2020 ஜூன் 04, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2019 மே 24 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில், தொடரை நடாத்தும் நாடான இங்கிலாந்தை இப்பத்தி நோக்குகின்றது.

கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடாக இங்கிலாந்து காணப்படுகின்றபோதும், இதுவரையிலும் உலகக் கிண்ணத் தொடரில் சம்பியனாகியிருக்கவில்லை. மூன்று முறை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இங்கிலாந்து, இரண்டு தடவைகள் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியிருக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷிடம் தோல்வியடைந்து குழுநிலைப் போட்டிகளுடன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட இங்கிலாந்து, அண்மைய கால உலகக் கிண்ணத் தொடர்களில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

இந்நிலையில், தொடரை நடத்தும் நாடு என்ற சாதகத்துக்கு மேலாக, உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக இந்த உலகக் கிண்ணத் தொடர் காணப்படுகிறது.

ஏனெனில், கடந்த உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் தமது ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய இங்கிலாந்து, ஒய்ன் மோர்கனின் தலைமையின் கீழ் நான்கு ஓட்டங்களும், ஆறு ஓட்டங்களுமாக ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடத்துக்கு உயர்ந்துள்ளது.

கடந்த உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து வேறெந்த அணிகளும் கொண்டிருக்காதளவுக்கு ஓவருக்கு 6.29 ஓட்டங்கள் என்ற வகையில் ஓட்டங்களைக் குவித்துள்ள இங்கிலாந்து, தாம் விளையாடிய 88 போட்டிகளில் 38 தடவைகள் 300க்கும் மேல் ஓட்டங்களைக் குவித்துள்ளது. இரண்டாமிடத்திலிருக்கும் இந்தியா 16 தடவைகள் குறைவாக 22 தடவைகளே 300 ஓட்டங்களைத் தாண்டியுள்ளது.

அந்தவகையில், இங்கிலாந்தின் குறித்த அதிரடிப் பாணிக்கு முக்கியமானவராக ஒய்ன் மோர்கன் காணப்படுவதுடன், தலைமைப் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பெய்லிஸுடன் இணைந்து அணியைக் கட்டமைத்துள்ளார்.

அந்தவகையில், ஜேஸன் றோய், ஜொனி பெயார்ஸ்டோ மூலமாக அதிரடி ஆரம்பத்தைப் பெறுகின்ற இங்கிலாந்து, ஜோ றூட், ஒய்ன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் என இனிங்ஸை கட்டமைக்கக்கூடிய அதேவேளை அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக்கூடிய பலமான துடுப்பாட்டவரிசையைக் கொண்டிருக்கின்றது.

எவ்வாறெனினும், இவ்வாறாக அதிரடியாக ஓட்டக் குவிப்பில் ஈடுபடும் இங்கிலாந்தின் பலவீனமாக பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் துடுப்பெடுத்தாடுவது காணப்படுகின்றது. இதற்கு சிறந்த உதாரணம், கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கெதிரான சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டி ஆகும்.

குறித்த தொடரின் அரையிறுதிப் போட்டி வரையும் தமது தற்கால அதிரடியான பாணியைப் பின்பற்றி முன்னேறி வந்த இங்கிலாந்து, மெதுவாகக் காணப்பட்ட அந்த ஆடுகளத்தில் பாகிஸ்தானிடம் மண்டியிட்டிருந்தது. ஆக, முக்கியமான போட்டியொன்றின் அழுத்தம், கூறப்பட்டவாறான ஆடுகளம் என்பன இங்கிலாந்தின் பிரச்சினைக்குரிய விடயங்களாக இருக்கின்றபோதும், இந்த உலகக் கிண்ணத் தொடரின் ஏனைய அணிகளைப் பற்றியதான தனது பார்வையில் இப்பத்தியாளர் கூறியது போல, இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான ஆடுகளங்கள் தட்டையானதாக, துடுப்பாட்டவீரர்களின் ஓட்டக் குவிப்புக்குச் சாதமானதாக இருக்கும் எனக் கருதப்படுகின்ற நிலையில் குறித விடயம் இம்முறை இங்கிலாந்துக்கு ஒரு பிரச்சினையாகக் காணப்படாதென்றே கருதப்படுகிறது.

இவ்வாறாக இங்கிலாந்தின் துடுப்பாட்டம் இருக்கையில், இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க போன்ற அணிகளின் பந்துவீச்சுக் குழாம்களைப் போல பலமானதாக இங்கிலாந்தின் பந்துவீச்சுக் குழாம் தென்படாதபோதும், விக்கெட்டுகளைக் கைப்பற்றக்குடிய பந்துவீச்சுக் குழாமாக இங்கிலாந்தின் பந்துவீச்சுக் குழாம் காணப்படுகிறது.

அந்தவகையில், இனிங்ஸின் மத்தியபகுதியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கான ஒய்ன் மோர்கனின் பிரதான துருப்புச்சீட்டாக புறச்சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷீட் காணப்படுகின்றார். ஆக, இவரின் பெறுபேற்றிலேயே இங்கிலாந்தின் பெறுபேறுகளும் தங்கியுள்ளதெனக் குறிப்பிட்டால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

இந்நிலையில், அடில் ரஷீட் தவிர இனிங்ஸின் மத்தியபகுதியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு இங்கிலாந்து தங்கியிருக்கக்கூடியவராக லியம் பிளங்கெட் காணப்படுவதோடு, மிகவும் வேகமாகப் பந்துவீசும் ஜொவ்ரா ஆர்ச்சரை குழாமில் இணைத்துக் கொண்டதன் மூலம் மேலும் பலமானதாக இங்கிலாந்து மாறுகின்றது. ஜொவ்ரா ஆர்ச்சரும், மார்க் வூட்டும் தமது முழு வேகத்தில் பந்துவீசுவது எதிரணிகளுக்கு நிச்சயம் சிம்ம சொப்பனமாக அமையும். இதுதவிர, பந்து ஸ்விங் ஆகும் சந்தர்ப்பங்களில் ஆபத்தானவராக கிறிஸ் வோக்ஸ் காணப்படுகின்றார்.

அந்தவகையில், இங்கிலாந்து தொடர்பான எதிர்பார்ப்புகள் இந்த உலகக் கிண்ணத் தொடரின்போது அதியுச்சமாகக் காணப்படுகின்ற நிலையில், ஆகக்குறைந்தது இறுதிப் போட்டி வரையான இங்கிலாந்தின் பயணம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டியில், இலண்டனில் இலங்கை நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு தென்னாபிரிக்காவை எதிர்கொள்வதன் மூலம் தமது உலகக் கிண்ணத் தொடரை இங்கிலாந்து ஆரம்பிக்கின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X