப்படும் வர்த்தக முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில் 2009ஆம் ஆண்டு இலங்கையில் புளு ஓசியன் வென்ச்சர்ஸ் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. புதிய வர்த்தக முயற்சிகளுக்கு கைகொடுத்து உதவும் வகையிலும், ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் முதலீடுகளை வழங்கும் வகையிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
கடந்த ஆண்டு இந்த திட்டம் முற்றிலும் பரந்துபட்ட நோக்குடன், முன்னணி நிறுவனங்களின் அனுசரணையுடன் வென்ச்சர் என்ஜின் எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தியன் ஏன்ஜல் நெட்வேர்க் அமைப்பு மற்றும் புளு ஓசியன் வென்ச்சர்ஸ் அமைப்பு ஆகியவற்றின் பங்குபற்றலுடன் இந்த திட்டம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
கடந்த ஆண்டு இந்த திட்டம் வெற்றிகரமாக பூர்த்தியடைந்திருந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டும் இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழில் முயற்சிகளுக்கும், ஏற்கனவே கஷ்டமான நிலைகளில் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் உதவும் நோக்குடன் இந்த வென்ச்சர் என்ஜின் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், இவற்றை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி ஜூன் மாதம் 3ஆம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த திட்டம் குறித்து புளு ஓசியன் வென்ச்சர்ஸ் அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரஜீத் பாலசுப்ரமணியம் - தமிழ்மிரர் “உழைப்பாளிகள்” பகுதிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்...

 
பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்காக நான் வெளிநாட்டில் இருந்து பின்னர், கடந்த 2002ஆம் ஆண்டு இலங்கைக்கு மீண்டும் வருகை தந்திருந்தபோது, இலங்கையில் இந்த திட்டமொன்றை முன்னெடுப்பதற்கான தேவை இருப்பதை கண்டறிந்தேன். ஏனெனில் பொதுவாக இலங்கையில் வளர்ந்து வரும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அல்லது புதிய வர்த்தக நடவடிக்கைகளுக்கு அவசியமான முதலீடுகளை அல்லது ஆலோசனைகளை வழங்க எவரும் பெருமளவில் முன்வருவதில்லை. இந்த தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 2002ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு வழிகளில் புதிய தொழில் முயற்சிகளுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்த நான், பின்னர், இந்த நடவடிக்கையை இந்தியாவின் முன்னணி அமைப்பான இந்தியன் ஏன்ஜல் நெட்வேர்க் உடன் இணைந்து அங்கு அமுலிலுள்ள திட்டத்தை போன்ற ஒரு செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் 2009ஆம் ஆண்டில் புளு ஓசியன் வென்ச்சர்ஸ் எனும் அமைப்பை இலங்கையில் உருவாக்கியிருந்தோம்.
 
இந்த அமைப்பின் பிரதான நோக்கம், புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏற்கனவே கஷ்டமான நிலைகளில் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வர்த்தகங்களுக்கு முதலீட்டு உதவிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதாக அமைந்திருந்தது. இந்த நடவடிக்கைகளுக்காக நாம் பல முன்னணி இந்திய மற்றும் இலங்கையை சேர்ந்த முதலீட்டாளர்களுடன் கைகோர்த்துள்ளோம். இந்த திட்டத்தை முதலில் நான் ஆரம்பித்திருந்தபோது, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. பல்வேறு தரப்பினர், பல்வேறுவிதமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
 
கடந்த ஆண்டு நாம் முன்னெடுத்திருந்த வென்ச்சர் என்ஜின் திட்டத்தில் சுமார் 80 விண்ணப்பங்கள் எமக்கு கிடைத்திருந்தன. எமது விதிமுறைகளுக்கமைய அமைந்திருந்த 20 திட்டங்களை நாம் இதிலிருந்து தெரிவு செய்திருந்தோம். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இந்த 20 வர்த்தக நடவடிக்கைகளின் உரிமையாளர்களுக்கு வெவ்வேறு விதமான பயிற்சிப்பட்டறைகள், வழிகாட்டல்கள், ஆலோசனை கருத்தரங்குகள் போன்றவற்றில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்படும் மாபெரும் இறுதி நிகழ்வு இடம்பெற்றது.
 
இதிலிருந்து வெற்றிகரமாக 9 வர்த்தக நடவடிக்கைகளை நாம் தெரிவு செய்திருந்தோம். அவற்றுக்கான முதலீடுகளையும் வழிகாட்டல்களையும் நாம் வழங்கி வருகிறோம். வருடமொரு முறை இடம்பெறவுள்ள இந்த திட்டத்துக்கு மேலதிகமாக தற்போது சிறியளவில் இந்த திட்டத்துக்கு நிகரான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
 
வித்தியாசமான, ஆக்க பூர்வமான சிந்தனையுடன் கூடிய பிரகாசமான வர்த்தக திட்டமொன்றை கொண்டுள்ள ஒரு நபர், எம்மை அணுகி தமது வர்த்தக நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை பகிர்ந்து கொள்வாராயின், அந்த வர்த்தக நடவடிக்கையின் தன்மை குறித்து ஆராய்ந்து நாம் முதலீடுகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை மேற்கொள்வோம்.
 
இந்த திட்டத்துக்கு அடித்தளமாக நாம் பல்வேறு சமூக விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்த வண்ணமுள்ளோம். தகவல் தொழில்நுட்ப துறைக்கென அண்மையில் SparkIT எனும் நிகழ்வை நாம் முன்னெடுத்திருந்தோம். அதுபோலவே ஹிக்கா ஹக் எனும் நிகழ்வை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். குறித்த 10 குழுக்களை நாம் இதற்காக தெரிவு செய்து, 36 மணி நேரம் ஹிக்கடுவ பகுதியில் அமைந்துள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் அவர்களுக்கான சகல வசதிகளையும் வழங்கி, புதியதொரு பிரகாசமான வர்த்தக திட்டம் குறித்த சிந்தனையை வெளிக்கொணரும் நடவடிக்கையாக நாம் இந்த திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
 
இந்த திட்டம் பங்குபற்றுநர்களுக்கு முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. 
 
தற்போது இலங்கையில் காணப்படும் பொருளாதார சூழல் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்கு சவால்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது. மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எனவே புதிய வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரசின் மூலம் வரிச்சலுகைகள் போன்றன குறித்த கவனம் செலுத்தப்படுவது முக்கிய தேவையாக அமைந்துள்ளது.
 
தொழில் முயற்சியாளர்கள் தமது முயற்சியில் தோல்வியடைய வேண்டும். அப்பொழுது தான் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்ற உத்வேகம் அவர்களிடையே ஏற்படும். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் வர்த்தக நடவடிக்கையை கொண்டு செல்வதற்கான சிறந்த ஆளுமை வாய்ந்த செயலணி ஆகியவற்றை கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
 
இந்த திட்டம் முயற்சியாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆயினும் முதலீட்டாளர்களை பொறுத்தமட்டில் சவால்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. 
 
தற்சமயம் இந்த திட்டம் கொழும்பையும், அதனை அண்டிய பகுதியையும் இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நாடு முழுவதையும் இந்த திட்டத்தை பரப்புவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என கூறியிருந்தார்.
 
இந்த வென்ச்சர் என்ஜின் திட்டம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள http://www.ventureengine.lk எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.
 
நேர்காணல்: ச.சேகர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .