2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆஷஸ்: எவ்வாறு இங்கிலாந்து தோற்றது?

Shanmugan Murugavel   / 2018 ஜனவரி 11 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் 4-0 என அவுஸ்திரேலியா வென்றுள்ளது.

அந்தவகையில் இந்த ஆஷஸ் தொடரில் மைதானத்துக்கு வெளியே இடம்பெற்ற சம்பவங்களால் சிக்கல்களை எதிர்நோக்கிய இங்கிலாந்து, மைதானத்துக்குள்ளும் அவுஸ்திரேலியாவில் வைத்து அவுஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்கு போதுமான மட்டத்தில் இல்லை என்பதை வெளிக்காட்டியிருந்தது.

ஆஷஸின் சில தருணங்களில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்தாலும் முக்கியமான தருணங்களை அவுஸ்திரேலியாவுக்கு ஆஷஸை தாரை வார்த்திருந்தது.

ஒழுக்காற்று பிரச்சினை காரணமாக இந்த ஆஷஸ் ஆரம்பிப்பதற்கு முன்னரே பென் ஸ்டோக்ஸை இழந்திருந்த இங்கிலாந்துக்கு, அண்மைய போட்டிகளில் சகலதுறையில் பிரகாசித்த மொயின் அலி இந்த ஆஷஸில் இங்கிலாந்துக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் முற்றிலுமாக சொதப்பியிருந்தார். துடுப்பாட்டத்தில் மிகவும் நம்பிக்கையிழந்தவராகக் காணப்பட்ட மொயின் அலி, பந்துவீச்சில் அதை விட இன்னும் மோசமாக, ஆகக் குறைந்தது ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாதவராகக் காணப்பட்டார். மொயின் அலியின் இந்தப் பெறுபேறுகள் மூலமாக, வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து வெல்வதற்கு முழுமையான சுழற்பந்துவீச்சாளரொருவரை தேடுவதற்கு அவசியமானதொன்று என வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அடுத்து, அணியின் சிரேஷ்ட வீரரான அலிஸ்டயர் குக், அண்மைக் காலங்களில் பெரிதாக ஓட்டங்களைப் பெறாத நிலையில், இங்கிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த அனுபவமிக்கவராக இருந்தபோதும் சொதப்பியிருந்தார். ஆஷஸை மூன்றாவது போட்டியில் இழந்த பின்னர், மிற்செல் ஸ்டார்க் இல்லாததுடன் சர்வதேச கிரிக்கெட் சபையால் மோசாமானது எனக் குறிப்பிடப்பட்ட மெதுவான மெல்பேண் ஆடுகளத்தில் இரட்டைச் சதத்தைப் பெற்றிருந்தபோதும் அது எதற்கும் உதவியிருக்கவில்லை.

இதேவேளை, கடந்த காலங்களில் ஓட்டங்களைப் பெற்றிருக்காதபோதும் அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் ஓட்டங்களைப் பெறுவார் என தேர்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ், ஒவ்வொரு இனிங்ஸிலும் ஆரம்பத்தைப் பெறுவதும் பிறகு ஆட்டமிழப்பதுமாக இருந்தார். இனிவரும் காலங்களில் இங்கிலாந்து அணியில் இவர் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதொன்றாகவே காணப்படுகிறது.

அடுத்து, ஓரளவுக்கு சிறப்பாக ஆரம்பித்த இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மார்க் ஸ்டோன்மன், மூன்றாவது போட்டியில் தொடர்ச்சியாக எழும்பி வரும் பந்துகளை எதிர்கொண்டு திணறியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த இனிங்ஸ்களில் குறைவான ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழந்திருந்தார். எனினும், அடுத்துவரும் நியூசிலாந்து தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த முறை ஆஷஸுக்காக வந்த இங்கிலாந்து அணி நம்பிக்கை இழந்தது போல் நடக்காமல் சிறப்பாக அணித்தலைவராக செயற்பட்ட ஜோ றூட், துடுப்பாட்டத்தில் ஓரளவுக்கு ஓட்டங்களைப் பெற்றபோதும் பெற்ற அரைச்சதங்களை சதங்களாகவே அல்லது 150க்கு மேற்பட்ட ஓட்டங்களாகவே மாற்றி போட்டியில் தாக்கம் செலுத்துமளவுக்கு மாற்றாதது குறையாகவே காணப்பட்டது.

இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ, அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கமரோன் பன்குரோப்டை ஆஷஸ் சுற்றுப் பயணத்தின் முதல்நாளில் தலையால் முட்டியதன் விளைவுகளை எதிர்கொண்டிருந்தார். எனினும், முதலிரண்டு போட்டிகளிலும் ஏழாமிடத்தில் களமிறக்கப்பட்டதால் சொல்லிக் கொள்ளும்படியாக ஓட்டங்களைப் பெற்றிருக்காதபோதும் மூன்றாவது போட்டியில் ஆறாமிடத்தில் களமிறங்கி சதம் பெற்றிருந்தார். எவ்வாறெனினும் இவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட ஓட்டங்களை இவர் பெற்றிருக்கவில்லை.

இவ்வாறாக இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசையில் அனைத்துமே ஏதோவொரு வகையில் குறையாகவே இருக்க, மிளிருக் ஒளிக்கீற்றாக டேவிட் மலன் காணப்படுகின்றார். மூன்றாவது போட்டியில் சதமும் அரைச்சதமும் பெற்றதுடன் பின்னரும் நம்பிக்கையளித்திருந்தார்.

பந்துவீச்சுப் பக்கம், சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் குறைவான வேகத்தைக் கொண்டிருந்தபோதும் கட்டுக்கோப்பாக தொடர் முழுவதும் பந்துவீசியிருந்தார். எனினும் மற்றைய சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட்டும் குறைவான வேகம் காரணமாக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்க முடியவில்லை. இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களில் வேகமானவராக கிறிஸ் வோக்ஸ் இருந்தபோதும் இவரின் பந்துவீச்சுப்பாணி அவுஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு ஒத்ததாகக் காணப்பட்டிருக்கவில்லை. பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்துக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய ஒருவராக கிரெய்க் ஒவெர்ட்டனே விளங்கியபோதும் காயம் காரணமாக இறுதி இரண்டு போட்டிகளையும் அவர் தவறவிட்டிருந்தார்.

மறுபக்கம், உலகில் தோன்றிய தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களிலொருவராகக் கருதப்படும் டொன் பிரட்மனுடன் ஒப்பிடுமளவுக்கு மிகச் சிறப்பாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் துடுப்பெடுத்தாடியிருந்தார். இவரின் விக்கெட்டைக் கைப்பற்றுவது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்திருந்தது. அணித்தலைவராக, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பொலோ ஒன் வழங்காதது விமர்சனங்களைச் சந்தித்தபோதும் தனது பந்துவீச்சாளர்களை மிகச் சிறப்பாகக் கையாண்டிருந்தார்.

அடுத்து, மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், பற் கமின்ஸ் அச்சுறுத்தக்கூடிய வேகப்பந்துவீச்சுக் குழாமை அவுஸ்திரேலிய அணி கொண்டிருந்தபோதும் அவர்கள் அந்தவகையில் செயற்பட சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையனே அனுமதித்திருந்தார். தேவைப்படும் நேரங்களில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி தொடர்ந்து பந்துவீசிய நேதன் லையன், சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளையும் கைப்பற்றி அவுஸ்திரேலிய அணியின் முக்கியமானவராக விளங்கியிருந்தார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த ஆஷஸில் மிற்செல் ஜோன்சன் ஆற்றிய வகிபாகத்தை ஏறத்தாழ மிற்செல் ஸ்டார்க் ஆற்றியபோதும் காயங்களால் போட்டிகளைத் தவறவிட்டிருந்த பற் கமின்ஸ் தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் விளையாடியதுடன், முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி போட்டிகளின் போக்கை மாற்றியிருந்தார். இதுதவிர, மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ் ஆகியோரே வேகமாக பந்துவீசுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல என்ற ரீதியில் வேகமாக பந்துவீசியிருந்த ஜொஷ் ஹேசில்வூட் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறியிருந்தபோதும் பின்னர் விக்கெட்டுகளைக் கைப்பற்றிருந்தார்.

துடுப்பாட்டப் பக்கம், ஸ்டீவ் ஸ்மித்துக்கு அடுத்ததாக, மத்தியவரிசையில் ஷோர்ன் மார்ஷ் ஓட்டங்களைக் குவித்திருந்தார். ஷோர்ன் மார்ஷ் குழாமில் தெரிவுசெய்யப்படும்போது, இளம் வீரர்களை விட்டு இவர் ஏன் தெரிவு செய்யப்படுகின்றார் எனக் கேள்விகள் எழுப்பப்பட்டபோதும் அக்கேள்விகளுக்கான பதிலை தனது துடுப்பாலேயே வழங்கியிருந்தார்.

இதேவேளை, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் தடுமாறிய நிலையில், அண்மையில்தான் மீண்டும் பந்துவீச ஆரம்பித்த மிற்செல் மார்ஷ் சகலதுறை வீரராக அணிக்குள் வந்திருந்த நிலையில், கடந்த காலங்களை விட பல முன்னேற்றங்களைக் கண்டு மூன்றாவது, ஐந்தாவது போட்டிகளில் நிலைத்து நின்று ஓட்டங்களைப் பெற்றதுடன், நான்காவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துடன் நின்று போட்டியை வெற்றிதோல்வியின்றி முடிக்க உதவி, துடுப்பாட்ட வீரராக தானடைந்த வளர்ச்சியை வெளிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், விக்கெட் காப்பாளராக தெரிவாக டிம் பெய்ன் தனது உள்ளூர் அணிக்காகவே விளையாடியிருக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்ததுடன், தொடரின் முதல்நாளில் பிடியொன்றைத் தவறவிட்டிருந்த நிலையில் விமர்சனங்கள் அதிகரித்திருந்தன. எனினும் அதன்பின்னர் சுதாகரித்துக் கொண்ட டிம் பெய்ன் மிகச் சிறப்பாக விக்கெட் காப்பில் ஈடுபட்டதுடன், தேவையான நேரங்களில் ஓட்டங்களைப் பெற்று, அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதேவேளை, உப அணித்தலைவரான டேவிட் வோணர் தனது வழமையான அதிரடியை விட்டு கவனமாக இத்தொடரில் துடுப்பெடுத்தாடியிருந்த நிலையில், நான்காவது போட்டியிலேயே சதம் பெற்றிருந்தார். ஆக, எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை டேவிட் வோணர் வழங்கியிருக்கவில்லை. இதோடு, டேவிட் வோணரோடு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய கமரோன் பன்குரோப்டும் பிரகாசிக்காத நிலையில், தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்துக்கான குழாமில் இடம்பெறுவது சந்தேகத்துக்கிடமானதாகவேயுள்ளது.

ஆக, அண்மைய கால டெஸ்ட் போட்டிகளை போல, சொந்த மண்ணில் புலிகளாக இருக்கும் இங்கிலாந்து, வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெல்லுவதற்கு மலையளவுக்கு, முக்கியமாக வேகமாக பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளரைக் கண்டுபிடித்து முன்னேறவேண்டியிருக்கிறது. மறுபக்கம், ஆஷஸை வென்றுள்ள அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டேல் ஸ்டெய்ன், வேர்ணன் பிலாந்தர், மோர்னி மோர்கல், கஜிஸ்கோ றபடாவை எதிர்கொள்கையிலேயே உண்மையான சவாலை எதிர்கொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .