2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஈரானைப் பற்றி தீர்மானிக்க நீங்கள் யார்?’

Editorial   / 2018 மே 23 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் தொடர்பாக, ஐக்கிய அமெரிக்காவால் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி ஹஸன் றௌஹானி, “ஈரானுக்காகவும் உலகுக்காகவும் தீர்மானங்களை மேற்கொள்ள, நீங்கள் யார்?” என, ஐ.அமெரிக்காவைப் பார்த்துக் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் கருத்துகள் தொடர்பில், ஜனாதிபதியின் கருத்துகளை, ஈரானின் அரச சார்பு ஊடகமான ஐ.எல்.என்.ஏ செய்திச் சேவை வெளியிட்டது.

“உலகுக்காகத் தீர்மானங்களை மேற்கொள்ள, இன்றைய உலகம், ஐ.அமெரிக்காவை அனுமதிப்பதில்லை. நாடுகள் சுதந்திரமானவை. அந்த யுகம் முடிந்துவிட்டது. எங்கள் தேசத்துக்கு ஆதரவளிக்கும் எங்கள் பாதையில் நாம் தொடர்வோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி றௌஹானியின் உரை, தற்போதைய ஐ.அமெரிக்க நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. குறிப்பாக, ஐ.அமெரிக்காவின் பராக் ஒபாமாவுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த, ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் காலத்தைப் போன்று, தற்போதைய நிர்வாகமும் செயற்படுகிறது என அவர் குற்றஞ்சாட்டினார்.

“ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகம், 15 ஆண்டுகள் பின்னகர்ந்து, புஷ்ஷின் காலத்துக்குச் சென்று, 2003ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட அதே கருத்துகளை முன்வைக்கிறது” என அவர் தெரிவித்தார்.

அவ்வாறான கருத்துகளை முன்வைக்கும் காலம் மாறிவிட்டது எனவும், அவ்வாறான கருத்துகளை, பல நூறு தடவைகள் ஈரானிய மக்கள் கேட்டுள்ளனர் எனவும் தெரிவித்த ஜனாதிபதி றௌஹானி, ஒருவருமே அவ்வாறான கருத்துகள் தொடர்பில் அலட்டிக் கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.

இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, இதற்கு முன்னர், மத்திய புலனாய்வு முகவராண்மையின் (சி.ஐ.ஏ) பணிப்பாளராக இருந்தமையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி றௌஹானி, “உளவுச் செவையொன்றின் தலைவராக இருந்த நபரொருவரின் தர்க்கங்களை உலகம் ஏற்பதில்லை. ஏனையோருக்காக அவர்கள் தீர்மானிப்பதையும் ஏற்பதில்லை” என்றும் விமர்சித்தார்.

இதேவேளை, மைக் பொம்பயோவின் கருத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, ஈரானின் சிரேஷ்ட அதிகாரியொருவர், அவரின் கருத்துகள், ஈரானின் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு ஐ.அமெரிக்கா முயல்கிறது என்பதைக் காட்டுகிறது எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .