2024 மே 11, சனிக்கிழமை

‘கட்டடத்துக்குள் நுழைந்ததும் ஜமால் கொல்லப்பட்டார்’

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபிய மன்னர் குடும்பத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் சென்ற உடனேயே கொல்லப்பட்டார் என, துருக்கியின் சட்டமா அதிபர் வெளிப்படுத்தியுள்ளார். இவ்விடயத்தில், துருக்கியின் சட்டமா அதிபரால் வெளிப்படுத்தப்பட்ட, முதலாவது உத்தியோகபூர்வமான கருத்தாக இது அமைந்துள்ளது.

உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள இக்கொலை தொடர்பாக, சவூதி அரேபியாவினதும் துருக்கியினதும் சட்டமா அதிபர்கள், துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சவூதியின் சட்டமா அதிபர், நேற்று முன்தினம் (31), சவூதிக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார். அவர் புறப்பட்டுச் சென்ற சில மணிநேரங்களில், துருக்கியின் சட்டமா அதிபர் இர்பான் ஃபிடன், இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

சவூதியின் சட்டமா அதிபருடனான கலந்துரையாடல்களில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு முடிவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த, சட்டமா அதிபர் திணைக்களம், அதைத் தொடர்ந்தே, இவ்வறிக்கையை வெளியிடுவதாகத் தெரிவித்தது.

இதன்படி, துணைத் தூதரகத்துக்குள் ஜமால் சென்ற உடனேயே, அவர் கொல்லப்பட்டார் எனவும், அது முன்னரே திட்டமிடப்பட்ட கொலை எனவும், சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். அவர், மூச்சுத்திணறி உயிரிழந்தார் என்று குறிப்பிட்ட சட்டமா அதிபர் அலுவலகம், ஜமால் கொல்லப்பட்டதும், அவரின் உடல் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டது.

ஜமாலின் கொலை தொடர்பாக, முற்றிலும் மாறுபட்ட கருத்துகளையே, சவூதி வெளிப்படுத்தி வருகிறது.

இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகத்துக்குள், இவ்வாண்டு 2ஆம் திகதி சென்ற ஜமால், அங்கு கொல்லப்பட்டாரென, பலராலும் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அத்துணைத் தூதரகத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என்றே, சவூதி தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தது. அதே நிலைப்பாட்டையே, தொடர்ச்சியாக 2 வாரங்களாக, அந்நாடு வெளிப்படுத்தி வந்தது. ஆனால், அதன் பின்னர், சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து, “துணைத் தூதரகத்துக்குள் இடம்பெற்ற மோதலின் போது, ஜமால் உயிரிழந்தார்” என, சவூதி தெரிவித்தது. அதை ஏற்பதற்கு, சர்வதேச நாடுகள் மறுத்த நிலையில், ஜமாலின் மரணம், ஒரு கொலையென, வெளிநாட்டு அமைச்சர் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால், அனுமதியளிக்கப்படாத நடவடிக்கையின் போதே அவர் கொல்லப்பட்டார் என, அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

ஆனால் பின்னர், ஜமாலின் கொலை, திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை, சவூதி ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனாலும், மேலதிக தகவல்களை அந்நாடு இன்னமும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

எனவே, துருக்கியின் சட்டமா அதிபரால் இப்போது வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு, சவூதி மீதான அழுத்தங்களை அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .