சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014

65 போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் நால்வர் கைது


(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த)

சிலாபம் பொலிஸார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கை ஒன்றின் போது போலி நாணய நோட்டுக்களை அச்சிட்டு வந்த நான்கு சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

சிலாபம், கெபெல்லவள எனும் பிரதேசத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணய நோட்டுக்கள் 65 உடன் அவற்றை அச்சிடப் பயன்படுத்திய இயந்திரத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சிலாபம் பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் பிரதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இதுவரை அவரால் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான போலி நாணய நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் ஒத்துக்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களால் அச்சிடப்படும் போலி ஆயிரம் ரூபாய் நாணய நோட்டுக்கள் மூன்றுக்கு ஒரு நிஜ ஆயிரம் ரூபாய் என்ற ரீதியில் போலி நாணய நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், மதுபான சாலைகள், சூதாட்ட இடங்களில் இவ்வாறான நோட்டுக்களை அதிகளவில் மாற்றியுள்ளதாகவும் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை போலி நாணய நோட்டுக்கள் மற்றும் உபகரணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிலாபம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: 1287

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.