2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஈராக்குக்கும் துருக்கிக்கும் வாய்ப்பு?

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈராக்கில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலை, ஈராக்கின் படைச்சமநிலையில் மாத்திரமல்லாது, பிராந்திய ரீதியிலான பிரச்சினைகளையும் ஏற்படுத்துமென அஞ்சப்படுகிறது. 

ஈராக்கிய மத்திய அரசாங்கத்துக்கும் குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துக்கும் இடையிலான முரண்பாடு தொடர்ந்து காணப்பட்டாலும், இரு தரப்புகளும் இணைந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்தன. தற்போது, இரு தரப்புகளும் மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிரான போர் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

அதேபோன்று, குர்திஷ்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஈராக் அரசாங்கம் முடிவெடுத்து, நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த நடவடிக்கைகளில், ஈரானும் துருக்கியும் பங்குகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

குர்திஷ்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அநேகமாக வெளிப்படுத்தி வந்த துருக்கி, குர்திஷ்களின் எண்ணெய்க் குழாய்கள், தமது நாட்டுக்கு உள்ளாகச் செல்லவும் அனுமதித்திருந்தது. எனினும், குர்திஷ்களால் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பைத் தொடர்ந்து, குர்திஷ்களுக்கு எதிராக மாறியிருந்தது. 

ஈராக்கில் குர்திஷ்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டால், தமது நாட்டிலுள்ள குர்திஷ்களின் சுதந்திரக் கோரிக்கையும் அதிகரிக்குமென்பது, துருக்கியின் அச்சமாகும். எனவே, குர்திஷ்களை மேலும் ஒடுக்குவதற்காக, ஈராக் அரசாங்கத்துடன், துருக்கி நெருக்கமாகும் வாய்ப்புள்ளது. 

அதேபோன்று, குர்திஷ்களுடன் தொடர்ச்சியாக முரண்பட்டு வந்த நிலையில், குர்திஷ்களை எதிர்க்க, ஈராக்குடன் இணைந்து செயற்படப் போவதாக, அந்நாடு ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனவே, இவ்வாய்ப்பை, அந்நாடும் பயன்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்த வரை, தற்போது வரை, மதில் மேல் பூனையாகவே, இப்பிரச்சினையில் காணப்படுகிறது. இரு தரப்புகளுக்கும் ஆயுதங்களை வழங்கியிருந்த நிலையில், நேரடியான தலையீட்டை, அந்நாடு இதுவரை விரும்பியிருக்கவில்லை. ஆனால், மேலதிகமாக மோதல்கள் வேண்டாம் என்ற அதன் கோரிக்கையை, அந்நாடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .