2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவின் அடுத்த பயிற்சியாளர் யார்?

Shanmugan Murugavel   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததிலிருந்து அடுத்த பயிற்சியாளருக்கான தேடல்கள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கின்றன.

குறித்த போட்டியைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி அடுத்து பங்கேற்கவுள்ள தொடர் இவ்வாண்டு ஜூன் மாதமே இடம்பெறவிருக்கின்ற நிலையில் உடனடியாக பயிற்சியாளரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லாததால், இதற்கான காலத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எடுத்துக் கொண்டு, அணியின் பெறுபேறு, அணியின் கலாசாரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அடுத்த பயிற்சியாளரை தெரிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், டரன் லீமனைப் பிரதியீடு செய்யக் கூடியவர்களில் முதன்மையானவராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் காணப்படுகின்றார். அவுஸ்திரேலிய அணியின் கலாசாரம் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், குறிப்பிடத்தக்களவு கடும் போக்கானவராக அறியப்படும் ஜஸ்டின் லாங்கர், அவுஸ்திரேலிய அணியின் கலாசாரத்தைக் கட்டமைக்கக் கூடியவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கான 2016ஆம் ஆண்டு சுற்றுப் பயணத்தின்போது டரன் லீமன் செல்லாத நிலையில் அவரைப் பிரதியீடு செய்த ஜஸ்டின் லாங்கர், மேற்கு அவுஸ்திரேலிய மாநில, பேர்த் ஸ்றோச்சர்ஸ் அணியின் பயிற்சியாளராகவிருக்கின்றார். இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகுமிடத்து ஆண்டின் பெரும்பாலான பகுதியை அணியுடன் செலவளிக்க வேண்டியிருக்குமென்ற நிலையில், மேற்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் தனது இளம் குடும்பத்தை விட்டுச் செல்வது குறித்து அவர் ஆராய்கின்றார்.

இந்நிலையில், ஜஸ்டின் லாங்கரைத் தொடர்ந்து டரன் லீமனைப் பிரதியீடு செய்யக் கூடிய பிரதானமவராக அவுஸ்திரேலியாவின் இன்னொரு முன்னாள் வீரர் ஜேஸன் கிலெஸ்பி காணப்படுகின்றார். இங்கிலாந்து கவுண்டி அணியான சசெக்ஸின் பயிற்சியாளரகவிருக்கும் ஜேஸன் கிலெஸ்பி, யோர்க்‌ஷையர் கவுண்டி அணியின் பயிற்சியாளரகவிருந்தபோது அவ்வணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். அந்தவகையில், அடுத்த உலகக் கிண்ணமும் ஆஷஸ் தொடரும் இங்கிலாந்திலேயே அடுத்தாண்டு இடம்பெறவுள்ள நிலையில், இங்கிலாந்து நிலைமைகளையறிந்த ஜேஸன் கிலெஸ்பி அவுஸ்திரேலிய அணிக்கு பொருத்தமானவராகக் காணப்படுகின்றார்.

இதேவேளை, அடுத்தாண்டு ஆஷஸ் தொடருடனேயே பயிற்சியாளர் பதவியிலிருந்து டரன் லீமன் முன்னர் விலகவிருந்த நிலையில், அப்போது அவரைப் பிரதியீடு செய்பவர்களில் முதன்மையாவராக ஜஸ்டின் லாங்கர் காணப்பட்டிருந்தபோதும் பிற்பட்ட காலங்களில் ஜஸ்டின் லாங்கரை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொன்டிங் முந்தியிருந்தார் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், முழுநேரப் பயிற்சியாளராவதற்கான விருப்பத்தை முன்னர் வெளிப்படுத்தியிருக்காத ரிக்கி பொன்டிங், இருபதுக்கு – 20 சர்வதேச அணியின் பயிற்சியாளராவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்தவகையில், வீரர்களுடன் சகஜமாகப் பழகுபவராக அறியப்படும் ரிக்கி பொன்டிங், அடுத்தாண்டு இடம்பெறவிருக்கின்ற உலகக் கிண்ணத்தை கருத்திற் கொண்டு பயிற்சியாளராக நியமிக்கப்படலாமென்று கூறப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்தில், மேற்குறிப்பிட்டவர்களே பிரதானமாக டரன் லீமனைப் பிரதியீடு செய்யப்படக்கூடியவர்களாகக் காணப்படுகின்ற நிலையில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களான பிரட் ஹடின், கிறிஸ் ரொஜர்ஸ் ஆகியோரும் பயிற்சியாளராக நியமிக்கப்படும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றதோடு, அவுஸ்திரேலியாவின் தற்போதைய பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளரான டேவிட் சாகர், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோரும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .