2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சவூதிக்கான ஆயுத விற்பனையை நிறுத்த ட்ரம்ப் மறுப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களைக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர், சவூதி அரேபியாவால் கொல்லப்பட்டுள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், அந்நாட்டுக்கான ஆயுத விற்பனையை நிறுத்துவது பற்றிச் சிந்திக்கவில்லை என்ற ரீதியில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளரான ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்குள் சென்ற பின்னர், வெளியேறவில்லை என அறிவிக்கப்படும் நிலையில், சவூதி அரேபிய உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என, துருக்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதுடன், அந்நாட்டைப் புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஊடகவியலாளரை, சவூதி தான் கொன்றது நிரூபணமானால், சவூதி மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், எனினும், ஆயுத விற்பனையை நிறுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

யேமனில், சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியின் தாக்குதல்களில், பொதுமக்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக் காரணமாக, சவூதிக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள், மேற்கத்தேய நாடுகளில் அண்மைக்காலமாக எழுந்துள்ளன. இந்நிலையில், தற்போதைய சம்பவம், அக்கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

எனினும், 110 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியான குறித்த ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய மறுத்த ஜனாதிபதி ட்ரம்ப், “நாங்கள் அதைச் செய்தால், எங்களை நாங்களே தண்டனைக்கு உள்ளாக்கிக் கொள்வோம் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஆயுத விற்பனை ஒப்பந்தத்தைத் தவிர்த்து, “மிக மிகப் பலமான” விடயங்களைச் செய்ய முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அவற்றைச் செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால், என்னவாறான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி அவர் ஆராய்கிறார் என அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .