2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

257 பலியானமையால் சோகத்தில் அல்ஜீரியா

Editorial   / 2018 ஏப்ரல் 13 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

  • பலியான 257 பேரில் அகதிகளும் உள்ளடக்கம்
  • காரணத்தைத் தேடி, விசாரணை ஆரம்பம்
  • மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிப்பு

வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில், நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 257 ஆகும் என, அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சோக மயமாகியுள்ளது.

அல்ஜீரியத் தலைநகருக்கு அருகிலுள்ள விமானத் தளமொன்றிலிருந்து புறப்பட்ட விமானம், புறப்பட்டுச் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகி, அருகிலிருந்த வயலுக்குள் வீழ்ந்திருந்தது.

இவ்வாறு விபத்துக்குள்ளான விமானம், இராணுவத்தினரின் பயணத்துக்காகப் பயன்படுத்தப்படும் விமானம் என்ற போதிலும், அதில் பொதுமக்களும் பயணித்துள்ளனர். குறிப்பாக, மேற்கு சஹாராவைச் சேர்ந்த அகதிகள் சிலரும், உயிரிழந்தோரில் உள்ளடங்குகின்றனர் என, அல்ஜீரிய அரச ஊடகம் குறிப்பிட்டது.

அதைத் தவிர, வேறு சில பொதுமக்களும், ஆயுதக் குழுவொன்றைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், விமானப் பணியாளர்கள் 10 பேரும், உயிரிழந்தவர்களாவர்.

இவ்விபத்தின் போது காயமடைந்த சிலர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர் என அரச ஊடகம் குறிப்பிட்டாலும், எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற உறுதியான தகவல், இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை.

என்ன காரணத்துக்காக இவ்விபத்து ஏற்பட்டது என்பது இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில், அது குறித்த விசாரணைகளை, அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.

ஆனால், விமானத் தளத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 150 மீற்றர்கள் உயரத்தில் விமானம் காணப்பட்ட போது, விமானத்தில் தீப்பிடித்தது என்றும், வீதியில் விபத்துக்குள்ளாகுவதைத் தவிர்த்த விமானி, வயல்வெளிக்கும் விமானத்தைத் திருப்பினார் எனவும், நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். வீதியில் விபத்து ஏற்பட்டிருந்தால், இன்னும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்குமெனக் கருதப்படுகிறது.

தங்களின் ஊதியம் தொடர்பாகவும் பணியாற்றும் கள நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக, சில மாதங்களாகவே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த வைத்தியர்கள், இவ்விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சையளிப்பதற்காக, தமது பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்தி, தமது சேவையை வழங்குகின்றனர்.

இவ்வுயிரிழப்புகளைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு, தேசிய துக்க தினத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள அல்ஜீரிய ஜனாதிபதி அப்டெல்அஸிஸ் போடெஃபிளிக்கா, விபத்துத் தொடர்பில் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .