2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஐ.அமெரிக்கா மீதான றொக்கெட்டுகள் தவிர்க்கப்பட முடியாதவை’

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் பெருநிலப்பரப்பு மீது, தம்மால் மேற்கொள்ளப்படவுள்ள றொக்கெட்டுகள், தவிர்க்கப்பட முடியாதவையாக, நிகழ்ந்தே தீர வேண்டியனவாக மாறிவிட்டன என, வடகொரியா எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வைத்தே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

பொதுச் சபையில், இலங்கை நேரப்படி நேற்று (24) அதிகாலை உரையாற்றிய வடகொரிய வெளிநாட்டு அமைச்சர் றி யொங்-ஹோ, தனது உரையில் பெரும்பான்மையான அளவு நேரத்தை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீதும் ஐ.அமெரிக்கா மீதும் செலவளித்திருந்தார். 

ஜனாதிபதி ட்ரம்ப், தனது உரையில், வடகொரியாவின் நடவடிக்கைகள் தொடர்ந்தால், வடகொரியாவை முழுமையாக அழித்து விடப் போவதாக எச்சரித்ததோடு, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னை, “றொக்கெட் மனிதன்” என்றும் அழைத்திருந்தார். 

அதைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய அமைச்சர் றி, அந்த உரையானது, “ஐ.அமெரிக்க பெருநிலப்பரப்பு முழுவதற்குமான எங்கள் றொக்கெட்டுகளின் விஜயத்தை, தவிர்க்க முடியாததாக மாற்றிவிட்டது” என்று குறிப்பிட்டார். 

உரையின் ஆரம்பத்திலேயே “எனது பிரதான கருத்துகளுக்குச் செல்ல முன்னர், ஐ.அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்லப்படுகின்றவரால், 4 நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உரை தொடர்பான கருத்துகளை முன்வைப்பதற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். அவரது உரை, புனிதமான இந்த ஐ.நா பகுதியை, மாசுபடுத்திவிட்டது” என்றே, அவர் ஆரம்பித்தார். 

ஜனாதிபதி ட்ரம்ப்பை, “மனநிலை குழப்பமானவர்” எனவும் “அதிகாரம் மீது அதீத விருப்பைக் கொண்டவர்” எனவும், அவர் குறிப்பிட்டார். அத்தோடு, ஜனாதிபதி ட்ரம்ப், “துயரங்களின் தளபதி” எனவும் “பொய் மன்னர்” எனவும் “கொடிய ஜனாதிபதி” எனவும், அமெரிக்க மக்களாலேயே அழைக்கப்படுகிறார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரையில், வடகொரியத் தலைவரை, “தற்கொலை முயற்சியில் இருக்கும் ஒருவர்” என வர்ணித்திருந்த நிலையில், “வேறு எவருமில்லை. ட்ரம்ப்பே தான், தற்கொலை முயற்சியில் இருக்கிறார். இந்தத் தற்கொலைத் தாக்குதல் காரணமாக, ஐ.அமெரிக்காவிலுள்ள அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டால், ட்ரம்ப் தான் முழுமையாகப் பொறுப்பாக வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். 

அத்தோடு, ஐ.அமெரிக்கா காரணமாகவே, அணுகுண்டுகளை வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாக, தமது பலத்தை அதிகரிக்க வேண்டியேற்பட்டதெனத் தெரிவித்தார். 

ட்ரம்ப் எச்சரிக்கை 

வடகொரிய வெளிநாட்டு அமைச்சரின் உரை, ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பற்றி அதிகம் கவனஞ்செலுத்தியிருந்த நிலையில், நேற்று (24) காலையில், தனது டுவிட்டர் மூலமாக, வடகொரியாவுக்கான எச்சரிக்கையை, ஜனாதிபதி வெளியிட்டார். 

“வடகொரியாவின் வெளிநாட்டு அமைச்சர், ஐ.நாவில் உரையாற்றியமையை, இப்போது தான் கேட்டேன். ‘சிறிய றொக்கெட் மனிதனின்’ எண்ணங்களை அவர் பிரதிபலிக்கிறார் எனில், அவர்கள், நீண்டகாலம் இருக்க மாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .