2020 மே 25, திங்கட்கிழமை

தென்னாபிரிக்காவில் கர்ஜித்தன கத்துக்குட்டிகள்

Gopikrishna Kanagalingam   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பிக்கும் போது, சர்வதேசப் போட்டியொன்றில் வெற்றியைப் பெற்று, 3 மாதங்களும் 21 நாள்களும், அதாவது 113 நாள்களாகியிருந்தன; டெஸ்ட் போட்டியில் இறுதியாக வென்று, 199 நாள்களாகியிருந்தன; அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கெதிராக, அவர்களின் சொந்த மைதானத்தில் வைத்து டெஸ்ட் போட்டியொன்றை இலங்கை வென்று, 495 நாள்களாகியிருந்தன.

ஆனால், அடுத்த இரு வாரங்களுக்குள், தென்னாபிரிக்காவில் வைத்து 2 டெஸ்ட் போட்டிகளை வென்று, தென்னாபிரிக்காவில் வைத்து டெஸ்ட் தொடரொன்றை வென்ற முதலாவது ஆசிய நாடாக, இலங்கை மாறியிருக்கிறது. மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிச் சாதிக்க முடியாத விடயத்தை, கத்துக்குட்டிகள் சாதித்திருக்கிறார்கள்.

கத்துக்குட்டிகள் என்று சொல்வது, இவ்வணியைத் தரந்தாழ்த்துவதற்காகக் கிடையாது. ஆனால், டெஸ்ட் அணியின் தலைவராக இருந்தவர், அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்; அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்த முன்னாள் தலைவர், காயம் காரணமாக இத்தொடரில் பங்குபற்றியிருக்கவில்லை; இத்தொடரில் பந்துவீச்சாளர்களாகக் களமிறங்கிய 4 பேரில் மூவரும் விளையாடிய மொத்த டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 7; துடுப்பாட்ட வரிசையில் அதிகபட்ச சராசரியாகக் காணப்பட்டது, வெறுமனே 36.62 என்ற சராசரி. இவற்றையும் தாண்டி, பலமிக்க தென்னாபிரிக்க அணியை வெல்தென்பது சாதாரணம் கிடையாது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1992ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்க அணி பங்குபற்ற ஆரம்பித்த பின்னர், தமது நாட்டில் வைத்து 137 டெஸ்ட் போட்டிகளில் அவ்வணி விளையாடி, அவற்றில் 81 போட்டிகளில் வெற்றிபெற்றதோடு, வெறுமனே 30 போட்டிகளில் மாத்திரம் தோல்வியடைந்திருக்கிறது. அதிலும், அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளைத் தவிர்த்துப் பார்த்தால், இப்போட்டிக்கு முன்னதாக, 88 போட்டிகளில் 66 போட்டிகளில் தென்னாபிரிக்கா வென்றதோடு, வெறுமனே 8 போட்டிகளில் மாத்திரம் தோல்வியடைந்திருந்தது. இப்படியான அணியை, இவ்வளவு மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்திவந்த இலங்கை வெல்வதென்பது சாதாரணமானது.

இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரை, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றமை, எப்போதுமே உச்சநிலை நிகழ்வாக இருக்கும். உலகக் கிண்ண வெற்றியென்பது ஒரு பக்கமாகவிருக்க, சர்வதேசப் போட்டிகளில் இலங்கையின் வருகையை உலகுக்கு அறிவித்து, இலங்கையின் கிரிக்கெட்டின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அவ்வெற்றி காணப்படுகிறது. அதன் பின்னர், முக்கியமான பல அடைவுகளை இலங்கை அடைந்திருக்கிறது. ஆனால், 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண வெற்றிக்குப் பின்னதாக, இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய உச்சமாக, இந்த டெஸ்ட் தொடர் வெற்றி அமைந்திருக்கிறது.

இத்தொடரில் எல்லாத் தருணங்களிலும், இலங்கையால் ஆதிக்கம் செலுத்த முடிந்திருக்கவில்லை. இரண்டு போட்டிகளிலும், இலங்கையின் முதல் இனிங்ஸ் துடுப்பாட்டம் மோசமாக அமைந்தது. ஆனால், போட்டியின் நான்காவது இனிங்ஸில் இலங்கை துடுப்பெடுத்தாடும் போது, அதை ஈடுசெய்திருந்தது. முதலாவது போட்டியில், தனித்து நின்று போராடிய குசல் பெரேராவின் அற்புதமான துடுப்பாட்டம், இலங்கைக்கான வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தது. ஆனால், 304 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடும் போது, 110 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிக் கொண்டிருந்த போது, தனஞ்சய டி சில்வா பெற்றுக்கொடுத்த 48 ஓட்டங்களும் மிக முக்கியமானவை. இரண்டாவது போட்டியில், 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, 2 விக்கெட்டுகளை இழந்து 34 ஓட்டங்களுடன் இலங்கை தடுமாறியது. அப்போது தான், இத்தொடரில் 12, 0, 16 ஓட்டங்களை இதற்கு முன்னைய 3 இனிங்ஸ்களிலும் பெற்றிருந்த குசல் மென்டிஸும், 19, 37, 0 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஓஷட பெர்ணான்டோவும் இணைந்து, பிரிக்கப்படாத 163 ஓட்டங்களைப் பகிர்ந்து இவ்வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இத்தொடரின் இரு போட்டிகளிலும், இலங்கை அணி 4ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்றதால், கவனம் முழுவதும் துடுப்பாட்ட வீரர்கள் மீது காணப்படுவது வழக்கமானது. அதைப் போன்று தான், இத்தொடரின் போட்டியின் நாயகன் விருதுகள் இரண்டையும், தொடரின் நாயகன் விருதையும், இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களே வென்றிருந்தனர். ஆனால், இத்தொடரின் உண்மையான நாயகர்களாக, இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்களே அமைந்தனர்.

தனது 4ஆவது, 5ஆவது போட்டிகளில் விளையாடிய விஷ்வ பெர்ணான்டோ, 1ஆவது டெஸ்டில் அவரது இறுதிநேரத் துடுப்பாட்டத்துக்காகவே நினைவுகூரப்படுவார் என்றாலும், இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவரே. இரண்டு போட்டிகளில் 18.91 என்ற சராசரியில் 12 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார். அதேபோல், தனது 5ஆவது, 6ஆவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கசுன் ராஜித, 23.22 என்ற சராசரியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இத்தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியோரின் பட்டியலில் 2ஆவது இடம் இவருக்கே.

எதிரணியின் பந்துவீச்சு வரிசையில், உலகின் முதல்நிலை டெஸ்ட் பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா, உலகில் தோன்றிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் டேல் ஸ்டெய்ன், தனது முதல் 8 டெஸ்ட் போட்டிகளிலும் 18.19 என்ற சராசரியில் 41 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த டுவைன் ஒலிவியர், தனது சொந்த நாட்டில் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 18.65 என்ற சராசரியில் 138 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்ற வேர்ணன் பிலாந்தர் ஆகியோர் காணப்படும் போது, இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்களின் இந்தப் பெறுபேறுகள் மெச்சத் தக்கன.

ஆனால் இவ்வெற்றியென்பது, இலங்கையின் கிரிக்கெட்டில் காணப்படும் முழுப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடாது. இலங்கையின் துடுப்பாட்டம், இன்னமும் தடுமாற்றத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது; இலங்கையின் பந்துவீச்சுக்குப் போதிய அனுபவமில்லாத நிலைமை காணப்படுகிறது; இலங்கை கிரிக்கெட் சபையில் குழப்பங்களும் கூச்சல்களும் தொடர்கின்றன. ஆனால், வெற்றிக்கான வழியொன்றை இலங்கை கண்டுபிடித்திருக்கிறது. இவ்வெற்றியைப் பயன்படுத்தி, பலமான அணியொன்றைக் கட்டியெழுப்புவதில் தான், எதிர்காலத்தில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுமென்பதை மறந்துவிடக்கூடாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X