2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஆதரவை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வீட்டோ செய்தார் ட்ரம்ப்’

Editorial   / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனியில், சவூதி அரேபியா தலைமையிலான போருக்கான ஐக்கிய அமெரிக்க ஆதரவை முடிவுக்கு கொண்டு வர தனக்கு உத்தரவிடும் காங்கிரஸ் தீர்மானமொன்றை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் வீட்டோ செய்தார்.

அந்தவகையில், தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுவத்துவது இரண்டாவது முறையாகும். ஐக்கிய அமெரிக்காவுக்கும், மெக்ஸிக்கோவுக்குமிடையிலான தனது எல்லைச் சுவருக்கான மேலதிக நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக தான் பிரகடனப்படுத்திய அவசரகாலநிலையை இல்லாமற் செய்யும் காங்கிரஸ் தீர்மானத்தை முதற்தடவையாக கடந்த மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் வீட்டோ செய்திருந்தார்.

அந்தவகையில், “இந்தத் தீர்மானமானது தேவையில்லாததொன்று. எனது அரசமைப்பு அதிகாரங்களை நலிவடையச் செய்வதற்கான அபாயகரமான முயற்சி. ஐக்கிய அமெரிக்க பிரஜைகள், இன்றைய, எதிர்கால வீரமான படையினர்களின் வாழ்க்கையை பாதிப்பதொன்று” என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலகின் மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கிய போர் உத்தி தொடருவதற்கான பச்சை சமிக்ஞையே வீட்டோ என சர்வதேச மீட்பு செயற்குழுவின் தலைவரும், பிரதம நிறைவேற்றதிகாரியுமான டேவிட் மில்லிபான்ட் கூறியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில், சவூதி அரேபியாவால் ஆதரவளிக்கப்படும் யேமனிய அரசாங்கத்துக்கும், ஈரானுடனான ஹூதி போராளிகளுக்குமிடையிலான யுத்தத்தில் பல்வேறு காரணங்களுக்காக ஐக்கிய அமெரிக்க ஆதரவு தேவையானது என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இடைமறிக்கப்படுகின்ற அல்லது முற்றாகத் தடுக்கப்படுகின்ற சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி மீதான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கோள்காட்டிய ஜனாதிபதி ட்ரம்ப், யேமனிலிருந்து ஹூதி தாக்குதல்களுக்கு குறித்த நாடுகள் இலக்காகுவதாகவும், கூட்டணி நாடுகளில் வசிக்கும் 80,000க்கும் மேற்பட்ட ஐக்கிய அமெரிக்கர்களின் பாதுகாப்பே முதன்மையானதும், முக்கியமானதாகும் எனக் கூறியுள்ளார்.

இதுதவிர, குறித்த தீர்மானமானது ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையை பாதிப்பதாகவும், இரு தரப்பு உறவுகளைப் பாதிப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .