2024 மே 08, புதன்கிழமை

‘ஏராளமான நாடுகள் தவறு செய்துள்ளன’; வடகொரியாவை நியாயப்படுத்துகிறார் ட்ரம்ப்

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக மோசமான ஒடுக்குமுறைகளைக் கொண்ட நாடாகக் கருதப்படும் வடகொரியாவை நியாயப்படுத்தும் விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகிலுள்ள பல நாடுகளும் தவறு செய்துள்ளன என்று குறிப்பிட்டார்.

ஐ.அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கு அதிக விட்டுக்கொடுப்புகளை ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, வடகொரிய ஆட்சியில், மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படாது, மோசமான ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு, பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து முன்வைக்கப்படும் நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னை நம்புவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த கருத்தும், அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வடகொரியத் தலைவர் கிம், “ஒரு கொலையாளி. மக்களை அவர் கொலை செய்கிறார்” என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்கிறாரா என, ஊடகவியலாளர் ஒருவர், ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ட்ரம்ப், “கிம், மிகவும் கடினமான ஒருவர். நாடொன்றின், மிகவும் கடினமான நாடொன்றின், பொறுப்பை நீங்கள், கடினமான மக்களுடன் எடுக்கும் போது, நீங்கள் யாராக இருந்தாலும், 27 வயதில் உங்களால் அதைச் செய்ய முடியுமாயின், 10,000 பேரில் ஒருவரால் தான் அதைச் செய்ய முடியும்.

“அவர், மிகவும் புத்திசாலியான ஒருவர். அவர், சிறந்த பேரம்பேசும் திறன் கொண்டவர். நாமிருவரும், ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறோம் என நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த ஊடகவியலாளர், “ஆனால், மிகவும் மோசமான விடயங்களையும் அவர் செய்துள்ளார்” என்று நினைவுபடுத்தினார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ட்ரம்ப், “ஆம். ஆனால், இன்னும் ஏராளமான பலரும், மிகவும் மோசமான விடயங்களைச் செய்துள்ளனர். மோசமான விடயங்களைச் செய்த நாடுகளின் பட்டியலை என்னால் சொல்ல முடியும்” என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் இக்கருத்து, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியிடம் மாத்திரமன்றி, குடியரசுக் கட்சியிடமும் அதிக கண்டனங்களைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீதும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது, இவ்வாறான பதிலையே ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கியிருந்தார். தற்போது, வடகொரியத் தலைவருக்கும் அவ்வாறான பதிலையே வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X