2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘எல்லையில் இருக்கும் அகதிகளை அனுமதிக்குக’

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்கு வந்த பின்னர், இரு நாட்டு எல்லைப் பகுதிக்கு அண்மையாக உள்ள, சுமார் 15,000 றோகிஞ்சா அகதிகளை, விரைவாக நாட்டுக்குள் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பங்களாதேஷ் அதிகாரிகளிடம், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) கோரிக்கை விடுத்துள்ளது.

மியான்மாரின் ராக்கைனில் அதிகரித்துள்ள வன்முறைகளைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 25ஆம் திகதியிலிருந்து இதுவரை சுமார் 582,000 பேர், அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர் என்று, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு, அவர்களுக்கான உணவுக்கான அணுக்கமும் சுகாதார வசதிகளுக்கான அணுக்கமும் இல்லாத நிலைமை காணப்படுகிறது.

இந்நிலையில், கடினமான பாதைகளூடாக பங்களாதேஷை நோக்கிவரும் அகதிகள், பங்களாதேஷ் எல்லையில் வைத்து, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, பங்களாதேஷுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அன்ஜுமான் பரா எல்லை என்ற பகுதியூடாக, பங்களாதேஷுக்குள் நுழைந்த 10,000 தொடக்கம் 15,000 வரையிலானோர், அந்த எல்லையிலேயே காணப்படுகின்றனர் என, யு.என்.எச்.சி.ஆரின் பேச்சாளர் அன்ட்ரேஜ் மஹேசிக் தெரிவித்தார். இவர்கள், சுமார் ஒரு வார காலமாக நடைபயணத்தில் ஈடுபட்டே, இவ்வெல்லையை அடைந்துள்ளனர்.

எனவே, இவர்களுக்கான அனுமதி வழங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்தி, இவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளுமாறு, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் எல்லைக் காவல் படையினரால், இவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதே, இத்தாமதத்துக்குக் காரணம் என்று தெரிவித்த அவர், எனினும், அனைத்து அரசாங்கங்களினதும் உரிமை இதுவெனவும் குறிப்பிட்டார்.

இதுவரை, ராக்கைனை விட்டு வெளியேறியுள்ளவர்களில் சுமார் 60 சதவீதமானோர், சிறுவர்கள் எனத் தெரிவித்த அவர், ஒவ்வொரு வாரமும், மேலும் ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .