2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இணக்கம் வந்தால் ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிப்போம்’

Editorial   / 2018 மே 10 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ள போதிலும், அதிலிருந்து உடனடியாக விலகுவது தொடர்பான சமிக்ஞைகளை, ஈரான் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

இது தொடர்பாக நேற்று (09) கருத்துத் தெரிவித்த ஈரான் ஜனாதிபதி ஹஸன் றௌஹானி, ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

“ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஏனைய உறுப்பினர்களுடன், ஒப்பந்தத்தின் இலக்குகளை நாங்கள் அடைய முடிந்தால், அது (ஒப்பந்தம்) தொடர்ந்தும் இருக்கும். ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் மூலம், சர்வதேச உடன்பாடு ஒன்றுக்கான தனது அர்ப்பணிப்பிலிருந்து, ஐ.அமெரிக்கா விலகியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய நாடுகளுடனும் ரஷ்யாவுடனும் சீனாவுடனும், பேரம்பேசல்களில் ஈடுபடுமாறு, தனது வெளிநாட்டு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி றௌஹானி, இந்த ஒப்பந்தத்தைத் தொடர்வதன் மூலமாக, அனைத்துத் தரப்புகளுக்கும் நன்மை ஏற்படுமென தாங்கள் முடிவுசெய்தால், ஒப்பந்தத்தில் தொடர்ந்தும் நீடிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்திலிருந்து விலகும் இம்முடிவு காரணமாக, ஈரானின் கடும்போக்குவாதிகளின் செல்வாக்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்கும் முயற்சியிலும், ஜனாதிபதி றௌஹானி ஈடுபட்டுள்ளார்.

ஐ.அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை, “உளவியல் தாக்குதல்” என வர்ணித்த அவர், தமது நாட்டின் “வீரம்மிகுந்த மக்கள்” இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும், பொருளாதார முன்னேற்றம் தொடருமெனவும் தெரிவித்ததோடு, “எங்களது மக்கள், ஒருபோதும் கவலையடைக்கூடாது” என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .