2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிரியாவில் புதிய போர் முனை

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் சிரிய சிவில் யுத்தத்தில், புதிய போர் முனையொன்று உருவாகியுள்ளது. சிரியாவின் அஃப்ரின் மாகாணத்தில், குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதல்களை, துருக்கி ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்தே, இந்தப் போர் முனை உருவாகியுள்ளது.

“சமாதானச்சின்ன நடவடிக்கை” என்ற பெயரில், நேற்று முன்தினம் (20) தனது நடவடிக்கையை ஆரம்பித்த துருக்கி, அந்நாளில் மாத்திரம், குர்திஷ் போராளிகளின் 108 இலக்குகளைத் தாக்கியது என, துருக்கி இராணுவம் தெரிவித்தது. அனைத்துத் தாக்குதல்களும், விமானத் தாக்குதல்களாகவே அமைந்தன.

துருக்கியில் இந்தத் தாக்குதல்கள், சிரிய யுத்தத்தில் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகின்றன. சிரிய சிவில் யுத்தம் தணிந்துவரும் நிலையில், புதிய மோதலுக்கான ஏற்பாடுகளை இது ஏற்படுத்தியுள்ளது.

அதைவிட முக்கியமாக, நேட்டோ நாடுகளான ஐக்கிய அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையில், மோதல் ஏற்படுவதற்கான நிலைமையை இது ஏற்படுத்தியுள்ளது.

குர்திஷ் போராளிகள், ஐ.அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் குழுவாகும். சிரிய குர்திஷ் போராளிகளை, தமது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள குர்திஷ் பிரிவினரின் ஓர் அங்கமாகவே துருக்கி கருதுகின்ற போதிலும், சிரிய குர்திஷ்களுடனான நெருக்கமான உறவை, ஐ.அமெரிக்கா தவிர்ப்பதாக இல்லை.

சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில், அதிக வினைத்துறன் செயற்பட்ட குழுவாகவும், குர்திஷ் குழுவே காணப்பட்டது. எனவே, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கெதிரான யுத்தத்தில் முக்கிய அங்கங்களில் ஒன்றாக, குர்திஷ்களை, ஐ.அமெரிக்கா கருதுகிறது.

ஐ.அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு, ஏற்கெனவே மோசமடைந்து, உடைவடையும் நிலை காணப்படுகிறது. இவற்றுக்கு மத்தியில், ஐ.அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் ஆயுதக்குழு மீது துருக்கி மேற்கொள்ளும் தாக்குதல், நேட்டோ நாடுகளான துருக்கியையும் ஐ.அமெரிக்காவையும், ஒன்றுடனொன்று மோதும் சூழ்நிலைக்குத் தள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .