2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘மு.காவுக்கு அக்கறை இல்லை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

“பெரும்பான்மை வாக்குகளை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில் பறிபோகியுள்ள முஸ்லிம்களின் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு, எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை” என்று, தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

'தேசிய காங்கிரஸின் தெளிவான பாதை' எனும் தொனிப் பொருளினாலான பொதுக் கூட்டம், அட்டாளைச்சேனை பிரதான வீதியில் சனிக்கிழமை (19) இரவு,  நடைபெற்றது.

இதில், அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழர்களும் முஸ்லிம்களும், சில விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும். அப்படி இல்லாமல் பெரும்பான்மை இன மதகுருமார், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு யாரையும் மதிக்காமல் செய்படுவது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பேசி, தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல், பெரும் பான்மையினவாதிகளைக் கொண்டு வந்து, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

“முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ், சலுகைகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும், மௌனம் காக்கின்றது. முஸ்லிம்களுக்காக, காணி விடயத்தில் பேசுவதற்கு யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

“தற்போதைய கிழக்கு மாகாண சபை மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றது.  நாங்கள் அபிவிருத்தி திட்டங்களைத் திட்டமிட்டு செய்து கொண்டு செல்லும் போது, அதனை செய்யவிடாது எம்மை தடுத்தார்கள். தேசிய காங்கிரஸ் பிரதேச வாதம் பாராது, அபிவிருத்திகளை சிறப்பான முறையில் செய்திருக்கின்றது. இதனை யாராலும் மறுக்க முடியாது” என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .