2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

42 பேர் கொல்லப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அச்சத்தில் காஷ்மிரிகள்

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் காஷ்மிரில், அந்நாட்டின் மத்திய சேமக் காவல் படையினர் மீது கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் காஷ்மிரிகள் இலக்குவைக்கப்பட்டுள்ளனர். இதனால், நாடு முழுவதிலும் வாழும் காஷ்மிரிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர் என, இந்தியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் கீழ்க் காணப்படும் ஆயுதந்தாங்கிய மிகப்பெரிய பொலிஸ் பிரிவான மத்திய சேமக் காவல் படையினர் மீது, காஷ்மிரைச் சேர்ந்த 20 வயதான அடீல் டார், வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தைச் செலுத்தித் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில், 42 படை வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

காஷ்மிரில் கடந்த 30 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக அமைந்த இத்தாக்குலுக்கு, பாகிஸ்தானை மய்யமாகக் கொண்ட ஜெய்ஷ்-ஈ-மொஹமட் குழு உரிமை கோரியிருந்தது.

இந்நிலையில், இத்தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கோப உணர்வு, காஷ்மிரிகளுக்கு எதிரான வெறுப்பாக, காஷ்மிருக்கு வெளியே பல இடங்களில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. பலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று, தமது வீடுகளிலிருந்து வெளியேறுமாறு பலர் பணிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்நிலை தொடரும் நிலையில், அச்சுறுத்தலுக்குள்ளான காஷ்மிரிகளை, தமது வீடுகளில் வந்து தங்குமாறு, பலர் வாய்ப்பளித்துள்ளனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக, காஷ்மிர் காணப்படுகிறது. காஷ்மிருக்குத் தனியான சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென, அங்கு வாழ்வோரில் கணிசமானோர் கோருகின்றனர். மறுபக்கமாக, பாகிஸ்தானோடு காஷ்மிரை இணைக்க வேண்டுமென, இன்னும் ஒரு பிரிவினர் கோருகின்றனர். இவற்றின் பின்னணியில் தான், பாகிஸ்தான் மீதான கோபத்தை, காஷ்மிரிகள் மீது, இந்தியர்களில் கடும்போக்கான சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .