கடந்த வார களங்கள்... (பெப்ரவரி 29 - மார்ச் 06)
09-03-2012 01:02 PM
Comments - 0       Views - 1081

 

இலங்கை அணிக்கு வெற்றி - இந்திய அணி இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது
அவுஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டி தொடரின் முதல் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலமாக இலங்கை அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. மிக விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு போக முடியும் என்ற நிலை. அப்படி நடந்தால் இந்திய அணி இறுதிப் போட்டி வாய்ப்பை இழக்கும் என்ற நிலையிலேயே இந்த வெற்றி இலங்கை அணிக்கு கிடைத்தது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் குமார் சங்ககாரா, தினேஷ் சந்திமால், லஹிறு திரிமன்னே ஆகியோர் பிரகசிதனர். ஆரம்ப விக்கெட்கள் இரண்டும் வேகமாக வீழ்த்தப்பட மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக சங்ககாரா (64), தினேஷ் சந்திமால் இணைந்து 123 ஓட்டங்களை பகிர்ந்தனர். சங்ககாரா ஆடமிழக்க இணைந்த தினேஷ் சந்திமால் (75), லஹிறு திரிமன்னே ஆகியோர் இணைந்து 46 ஓட்டங்களைப் பெற்றனர். தினேஷ் சந்திமால் ஆட்டமிழந்ததும் விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்தன. இருந்தாலும் லஹிறு திரிமன்னே பின் வரிசை வீரர்களுடன் இணைந்து 55 ஓட்டங்களைப் பெற்றார். டானியல் கிறிஸ்டியன் ஹட்ரிக் முறையில் திசர பெரேரா, சசித்திர சேனநாயக்க, நுவான் குலசேகர ஆகியோருடைய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது அவருக்கு முதலாவது ஹட்ரிக் சாதனை. இது சர்வதேச ரீதியிலான 31ஆவது ஹட்ரிக் சாதனையாகும். அவர் 5 விக்கெட்டுகளை மொத்தமாக கைப்பற்றிக்கொள்ள ஜேம்ஸ் பட்டின்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை அணி தடுமாறி 238 ஓட்டங்களைப் பெற்றது. இந்த இலக்கினை இலகுவாக அவுஸ்திரேலிய அணி அடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இலங்கை அணியின் அபாரமான பந்துவீச்சு மற்றும் அணித்தலைவர் மஹேல ஜெயவர்தனவின் சிறந்த பந்துவீச்சு மாற்றம் என்பன இலங்கை அணிக்கு வெற்றி பெற்று கொடுத்தன. குறிப்பாக கடந்த போட்டியில் மிக மோசமாக பந்து வீசிய லசித் மாலிங்க இந்த போட்டியில் மிக அற்புதமான மீள் வருகையை காட்டினார்.

அவுஸ்திரேலிய அணி 4 பந்துகள் மீதமிருக்க 229 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. 26/3 என்ற நிலையில் ஷேன் வொட்சன், மைக்கல் ஹஸ்ஸி (29) ஆகியோர் இணைந்து 87 ஓட்டங்களை மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றனர். வொட்சன் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை அடுத்து நல்ல இணைப்பாட்டங்கள் எதுவும் அமையவில்லை. டேவிட் ஹஸ்ஸி பின் வரிசை வீரர்களுடன் இணைந்து போராடி ஓட்ட எண்ணிக்கையை கிட்ட கொண்டு வந்தாலும் கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் குலசேகரவின் பந்து வீச்சில் பிடி கொடுத்து 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நல்ல பந்து வீச்சு மாற்றங்களும் போட்டிகளில் வெற்றி பெற முக்கிய காரணம் என இந்த போட்டி நல்ல முறையில் வெளிக்காட்டியது. மிகந்த விறு விறுப்புடன் போட்டி நிறைவுக்கு வந்தது. பந்து வீச்சில் லசித் மாலிங்க 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள். நுவான் குலசேகர 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள். போட்டியின் நாயகனாக தினேஷ் சந்திமால் தெரிவானார். இந்த வெற்றியின் மூலமாக இலங்கை அணி 4 புள்ளிகளை பெற்று மொத்தமாக 19 புள்ளிகளை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் ஓட்ட சராசரி வேக அடிப்படையில் முதல் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அணி இரண்டாம் இடம். இந்திய அணி மூன்றாம் இடம்.

முதல் இறுதிப் போட்டி; இலங்கை அணிக்கு தோல்வி
அவுஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இறுதிப் போட்டி அவுஸ்திரேலிய பிரிஸ்பேர்ன் நகரில் இடம்பெற்றது. இலங்கை அணி தோற்றுவிடும் என்ற நிலையும் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கமும் இந்த போட்டியில் நிரம்பி இருந்தாலும் ஒரு கட்டத்தில் போட்டி மிகுந்த விறு விறுப்பை ஏற்படுத்தியது. இலங்கை அணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகின. ஆனாலும் ஆரம்பம் மோசமாக போனதால் போட்டியினை வெற்றியாக மாற்ற முடியவில்லை. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய  அணி 50 ஓவர்களில் 321 ஓட்டங்களைப் பெற்றது. மிகச் சிறப்பான இலக்கு. துரத்துவதே கடினம். இதில் எங்கே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் இலங்கை அணி 300 ஓட்டங்களை தாண்டியதே பெரிய விடயம். இந்த நிலை 3 போட்டிகள் கொண்ட இறுதிப் போட்டி தொடரில் தொடர்ந்து போராட முடியும் என்ற நிலையை உருவாகியது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் டேவிட் வோர்னர் மிக அபாரமாக துடுப்பெடுத்தாடி மிக நல்ல ஆரம்பத்தை வழங்கினார். 163 ஓட்டங்கள். இந்த ஆடுகளத்தில் சாதனை 29 வருடங்களின் பின் முறியடிக்கப்பட்டது. இலங்கை அணிக்கெதிராக அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் பெற்ற கூடுதலான ஓட்டங்களும் இதுவே. ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 24 ஓவர்களில் 136. மத்தியூ வேட் 64 ஓட்டங்கள். பின்னர் ஓரளவு கட்டுப் படுத்தினாலும் ஆரம்பம் அபாரமாக அமைந்ததும் டேவிட் வோர்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததும் அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. மைக்கல் கிளார்க் 37 ஓட்டங்கள், 25 பந்துகளில். பந்து வீச்சில் தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லசித் மாலிங்க, நுவான் குலசேகர, பார்வீஸ் மஹரூப், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். பதிலளித்த இலங்கை அணியின் ஆரம்பம் மிக மோசமாக அமைந்தது. அதனையடுத்து இலங்கை அணி 200 ஓட்டங்களை தாண்டுமா என்ற நிலை கூட உருவானது. காரணம் 30 ஓவர்களில் 144/6 என்ற நிலை. நினைக்காமல் இருக்க முடியுமா. தன ஆரம்ப இடத்தை தலைவர் மஹேலவிடம் பறி கொடுத்த உப்புல் தரங்க மத்திய வரிசையில் களமிறங்கினார். அந்த இடத்திலும் தன்னால் இயலும் என நிரூபித்து காட்டி தனக்கான இன்னும் ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டார். நுவான் குலசேகர தன்னையும் சகல துறை வீரராக காட்ட முயற்சி செய்து வருபவர். இவருடைய துடுப்பாட்டம் பல தடவை கை கொடுத்துள்ளது. ஆனால் இந்தளவு யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். 43 பந்துகளில் 73 ஓட்டங்கள். இரண்டாவது அரைச் சதம். இந்த ஓட்ட எண்ணிக்கை ஒரு புதிய இலங்கை சாதனையாகும். எட்டாம் இலக்க வீரர் ஒருவர் பெற்ற கூடுதலான ஓட்டங்கள் என்ற சாதனையே அது. உப்புல் தரங்க, குலசேகர இணைந்து 69 பந்துகளில் 104 ஓட்டங்கள் 7ஆவது விக்கெட் இணைப்பாட்டம். நுவான் குலசேகர ஆட்டமிழந்ததை தொடர்ந்து, உப்புல் தரங்க - தம்மிக்க பிரசாத் ஆகியோருடைய 37 ஓட்ட இணைப்பாட்டம் நம்பிக்கையை தந்தாலும் வெற்றி பெற இயலவில்லை. இலங்கை அணி 4 பந்துகள் மீதமிருக்க 306 ஓட்டங்களைப் பெற்றது. இந்த மைதானத்தில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி 300 ஓட்டங்களை தாண்டியது இலங்கை அணி மாத்திரமே. குமார் சங்ககார 42 ஓட்டங்கள். தம்மிக்க பிரசாத் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்கள். அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் டேவிட் ஹஸ்ஸி 4 விக்கெட்டுகள். ஷேன் வொட்சன், ப்ரெட் லீ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள். போட்டியின் நாயகன் டேவிட் வோர்னர். இரண்டு அணிகளுக்குமாக பெற்ற 627 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இறுதிப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட கூடுதலான ஓட்டங்கள் என்பதுடன் அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட ஆறாவது கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும். இலங்கை அணியின் இறுதி ஆறு வீரர்கள் இந்த போட்டியில் பெற்ற 178 ஓட்டங்கள் என்ற சாதனை 2 கூடுதலான ஓட்டங்களால் முறியடிக்கப்பட்டது.

இலகுவான இலங்கை வெற்றி - இறுதிப் போட்டி வாய்ப்பு...
அவுஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின் இரண்டாவது போட்டி அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி இலகுவான 8 விக்கெட்டுகளிலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றி முழுக்க முழுக்க மஹேல ஜெயவர்த்தனவின் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி. எதிர்பாராத சில முடிவுகள், வித்தியாசமான முடிவுகள், 4 முழு நேர பந்து வீச்சாளர்கள். ஐந்தாவது பந்து வீச்சாளராக திலகரட்ன டில்ஷான். அதுவும் ஆரம்ப பந்து வீச்சாளராக. தொடர்ச்சியாக முதல் 7 ஓவர்களை வீசினார். இரண்டு சதங்கள் பெறப்பட்ட போட்டிளில் ஐந்து பந்து வீச்சாளர்கள் மாத்திரமே பந்து வீசினர். இன்னும் ஓர் அதிரடி தோனியா என கேள்வி கேட்கத் தோன்றியது. இந்த வருடம் மட்டுமல்ல அடுத்த உலக கிண்ணம் வரை மஹேல அணித் தலைவராக இருக்க வேண்டும். இன்னும் இலங்கை அணி சாதிக்கும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது. இந்த எண்ணிக்கை அவுஸ்திரேலியாவின் ஆரம்பத்துக்கு காணாமல் போனது. இலங்கை அணியின் பந்து வீச்சு அபாரமாக அமைந்தது. அதன் மூலமாக 300 ஓட்டங்களை பெறாமல் தடுத்தது மட்டுமல்லாமல் வெற்றி வாய்ப்பையும் உருவாக்கியது. மத்தியூ வேட், ஷேன் வொட்சன் ஆகியோர் வேகமாக ஆட்டமிழக்க 56 ஓட்டங்களில் இணைப்பாட்டத்தை டேவிட் வோர்னர், மைக்கல் கிளார்க் ஆகியோர் உருவாக்கினர். 184 ஓட்டங்கள் இருவரது இணைப்பாட்டம். தனது இரண்டாவது சதத்தை அடித்து வோர்னர் 106 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 35 ஓவர்களுக்கு பின் ஓட்ட சராசரி வேகம் சாதாரணமாக அதிகரிக்கும். அதுவும் 2 விக்கெட்டுகள் என்ற நிலையில். ஆனால் அதற்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் இடம் வழங்கவில்லை. வோர்னர் ஆட்டமிழக்க எதிர்பார்த்தளவு ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. வந்த புதிய வீரர்களும் ஆட்டமிழக்க இறுதியில் இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு 272 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மைக்கல் கிளார்க் தன் ஏழாவது சதத்தைப் பெற்றார். இலங்கை அணிக்கெதிரான முதலாவது சதம் இதுவாகும். அணித்தலைவராக நான்காவது சதம் என்பதுடன் அவுஸ்திரேலியாவில் பெறும் இரண்டாவது சதம் இதுவாகும். லசித் மலிங்க 40 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகள். ஆரம்ப பந்து வீச்சாளர் டில்ஷான் 40 ஓட்டங்களிற்கு 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

பதிலளித்த இலங்கை அணி சவால்களையோ, அழுத்தங்களையோ, கஷ்டங்களையோ எதிர்கொள்ளவில்லை. சிறப்பான ஆரம்ப இணைப்பாட்டம். 27.1 ஓவர்களில் 179 ஓட்டங்கள். மஹேல ஜெயவர்தன 76 பந்துகளில் 80 ஓட்டங்கள். அடுத்த இணைப்பாட்டம் டில்ஷான், சங்ககார ஆகியோர் 55 ஓட்டங்களைப் பெற்றனர். டில்ஷான் 106 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இது இந்த தொடரில் டில்ஷான் பெற்ற இரண்டாவது சதம் என்பதுடன் இது அவருடைய 12ஆவது சதமுமாகும். சங்ககாரா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்கள். மொத்தத்தில் இலங்கை அணி துடுப்பாட்டம், பந்து வீச்சு என சிறப்பாக செயற்பட்டு இந்த வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் நாயகனாக திலகரட்ன டில்ஷான் தெரிவானார். இந்த தொடரில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியுடன் பெற்ற நான்காவது வெற்றியாகும். அவுஸ்திரேலியாவில் வைத்து இப்படி வெற்றிகளை பெறுவது இலகுவான விடயமா? மிகப் பெரிய விடயம். சாதனை ஆகும். இலங்கை அணி அவுஸ்திரேலியாவில் வைத்து பயப்பட்ட காலம் மாறி. இலங்கை அணியை பார்த்து அவுஸ்திரேலிய அணி பயப்படும் நிலை மாறி உள்ளது. இதே அழுத்தத்தை பிரயோகித்து இலங்கை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இதே மாதிரி இலங்கை அணி இரு தடவைகள் 1-1 என்ற சமநிலையின் பின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இம்முறை அதை மாற்றி வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. செய்து காட்டுவார்களா? அடுத்த போட்டி வரை காத்திருந்துதான் பார்க்கணும்.  

தொடரை தன் வசப்படுத்தியது தென் ஆபிரிக்கா
தென் ஆபிரிக்க - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி கடந்த 29ஆம் திகதி நேப்பியரில் நடைபெற்றது. தென் ஆபிரிக்க அணிக்கு இந்த போட்டியும் இலகுவான போட்டியாக அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மார்டின் கப்டில் 58 ஓட்டங்களையும், பிரெண்டன் மக்கலம் 85 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றையவர்கள் எவரும் பெரிதளவில் மட்டுமல்ல சிறியளவிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் தென்ஆபிரிக்க அணி சார்பாக மோர்னி மோர்க்கல் 38 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகள். லொன்வபோ சொர்த்சொபி 3 விக்கெட்டுகள். பதிலளித்த தென் ஆப்ரிக்கா அணி 38.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. டெஸ்ட் போட்டிகளின் தலைவர் கிரேம் ஸ்மித்துக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஜாக்ஸ் கலிஸ், மற்றும் ஹாசிம் அம்லா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். ஹாசிம் அம்லா 92 ஓட்டங்கள். ஜேபி டுமினி 43 ஓட்டங்கள். பஅப் டு ப்லேசிஸ் 34 ஓட்டங்கள். ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்கள். பந்து வீச்சில் டருன் நேடுல்லா 2 விக்கெட்டுகள். போட்டியின் நாயகனாக மோர்னி மோர்க்கல் போட்டியின் நாயகனாக தெரிவானார். தொடரில் இரண்டாவது வெற்றி தென் ஆபிரிக்க அணிக்கு. தொடரை கைப்பற்றி விட்டார்கள்.

நியூ சிலாந்து கிரிக்கெட் அணிக்கு வெள்ளையடித்தது தென் ஆபிரிக்க அணி
இரண்டு அணிகளுக்குமிடையிலான இறுதிப் போட்டி மார்ச் 03ஆம் திகதி நடைபெற்றது. தென் ஆபிரிக்க அணிக்கு இன்னும் ஓர் இலகுவான போட்டி. இலகுவான வெற்றி. 40 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகளினால் வெற்றி. முதலில் துடுப்பெடுத்தாடி 47 ஓவர்களில் 206 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கூடுதலான 47 ஓட்டங்களை அணித் தலைவர் பிரெண்டன் மக்கலம் பெற்றுக் கொண்டார். ஜேம்ஸ் பிராங்கலின், கொலின் கிரான்ட்ஹோம் ஆகியோர் தலா 36 ஓட்டங்கள்.

மர்ச்சன்ட் டி லங்கே இந்த போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்டார். ஆரம்பமே மிக அபாரமாக அமைந்தது. 46 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகள். ராபின் பீற்றர்சன் 2 விக்கெட்டுகள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 43.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில் ஹசிம் அம்லா 76 ஓட்டங்கள். அல்பி மோர்க்கல் 41 ஓட்டங்கள். பந்து வீச்சில்ரோப் நிகோல் 2 விக்கெட்டுகள். தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் சில வீரர்களுக்கு தென் ஆபிரிக்க அணி ஓய்வு வழங்கியது குறிப்பிடத் தக்கது. தென் ஆபிரிக்க அணி நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வெள்ளையடிப்பு செய்து தனதாக்கிக் கொண்டது. இந்த வெற்றியின் மூலமாக தென் ஆபிரிக்க அணி தரப்படுத்தல்களில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து கிரிகெட் எங்கே செல்கிறது என்பது யாருக்குமே தெரியாது. திடீர் என்று அதிரடியாக வெல்வார்கள். திடீர் என அதல பாதளத்துக்குள் விழுந்து விடுவார்கள். வீரர்கள் முழுமையான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் விளையாடுகிறார்கள் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. வருவதும் போவதுமாக பல வீரர்கள். அணிக்குள், வீரர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்பதும் வெளிப்படையே. நிர்வாகம் பெரிதாக கவலைப் படுகிறதா? முன்னேற்ற முயற்சிக்கிறதா என்பது தெரியவில்லை. இன்னும் ஒரு புறம் வீரர்கள் ஏன் இப்படி என்றால் ஊதியம் கூட ஒரு பிரச்சினையாக இருக்கலாம். டெஸ்ட் விளயாடுகின்ற அணிகளில் ஏழையானவர்கள் நியூசிலாந்து வீரர்களே. சம்பளம் குறைவு. விளம்பரங்கள் குறைவு. வேறு தொழிலை தேடிப்போன வீரர்கள், இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கு சென்றவர்கள் என சிலர் உள்ளனர். நல்ல வீரர்கள் உள்ள நாடு. நல்ல முறையில் வரலாம். எப்பதான் மற்றம் வருமோ?

இந்த தொடரில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர்கள் 
பிரெண்டன் மக்கலம்      3    3    188    85    62.66   
ஹசிம் அம்லா                   3    3    176    92    58.66
ஏபி டி வில்லியர்ஸ்          3    3    146    106*    ---
பஅப் டு ப்லேசிஸ்             3    3    119    66*    59.50
ஜேபி டுமினி                        3    3    114    46    38.00
(போட்டி, இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி )
*** வில்லியர்ஸ் மூன்று போட்டிகளிலும் ஆட்டமிழக்கவில்லை ***

இந்த தொடரில் கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
மோர்னி மோர்க்கல்                     2    2    87/7        38/5        12.42
லொன்வபோ சொத்சொபி         3    3    120/6        43/5        20.00
மர்ச்சன்ட் டி லங்                            1    1    46/4        46/4        11.50
ரொபின் பீற்றர்சன்                         3    3    124/4        36/2        31.00
(போட்டி, இன்னிங்ஸ், ஓட்டங்கள்/விக்கெட்கள் , சிறந்த பந்து வீச்சு , , சராசரி )

ஆசிய கிண்ண அணிகள் ஒரு பார்வை
ஆசிய கிண்ண போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. ஆசியாவுக்குள் பலப் பரீட்சையாக இருக்கப் போகிறது. குறிப்பாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பலப் பரீட்சை ஆக இது இருக்கப் போகிறது. மூன்று அணிகளும் சம பல அணிகளாக இருக்கின்றன. இந்த நிலையில் பங்களாதேஷில் நடைபெறவுள்ள இந்த தொடரில் பங்கு பற்ற உள்ள நான்கு அணிகளும் தங்கள் அணிகளை அறிவித்துள்ளன.

எதிர்கால இலங்கை அணி?
இலங்கை அணி முக்கிய மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை. அவுஸ்திரேலிய போட்டி தொடரில் அதிகம் விளையாடிவரும் சுழல் பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் நீக்கப்பட்டது மாத்திரமே முக்கியமானதாகும். அவருடைய வயது இதற்கு கரணம் என்பது வெளிப்படை உண்மை. ஆனால் இறுதிப் போட்டிகளில் விளையாடிக் கொண்டும் இருக்கும் வேளையில் இந்த அறிவித்தல் சரிதானா? உண்மையான முழு மனதுடன் அவரால் விளையாட முடியுமா? இப்படி கேள்விகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன. இலங்கை அணியைப் பொறுத்த மட்டில் நல்ல அணி அமைந்து விட்டது. சரியான சுழல் பந்து வீச்சாளர் கிடைத்தால் சரி. சசித்திர சேனநாயக்க, சீக்குகே பிரசன்னா ஆகியோருக்கு இடம்கிடைத்துள்ளது. இவர்கள் நல்ல முறையில் வந்தால் இவர்களின் துடுப்பாட்டம் மேலதிக பலம். இவர்களும் தயாராகி விட்டல் அணிக்குள் முழுமையாக இடம் கிடைத்து விட்டால் இலங்கை அணிக்கு 10 துடுப்பாட்ட வீரர்கள் என்று சொல்லலாம். மஹேலவின் தலைமையில் இலங்கை அணியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

அணி விபரம் –
மஹேல  ஜெயவர்தன, அஞ்சலோ மத்தியூஸ், திலகரத்ன டில்ஷான், உப்புல் தரங்க, குமார் சங்கக்கார, தினேஷ் சந்திமால், லஹிறு திரிமன்னே, திசர பெரேரா, பார்வீஸ் மஹரூப், சசித்திர சேனநாயக்க, நுவான் குலசேகர, லசித் மாலிங்க, சீக்குகே பிரசன்னா, சுரங்க லக்மால்.

நல்ல சமநிலையான அணி. இந்த 14 பேரில் மூன்று வீரர்கள் வெளியே இருக்கப் போகிறார்கள். பங்களாதேஷ் அணி என்ற காரணத்தினால் சுழல் பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்க முடியும்.

சர்ச்சையுடன் கூடிய இந்திய அணி விபரம்
இந்திய அணி சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது அணியை அறிவித்துள்ளது. அதிலும் சர்ச்சைகள் வராமல் இல்லை. ஆரம்பத்தில் ஊடகங்கள் சச்சின் டெண்டுல்கார், விரேந்தர் சேவாக் ஆகியோர் அணியால் நிறுத்தப்படுவார்கள் என்ற செய்திகளை வெளியிட்டது. ஆனால் சேவாக் நிறுத்தப்பட்டார். இது சர்ச்சையை உருவாக்கியது. தெரிவு முடிந்து வெளியே வந்த தெரிவுக்குழுவின் தலைவர் ஸ்ரீகாந்தை ஊடகவியலார்கள் சந்தித்தனர். சேவாக் உபாதை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளார். கிரிக்கெட் சபைக்கு அணியின் உடல் இயக்க நிபுணர்கள் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஓய்வு தேவை என்ற காரணத்தினால் நீக்கப்பட்டார் என்ற பதிலை தெரிவித்தார். தொடர்ந்து குதர்க்கமான கேள்விகளை கேட்ட ஒருவர் ஏன் அவர் அவுஸ்திரேலிய போட்டியில் இருந்து அழைக்கப்படவில்லை என கேட்க, கோபம் வராத ஸ்ரீகாந்த் மிக மோசமாக கோபமடைந்து திட்டிவிட்டார். பின்னர், சேவாக் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்திகள் வர - சேவாக், தான் ஸ்ரீகாந்திடம் கேட்டதன் அடிப்படையிலேயே தனக்கு ஓய்வு வழங்கப்பட்டது என தெரிவித்தார். ஸ்ரீகாந்திடம் இருந்து ஒரு பதில், சேவாக் இடம் ஒரு பதில் என இரு பதில்கள் வர இன்னும் கொஞ்சம் முணுமுணுப்புக்கள் வந்தன. விராத் கோளி அணியின் உபதலைவராக நியமிக்கப்பட்டதும், கம்பிர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் இன்னும் கொஞ்சம் சர்ச்சைகளை கிளப்பியது. அல்லது கம்பீர் நல்ல முறையில் விளையாடும் போது ஏன் இவ்வாறு மாற்ற வேண்டும் என்பவைதான். 

உபாதைகள் காரணமாகவும், இன்னும் ஓய்வு தேவை என்ற காரணத்தினால் சகீர் கானுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. யூசுப் பதான் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். அண்மைக்காலமாக ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளில் நல்ல முறையில் பந்து வீசிய அசோக் டிண்டா அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். பார்த்திவ் படேல், உமேஷ் யாதவ் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆகா ஓகோ... இவர் தான் இந்திய அணியின் அதிக வேகப் பந்து வீச்சாளர் என புகழப்பட்டவர் எந்த காரணங்களுமின்றி நீக்கப் பட்டுள்ளார். இன்னும் ஒருவரை சேர்த்துள்ளார்கள்.

அணி விபரம்
மகேந்திர சிங் டோனி, விராத் கோளி, சச்சின் டெண்டுல்கர், கெளதம் கம்பீர், ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரைனா, மனோஜ் திவாரி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், பிரவீன்  குமார், வினை குமார், ராகுல் ஷர்மா, யூசுப் பதான், இர்பான் பதான், அசோக் டிண்டா.

பாகிஸ்தான் அணி விபரம்
மிஸ்பாஹ் உல் ஹக், மொஹம்மத் ஹபீஸ், நசிர் ஜம்ஷெட், யூனுஸ் கான், உமர் அக்மல், ஹம்மட் அசாம், அசாத் ஷாபிக், ஷஹிட் அப்ரிடி, ஆசர் அலி, சர்ப்ராஸ் அஹமத், சைட் அஜ்மல், அப்துர் ரெஹ்மான், உமர் குள், ஐசாஸ் சீமா, வாஹப் ரியாஸ்.

மோசமான ஒருநாள் போட்டி தொடரின் பின் பாகிஸ்தான் அணி அடுத்த கட்ட போட்டிக்க தயாராகிறது. பல புதிய வீரர்களை உருவாக்கி விட்டு பல தொடர் வெற்றிகளை பெற்ற அணி. டேவ் வாட்மோர் புதிய பயிற்றுவிப்பாளராக பதவியேற்று களமிறங்கும் தொடர் இது. பாகிஸ்தான் அணிக்கு விக்கெட் காப்பாளர்தான் பிரச்சினையாக உள்ளது. அட்னன் அக்மல் நீக்கப்பட்டு ஏற்கனவே விளையாடிய சப்ராஸ் அஹமட் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். சொய்ப் மாலிக், இம்ரான் பரஹாட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். புதிய தெரிவுக் குழுவின் தலைவர் இக்பால் காசிமின் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட அணி இது.

பங்களாதேஷ் அணி - தெரிவுக்குழு தலைவர் பதவி துறப்பு
அணித்தலைவராக சில காலங்களிற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டு உபாதைகள் காரணமாக அணியில் இடத்தை இழந்த மஸ்ரபி மோர்தச அணிக்குள் திரும்புகிறார். ஆனால் பதவி கிடைக்கவில்லை.இவரின் வருகை அணிக்கு நிச்சயம் மேலதிக பலம் சேர்க்கும். தமிம் இக்பால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏன் என்ற கரணம் தெரியவில்லை. தெரிவுக்குழுவின் தலைவர், தான் அவரை அணியில் தெரிவு செய்ததாகவும் ஆனால் பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவர் அவரை அணியில் இருந்து நீக்கியதாக தெரிவித்தார். அதன் பின் தெரிவுக்குழுவின் தலைவர் அக்ரம் கான் தான் பதவியிலிருந்து விலகுவத அறிவித்து விலகிவிட்டார். அணித் தெரிவில் தொடர்ந்து கிரிக்கெட் சபையின் தலையீடுகள் இருப்பதும், முக்கிய வீரர்களின் இடத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகியுருப்பதும் தான் விலக கரணம் என அவர் சொல்லி உள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிம் இக்பால் பங்களாதேஷ் அணியின் முக்கிய சிறந்த வீரர். அவரை அணியில் தெரிவு செய்தோம். ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என தமிம் இக்பாலின் மாமனாரான தெரிவுக் குழுவின் தலைவர் அக்ரம் கான் தெரிவித்தார். 

அணி விபரம்  
முஷ்பிகீர் ரஹீம், மக்முடுல்லாஹ், இம்ருள்  கயேஸ், நஜிமுட்டின், ஜகுருள் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், நசிர் ஹோசைன், மஷ்ரபி மோர்ட்சா, அப்துர் ரசாக், எலியாஸ்  சன்னி, நஸ்முல் ஹோசைன், ஷபியுள் இஸ்லாம், ஷஹடட் ஹோசைன், அனமுல் ஹக்.

பங்களாதேஷில் போட்டிகள் நடைபெறுகின்றன. சில காலங்களிற்கு முன்னர் பங்களாதேஷ் அணிக்கு எல்லா அணிகளும் பயந்த நிலை இருந்தது. ஆனால் இப்போது அப்படி நிலை இல்லை. பங்களாதேஷ் அணி மீள எழுமா? மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்குமா என்பதே கேள்வி.

"கடந்த வார களங்கள்... (பெப்ரவரி 29 - மார்ச் 06)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty