2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மர்மங்கள் விலகாத இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்

Administrator   / 2017 மே 22 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முஸ்தீபுகள், அனைத்துக் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  

தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக, ஜூலை 25 ஆம் திகதிக்குள், புதிய குடியரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.   

அதேபோல், குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் அமித் ஹன்சாரிக்குப் பதிலாக, ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்குள், புதிய துணைக் குடியரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். இப்போது இருக்கும் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது, இதுவரை உறுதியாக வெளிவரவில்லை.   

காங்கிரஸ் ஆட்சியின்போது, குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துடன் மோதிக் கொள்ளாமலேயே, குடியரசுத் தலைவர் பதவியில் தன் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.  

குடியரசுத் தலைவர் பதவி என்பது ‘இறப்பர் ஸ்டாம்பு’ பதவி போன்றது என்று கூறப்பட்ட வாதத்தை, கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர்களாக இருந்த பூட்டா சிங், கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் போன்றவர்கள் முறியடித்தனர்.    

அதுபோன்ற, எவ்வித அசாதாரணமான நடவடிக்கைகள் எதிலும் பிரணாப் முகர்ஜி ஈடுபடாமல், மத்திய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்திலேயே செயற்பட்டார்.

இன்னும் சொல்லப்போனால், அனைவரும் பதற்றத்தில் இருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முதலில் ஆதரித்தவர் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சமீப காலத்தில் இருந்த பிரதமர்கள் வாஜ்பாயாக இருந்தாலும் சரி, ​டொக்டர் மன்மோகன் சிங்காக இருந்தாலும் சரி, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை ஒரு மனதாகவே தெரிவு செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர்.   

மத்தியில் உள்ள ஆளும்கட்சியின் முதன்மை விருப்பப்படி, குடியரசுத் தலைவரைத் தெரிவு செய்து, வெகு நாட்கள் ஆகின்றன. ஏனென்றால், காங்கிரஸோ, பா.ஜ.கவோ, கூட்டணிக் கட்சிகளின் தயவுடன்தான் குடியரசுத் தலைவரைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது.   

ஆனால், இந்த முறை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு, மக்களவையில் தனிப் பெரும்பான்மை இருக்கிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செல்வாக்கு உள்ளது. இது தவிர, பா.ஜ.கவிடம் தங்கள் ஆளுமையைக் காட்டக் கூடிய கூட்டணிக் கட்சிகள் எவையும் இல்லாத காரணத்தால், அவர்களும் பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   

எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்தடுத்துத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருப்பது ராகுல் தலைமை; ஆட்சியிலிருந்தபோது, மாநிலக் கட்சிகளைப் பழி வாங்கியது உள்ளிட்ட பல்வேறு விடயங்களால் காங்கிரஸுடன் அணி சேருவதற்கு, மாநிலக் கட்சிகள் தயங்கும் ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை காரணமாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமான களமாக இருக்கிறது.  

இந்தச் சாதகமான தேர்தல் களத்தைப் பயன்படுத்தி, பா.ஜ.க வேட்பாளர்களையே குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளுக்கு நியமித்து, வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உருவாகியிருக்கின்றன.   

பீஹாரில், லாலு பிரசாத் யாதவ் மீதான வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர்ச்சோதனைகள், அங்குள்ள முதலமைச்சர் நிதிஷ் குமாரை பா.ஜ.க எதிர்ப்பிலிருந்து பின் வாங்க வைத்திருக்கின்றன.  

“2019 இன் பிரதமர் பதவி வேட்பாளராக நான் இல்லை” என்று வெளிப்படையாக நிதிஷ்குமார் அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறார். அது மட்டுமின்றி, “தற்போது இருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையே மீண்டும் நியமிக்கலாம்” என்ற ஒரு கருத்தையும் முன் மொழிந்துள்ளார்.   

“இதற்கு வேறு கட்சிகளின் ஆதரவு இருக்கிறதோ, இல்லையோ பிரணாப் முகர்ஜி என்றால் நான் ஆதரிப்பேன்” என்ற கருத்தை முன் வைத்து, எதிர்க்கட்சிகளிடம் உருப்படியாக ஒரு வேட்பாளர் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்.  
பா.ஜ.கவின் இன்னொரு முக்கிய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் குறி வைக்கப்பட்டுள்ளது. அங்கு முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகக் களத்தில் நிற்கும் ஒய். எஸ். ஆர் ஜெகன்ரெட்டியை, பிரதமர் சந்தித்து இருக்கிறார்.   

அவர் சந்தித்தது மட்டுமின்றி, சந்திரபாபு நாயுடு அரசாங்கத்துக்கு எதிரான ஊழல்கள் குறித்த புத்தகம் ஒன்றையும் அவர், பிரதமருக்குப் பரிசளிக்க, அவரும் பெற்றுக் கொண்டிருக்கிறார்.   

பிரதமருடன், ஜெகனின் நெருக்கம் சந்திரபாபு நாயுடுவுக்கு தர்மசங்கடம் என்றாலும், பா.ஜ.கவை முறைத்துக் கொள்ள முடியாத நிலையில்தான் அவர் இருக்கிறார்.   

தமிழகத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் அ.தி.மு.கவில் உள்ள இரு அணி எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க எதிர்ப்பு என்பதைக் கனவில் கூட சிந்திக்க முடியாத கட்டத்தில் இருக்கின்றனர். போதாக்குறைக்கு, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீடுகள், அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் அலுவலகங்களில் சி.பி.ஐ திடீர்ச்சோதனைகள் எல்லாம், பா.ஜ.கவுக்கு எதிராக, வேறு எந்தக் கட்சிகளும் குடியரசுத் தலைவர் தேர்தலில் சென்று விடாமல் ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் சோதனைப் பாய்ச்சல்களாக இருக்கின்றன.   

ஆகவே, பா.ஜ.கவின் வேட்பாளரை எதிர்த்து வாக்களிக்கும் மாநிலக் கட்சிகள், மிகமிகக் குறைவாகவே இருக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், பா.ஜ.கவின் வேட்பாளரே குடியரசுத் தலைவராகும் சூழல் அதிகமாகவே இருக்கிறது.   
அக்கட்சிக்குள் அந்தப் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி மீது, பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை புதுப்பிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளர் அந்தஸ்து கிடைக்காது.   

இப்போது முதல் பட்டியலில் அடிபடும் பெயர்களான ஜார்கன்ட் மாநில ஆளுநர் திரௌபதி மர்மு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகஜன் போன்றோர், வேட்பாளர்களாக இருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு.   

பிரதமர் மோடியின் விருப்பப்படி ஒரு வேட்பாளர் பா.ஜ.கவிலிருந்து குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதற்கான களம்தான் இப்போதைக்கு அனைவர் கண்களுக்கும் காட்சியளிப்பதால், அந்த வேட்பாளர் பெயரை பிரதமர் இரகசியமாக வைத்திருப்பார் என்றே நம்பலாம். அதுவரை வேட்பாளர் யார் என்பது மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.  

எதிர்க்கட்சிகளின் சார்பில் மேற்குவங்க ஆளுநராக இருந்த கோபால கிருஷ்ண காந்தியை, (மகாத்மா காந்தியின் பேரன்) குடியரசுத் தலைவராக நிற்க வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதேபோல் பிரபல வழக்கறிஞர் பாலி நரிமன், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகின்றன.  

 இப்போதைக்கு கோபால கிருஷ்ண காந்திக்கு ஆதரவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி மட்டும் கருத்துக் கூறியிருக்கிறார். சோனியா காந்தியும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசனை செய்திருக்கின்றனர். ஆனால், யார் வேட்பாளர் என்பதில் இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை.   

காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தும் வேட்பாளரை மற்றக் கட்சிகள் ஆதரிக்கப் போகின்றனவா அல்லது மற்ற கட்சிகள் நிறுத்தும் வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்கப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து நிற்பதால், அக்கட்சியின் வேட்பாளர் முன்னிறுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.   

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒருமித்த ஒரு வேட்பாளரையோ அல்லது மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பாளரையோ ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் காங்கிரஸ் கட்சி இன்றைக்கு இருக்கிறது. சோனியா காந்தியின் உடல் நிலை சரியில்லாத இந்தச் சூழலில், அனைத்து எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து ஒரு முடிவை எடுக்கும் ஆளுமை, ராகுல் காந்தியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.   

இருந்தாலும், அது, இதுவரை வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை. பலவீனமான எதிர்க்கட்சிகள், பலமுள்ள பா.ஜ.கவுடன் மோதும் தேர்தலாக இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலும் அடுத்து வரப்போகின்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலும் அமையவிருக்கின்றன. இது குடியரசு தலைவர் தேர்தல் வரவாற்றில் மிக முக்கியமான திருப்பம்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக டொக்டர் ராஜேந்திரபிரசாத் தெரிவு செய்யப்பட்டார். 

அவருக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத முதல் வேட்பாளராகக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. அவருக்கு எதிராக வேட்பு மனு செய்த 36 பேர் தள்ளுபடி செய்யப்பட்டதால், நீலம் சஞ்சீவ ரெட்டி வாக்குப் பதிவு இல்லாமலேயே குடியரசுத் தலைவரானார்.   

இந்திய குடியரசுத் தலைவர்களில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றவர், 1997 முதல் 2002 வரை குடியரசுத் தலைவராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஆர் நாராயணன்தான். ஆனால், இப்போது நடக்கப் போகும் 14 ஆவது குடியரசுத் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தினால் தவிர, போட்டியில்லாத தேர்தலாகவே அமையும்.   

அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியின் நேரடித் தெரிவில் போட்டிக்கு வரும் வேட்பாளர் குடியரசுத் தலைவராகவும் துணைக் குடியரசுத் தலைவராகவும் வெற்றி பெறுவார்கள் என்பதும், சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலில், எந்தச் செல்வாக்கும் இல்லாமல் திண்டாட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிற்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X