2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாச்சியாராக வாழ்ந்துள்ள ஜோதிகா

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாச்சியார் திரைப்படம் மூலம் மீண்டும் தன் நடிப்பாற்றலை நிலைநாட்டிய நடிகை ஜோதிகாவை, இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாலா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நாச்சியார். பி ஸ்டுடியோஸ் மற்றும் இயான் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில், ஜோதிகா பேசிய ஒரு வார்த்தை சர்ச்சைக்குள்ளானது.

இயக்குநர் பாலாவின் திரைப்படங்கள், சர்ச்சையை சந்திப்பது புதிதல்ல. இவரின் திரைப்படங்கள் பல, வெளியாவதற்கு முன்பே, எதாவது ஒரு காரணத்துக்காக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று அத்திரைப்படத்தில் வரும் காட்சியமைப்பு, அல்லது அதில் உச்சரிக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகம் என ஏதாவதொன்று சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருக்கும்.

அநேகமாக அடிதட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே உருவாக்கப்படும் இயக்குநர் பாலாவின் திரைப்படங்களுக்கு, தேசிய விருதுகளுக்கும் குறைவிருக்காது.

குறிப்பாக சொல்லப்போனால், விருதுகளை மனதில் கொண்டே திரைப்படங்களைப் படைக்கும் இயக்குநர் பாலாவின் திரைப்படங்களில், தம் நடிப்புப் பசிக்கு சிறந்த தீனி கிடைக்கும் என்பது பல நடிகர், நடிகையரின் அசைக்க முடியா நம்பிக்கை.

அந்த வகையில், பல திரைப்படங்க​ளில் தன் யதார்த்தமான நடிப்பால் இரசிகர்கள் பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ஜோதிகா. நடிகர் சூரியாவைத் திருமணம் முடித்து, சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, 36 வயதினிலே​ திரைப்படம் மூலம் மீண்டும் திரைக்குத் திரும்பி வந்தார். பல இயக்குநர்களின் நம்பிக்கை முகமாகத் திகழ்ந்த ஜோதிகா, முதல்முறையாக, பாலாவின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் நாச்சியார்.

நாச்சியார் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய திரைப்படமாக பேசப்பட்டது. மொழி, சந்திரமுகி, பச்சைக்கிளி முத்துச்சரம், பேரழகன் போன்ற திரைப்படங்கள் எவ்வாறு ​ஜோதிகாவுக்கு பெயர் சொல்லும் திரைப்படங்களாக அமைந்தனவோ, அதுபோன்று, பெயர் சொல்லும் திரைப்படமாக நாச்சியார் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக நாச்சியார் திரைப்பட முன்னோட்ட காட்சிகளில், ஜோதிகா பேசிய ஒரு வார்த்தை சர்ச்சைக்குள்ளானது. அவர் பேசிய அந்த வார்த்தையானது, பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பெண்களின் மனதை காயப்படுத்துவதாகவும் கூறி, பாலா மற்றும் ஜோதிகா ஆகியோர் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது.

ஆனால் இது பற்றி எதுவும் பேசாத ஜோதிகா, படம் வெளியானால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வந்து விடும் என்று மட்டும் கூறினா​ர்.

 

அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நாச்சியார் திரைப்படம் குறித்து சாதகமான விமர்சனங்களே அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. திரைப்படத்தில் நாச்சியாராக வாழ்ந்த ஜோதிகாவின் நடிப்பை, இரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஜோதிகாவின் நடிப்பாற்றலை பறைசாற்றும் மற்றொண்டாக நாச்சியார் திகழ்வதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றார்கள்.

எது எப்படியானாலும், நாச்சியார் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவாள் என்பது நிச்சயம், ஆனால் ஏற்கெனவே மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற ஜோதிகாவுக்கு, நான்காவது தேசிய விருது கிடைக்குமா, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .