2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

60க்கும் மேற்பட்ட முறைகள் பேயோட்டப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த கன்னிப்பெண்

Editorial   / 2018 மார்ச் 27 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 50 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இளம்பெண், அவரின் பெற்றோர்களின் மூட நம்பிக்கையால், பரிதாபமாக மரணத்தை தழுவி, உலகையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் பற்றி தான் இங்கு பார்க்கப் போகின்றோம்.

எமிலி என்று அழைக்கப்பட்ட இந்த பெண்ணின் இயற்பெயர் அன்னலிஸ் எலிசபெத் மிஷல். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர், 1952ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி பிறந்தார். ஆரம்பத்தில் மற்ற பிள்ளைகள் போன்றே சாதாரணமாக இருந்த இவர், வளர, வளர வித்தியாசமாக நடந்துகொள்ளத் துவங்கினார். எமிலியின் குடும்பத்தார் கடுமையான மதவழிபாட்​டைப் பின்பற்றி வந்தவர்கள். என்ன நடந்தாலும், வழிபாட்டு முறைகளில் மட்டும் எந்த த​வறையும் செய்ய முற்பட மாட்டார்கள்.

தங்கள் மதத்தில் கூறப்பட்டிருந்த ஒவ்வொரு விஷயத்தையும் நூறு மடங்கு நம்பி வந்தனர். ஒருவர் செய்த பாவத்திற்கு பரிகாரமாக வாழ்க்கையில் அவதிபட வேண்டும் என்றும் நம்பி வந்தனர். அவர்களின் அந்த மதப்பற்று, காலப்போக்கில் மதவெறியாக மாறியதாலோ என்னவோ, அவர்களின் செல்லப் பிள்ளை எமிலி அநியாயமாக உயிரிழக்க நேர்ந்தது.

இப்படியாக மத நம்பிக்கை காரணங்களால், எமிலி குடும்பத்தார் கடுங்குளிர் காலத்திலும் வெறும் தரையில் படுத்து உறங்கும் வழக்கத்தை பின்பற்றி வந்தனர். அப்போது தான் எமிலிக்கு தனது பதின்ம வயதில் ஒருமுறை திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. மருத்துவர்கள் எமிலிக்கு வந்திருப்பது வலிப்பு நோய் தான் என்றும், இதன் பக்கவிளைவுகளாக, இவருக்கு மாயத்தோற்றம் (Hallucination) மற்றும் திடீர் மனநிலை மாற்றங்கள் (Mood Swings) ஏற்படும் என்றும் கூறினார்கள். ஆனால், ஒருக்கட்டத்தில் எமிலியின் வலிப்பு மிகவும் அதிகரிக்க துவங்கவே, அவளை மனநல மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர் எமிலியின் பெற்றோர்.

அந்த காலக்கட்டத்தில் தான் எமிலி தன்னை சுற்றி சில சமயங்களில் பேய் உருவ தோற்றங்கள் போன்ற பிம்பங்களை காண துவங்குகிறார். இது அவருக்குள் அச்சம் மற்றும் பதட்டம் அதிகரிக்கக் காரணமாக அமைகிறது. மேலும் எமிலி, தான் காணும் பேய் போன்ற உருவங்கள், தான் நரகத்திற்குச் செல்ல சபிக்கப்பட்டவள் என்று கூறுவதாக சொல்ல ஆரம்பிக்கிறார்.

எமிலிக்கு நாளுக்கு நாள் பேய் பயம் அதிகரித்து, அவரை வாட்டத் தொடங்குகிறது. தன்னைச்சுற்றி எப்போதும் அமானுஷ்யங்களும், பேய் பிசாசுகளும் இருப்பதாகவே தனக்குள் பதித்துக்கொள்கிறார். உறக்கமில்லாமல் தவிக்கிறார். தனக்கு தானே ஏதேதோ பேசிக்கொள்ளும் எமிலிக்கு என்ன நடந்தது என்பதை அவர் பெற்றோரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நாட்கள் செல்ல செல்ல எமிலியின் மனநிலையில் மட்டுமல்லாமல், உடல்நிலையிலும் மாற்றங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன. மிகவும் உடல்நலம் குன்றி போன எமிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இருப்பது ஒருவகையான மனநோய் தான் என்று கூறி, மனநோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால், அந்த மருந்துகளால் அவருக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனதோடு, அவருக்கு மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. தொடர்ந்து எமிலி, தன்னைத் தானே தனிமைப் படுத்தத் தொடங்குகிறார். அவரின் அதீத மனவுளைச்சல் அவரை தற்கொலைக்கும் தூண்டத் தொடங்குகின்றது. இருப்பினும், தனது மதத்தில் தற்கொலை என்பது மன்னிக்க முடியாத பாவம் என்பதை அறிந்த எமிலி, தற்கொலை முடிவை கைவிடுகிறார்.

நாளடைவில் ஒரு வட்டத்திற்குள் அடைப்பட்ட எமிலி, சாத்தான் விரைவில் தன்னை வேட்டையாடிவிடும் என்று அஞ்சுகிறார். எமிலியின் நிலை எல்லை மீறுவதை உணர்ந்த மருத்துவர்கள், அவருக்கு பல்வேறு மருந்துகள் கொடுத்து அவரை குணமாக முயல்கிறார்கள். ஆனால், அவரின் வலிப்பு நோயும், மாயத் தோற்ற பேய்களும் மட்டுமே எமிலியை சுற்றி தொடர்கின்றன.

நவீன அறிவியல் மருத்துவம் தங்கள் குழந்தையை கைவிட்டதாக கருதிய எமிலியின் பெற்றோர், அவரை தங்கள் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, போதகர் எர்னஸ்ட் ஆல்ட் என்பவரிடம் ஒப்படைக்கின்றன​ர். அவரோ, எமிலிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அவர் பேய்கள் வசமிருந்து வெளிவர வேண்டும் எனக் கூறி பல அருவருக்கத்தக்க விஷயங்களை செய்கிறார். எமிலியின் பெற்றோரும் அவருக்கு ஆதரவாகவே செயற்படுகிறார்கள்.

அந்த போதகரோ, பேய்கள் எமிலியின் உயிரை ஆட்கொள்ள பார்க்கின்றன என்றும், ஏற்கனவே அவளது உடலை ஆட்கொண்டுவிட்டன என்றும் கூறி ஒரே வருடத்தில், எமிலிக்கு 60க்கும் மேற்பட்ட தடவைகள் பேயோட்டும் நிகழ்வை நடத்துகிறா​ர். வாரத்தில் இரண்டு முறை போதகரும், எமிலியின் அப்பாவும் அவரை சங்கிலியில் கட்டிப்போட்டு பேயோட்டும் நிகழ்வை துவக்கிவிடுவார்கள். எல்லா பேயோட்டும் நிகழ்வுகளையும் காணொளியாகவும் பதிவு செய்துகொள்கிறார்கள்.

எமிலியும் கொஞ்ச நாள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல துவங்குகிறார். ஆனால், இது அவருக்கு கடைசி வரை பலனிக்கவில்லை. 1976இல் எமிலிக்கு மீண்டும் வலிப்பு அதிகரித்தது. அப்போது மிக மோசமான அளவில் வலிப்பு ஏற்பட்டது. தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அடிக்கவும், அவர்களை கடித்து, நகங்களால் கீறவும் ஆரம்பித்தார் எமிலி. யாரும் இல்லாத தருணத்தில், தன்னைத்தானே தாக்கிக் கொள்ளவும்  செய்கிறார். சுவற்றில் தானே எகிறி குதித்து முட்டியுக் கொள்வதோடு, உணவருந்தவும் மறுக்கிறார்.

சாத்தான் தன்னை விடாது என்று கூறி, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்கிறார். இதனால், எமிலியின் முட்டி உடைந்து வலுவிழந்து போகிறது. உணவருந்தாமல் இருந்ததாலும், நிமோனியா மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாலும் எமிலி உடல் மெலிந்து, அடையாளமே மாறி போனார். அவரது பெற்றோரால் எமிலியை காண இயலவில்லை. மிகவும் வருந்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட நாற்பது கிலோவுக்கும் கீழே சென்றது எமிலியின் உடல் எடை. ஆயினும், அந்த போதகர் எமிலிக்கு பேயோட்டம் செய்வதை மட்டும் நிறுத்தவில்லை. இந்த நிலையிலும் எமிலியின் பெற்றோர் அவருக்கு பேய் தான் பிடித்திருக்கிறது என்ற மூடநம்பிக்கையில் இருந்து வெளிவரவில்லை. அவர்கள் மருத்துவ பரிசோதனையை மீண்டும் தொடர மறுத்தனர்.

எமிலிக்கு கடைசியாக பேயோட்டம் நடந்தது 1976ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 30ஆம் திகதி ஆகும். எமிலி மிகவும் வலுவிழந்து காணப்பட்டார். அப்போது போதகரின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த எமிலியின் கண்கள் முழுக்க கண்ணீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தன. தனது அம்மாவை திரும்பி பார்த்து, “அம்மா, நான் பயந்து போய் இருக்கிறேன்” என மெல்லிய குரலில் முணுமுணுத்தார். அதன் பிறகு சில நாட்களிலேயே எமிலி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.

எமிலியின் மரணம் சமூகத்தில் ஒரு பரபரப்பை உண்டாக்கியது. நீதிமன்றத்தில் எமிலியின் வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் எமிலி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாள், அவளுக்கு பேய் எல்லாம் பிடிக்கவில்லை என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து கூறினர். இறுதியில், நீதிபதி எமிலியின் பெற்றோர் மற்றும் போதகர் தான் எமிலியின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி, அவர்களுக்கு ஆறு மாதம் காலம் சிறை தண்டனை விதித்தார்.

இந்த வழக்கில் மனநல பாதிப்பை தவறாகப் புரிந்துக் கொண்டு மத வழியை பின்பற்றுகிறோம் என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணை சித்திரவதை செய்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இன்று எமிலி என்கிற அன்னலிஸ் மிஷலின் கல்லறை, உலகம் முழுவதும் இருக்கும் மதவெறியர்களுக்கு ஓர் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம், பின்னாளில் திரைப்படமாகவும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .