2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இனவாதி’ காந்தியின் சிலை நிர்மாணம் இடைநிறுத்தம்

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தியின் சிலையை, மாலாவியில் நிர்மாணிப்பதற்கு எதிராகப் போராடிவரும் எதிர்ப்பாளர்கள், நீதிமன்றமொன்றின் மூலம், இடைக்கால வெற்றியொன்றைப் பெற்றுள்ளனர். அச்சிலையின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு, அந்நாட்டின் உயர் நீதிமன்றம், நேற்று முன்தினம் (31) உத்தரவிட்டது.

தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மாலாவியில், காந்தியின் சிலையை, இந்திய அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட்ட 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக, மாலாவி அரசாங்கம் நிர்மாணித்து வந்தது.

மாநாட்டு மண்டபமொன்றில், இந்தச் சிலை நிர்மாணிக்கப்பட்டு வந்த போதிலும், காந்தி, தனது வாழ்நாளில், இனவெறுப்பான கருத்துகளைத் தெரிவித்தார் என்று குற்றஞ்சாட்டிய எதிர்ப்பாளர்கள், அச்சிலையை அமைக்கக்கூடாது எனப் போராடினர்.

கறுப்பினத்தவர்களுக்கு எதிரான கருத்துகளை, காந்தி வெளிப்படுத்தினார் என்றே குற்றஞ்சாட்டப்படும் நிலையில், “கறுப்பின மக்களாக நாம் இருக்கும் நிலையில், காந்தி மீது அருவருப்பையும் வெறுத்தொதுக்கும் உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன” என, சிலை நிர்மாணத்துக்கு எதிரான குழு தெரிவித்தது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இடம்பெறும் வரை, நிர்மாணத்தை இடைநிறுத்துமாறு, நீதிபதியொருவர் உத்தரவிட்டுள்ளார்.

இச்சிலை அமைப்பதற்கு எதிராக, 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டிருந்த நிலையில், இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய காந்தி, தேசந் தந்தையென அங்கு புகழப்படுகின்ற போதிலும், ஆபிரிக்காவில் அவருக்கெதிரான நிலைப்பாடும் காணப்படுகிறது.  கானாவிலுள்ள பல்லைக்கழகமொன்றில் காணப்பட்ட காந்தி சிலை, கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, வேறு இடத்துக்கு மாற்றப்படுவதற்கு, அந்நாட்டு அரசாங்கம் உடன்பட்டிருந்தது. தற்போது, மாலாவியிலும் அதே நிலை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .