2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிரியாவுக்குள் துருக்கிப் படைகள்

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் காணப்படும் குர்திஷ்களுக்கு எதிரான படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ள துருக்கிப் படைகள், சிரியாவுக்குள் நேற்று முன்தினம் (21) நுழைந்ததோடு, பாரிய தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளன என அறிவிக்கப்படுகிறது. 

கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கைகளின் முதலாவது நாளில், விமானத் தாக்குதல்களே நடத்தப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது நாளிலேயே, தரைத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

துருக்கி இராணுவத்தின் தாங்கிகள், சிரியாவுக்குள் புகுந்து தாக்குதல்களைத் தொடர்கின்ற அதே நேரத்தில், பதில் தாக்குதல்களை, குர்திஷ்கள் ஆரம்பித்துள்ளனர். எனவே, எல்லைப் பகுதி நகரங்களுக்குள், குர்திஷ்களின் றொக்கெட் குண்டுகள் வீழ்ந்தன எனத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. 

நடவடிக்கையின் முதலாவது நாளில், 108 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில், 45 இலக்குகள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என, துருக்கி இராணுவம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையின் விளைவாக, சிரியாவின் எல்லைப் பகுதி மாகாணமான அஃப்ரினின் சில கிராமங்கள், ஏற்கெனவே கைப்பற்றப்பட்டு விட்டன என, துருக்கி வெளிநாட்டமைச்சர் மெவ்லட் கவுசொக்லு தெரிவித்தார். 

எனினும், இதை மறுத்த குர்திஷ்கள், அஃப்ரின் மாகாணத்துக்குள் நுழைவதற்கான முயற்சி தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்ததோடு, துருக்கி இராணுவத்தினரின் இராணுவத் தாங்கிகள் இரண்டைத் தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். 

இந்த நடவடிக்கைகள் காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான அதிக கவனம் காணப்படாத போதிலும், மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தகவலின்படி, குறைந்தது 18 பொதுமக்கள், முதலிரு நாட்களிலும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் உள்ளடங்குகின்றனர் என்று கூறப்படுகிறது. 

ஆனால், பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதை மறுத்த துருக்கித் தரப்பு, “பயங்கரவாதிகளுக்குச் சார்பானவர்களால்” மேற்கொள்ளப்படும் போலிப் பிரசாரம் என, அத்தகவலைக் குறிப்பிட்டது. 

மறுபக்கமாக, துருக்கியின் எல்லைப் பகுதி நகரான றெய்ஹான்லியில், சிரியாவிலிருந்து ஏவப்பட்ட றொக்கெட் விழ்ந்து வெடித்ததில், சிரிய அகதியொருவர் கொல்லப்பட்டதோடு, மேலும் 32 பேர் காயமடைந்தனர் என, அந்நகரத்தின் மேயர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, எல்லைப் பகுதியைச் சேர்ந்த இன்னொரு நகரான கிளிஸ் பகுதியிலும், றொக்கெட்டுகள் வீழ்ந்து வெடித்த போதிலும், உயிராபத்துகள் எவையும் ஏற்பட்டிருக்கவில்லை என அறிவிக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .