2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அணுவாயுதச் சோதனைத் தளத்தை அழிக்கிறது வடகொரியா

Editorial   / 2018 மே 14 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது நாட்டிலுள்ள அணுவாயுதச் சோதனைத் தளமொன்றை, இம்மாதம் 23ஆம் திகதிக்கும் 25ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், வடகொரியா அழிக்கவுள்ளது என, அந்நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குமிடையிலான சந்திப்புக்கு முன்னதாகவே, இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

புங்கியே-றி என்ற பகுதியிலுள்ள இச்சோதனைத் தளத்தின் சுரங்கங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு, அதன் நுழைவாயில்கள் மூடப்படுமெனவும், கண்காணிப்பு வசதிகள், ஆராய்ச்சிக் கட்டடங்கள், பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் அகற்றப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரியத் தீபகற்பத்தில் ஏற்பட்ட இணக்கமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அணுவாயுதச் சோதனைகளை இனிமேல் நடத்தப் போவதில்லை என, வடகொரியா ஏற்கெனவே உறுதியளித்துள்ள நிலையிலேயே, அது தொடர்பான வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், இவ்வறிவிப்பை வெளியிடுவதாக, வடகொரியா தெரிவிக்கிறது.

ஐ.அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இவ்வழிப்பு இடம்பெறுவது, முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அழிப்பைப் பார்வையிடுவதற்கு, ஐ.அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் அழைக்கப்படுவர் என, வடகொரியா உறுதியளித்தது.

வடகொரியா இதுவரை மேற்கொண்டதாக வெளியுலகுக்குத் தெரிந்த 6 சோதனைகளும், புங்கியே-றி சோதனைத் தளத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. எனவே, இது முக்கியமானது.

ஆனால், ஏற்கெனவே தயாரித்துள்ள அணுக்குண்டுகளை அழிப்பது தொடர்பான உறுதிமொழியை, வடகொரியா இன்னமும் வெளியிடவில்லை என்பதை, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமது சோதனைகள் காரணமாக, தமக்குத் தேவையானளவு குண்டுகளைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்தே, தமது சோதனைகளை நிறுத்துவதாக வடகொரியா குறிப்பிட்டிருந்தது. எனவே, ஐ.அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான சந்திப்பின் போது, ஏற்கெனவே காணப்படும் அணுவாயுதங்களை அழிப்பது தொடர்பாகக் கவனஞ்செலுத்தப்படலாம் எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .