2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘சூ கியிடம் அறமுறையான தலைமைத்துவம் இல்லை’

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் காணப்படும் நெருக்கடி தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள சர்வதேசக் குழுவிலிருந்து, ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரியான பில் றிச்சர்ட்ஸன் விலகியுள்ளார். இந்தக் குழு, குற்றங்களை மறைப்பதற்காகச் செயற்படுகிறது எனக் குற்றஞ்சாட்டிய அவர், மியான்மாரின் அரச தலைவி ஆங் சாங் சூ கி, அறமுறையான தலைமைத்துவப் பண்பைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளின்டனின் அமைச்சரவையில் பதவி வகித்த றிச்சர்ட்ஸன், 10 பேர் கொண்ட இக்குழு, ராக்கைன் மாநிலத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே, குழுவிலிருந்து விலகியுள்ளார்.

“இந்த ஆலோசனைக் குழு, கண்துடைப்பு முயற்சி என்பதுவே, இதிலிருந்து நான் விலகுவதற்கான காரணமாகும்” என்று தெரிவித்த றிச்சர்ட்ஸன், “அரசாங்கத்துக்கான உற்சாகப்படுத்தும் குழுவின் அங்கமாக இருப்பதற்கு விரும்பவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

சூ கியுடன், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில், அவருடன் முரண்பட்டுக் கொண்டதாக, றிச்சர்ட்ஸன் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் இருவர், அங்கு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற விடயத்தை அவர் வெளிப்படுத்தியபோதே, முரண்பாடு ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.

“ஊடகவியலாளர்களின் விடயம், ஆலோசனைக் குழுவின் பணிக்குள் உள்ளடங்காது” என, சூ கி கூறினார் என, றிச்சர்ட்ஸன் குறிப்பிட்டார்.

இந்த முரண்பாடு ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்திய சூ கியின் அலுவலகம், குறித்த கூட்டம், ராக்கைன் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டது.

இக்குழுவின் கூட்டங்களில், கடந்த 3 நாட்களிலும் இடம்பெற்ற கூட்டங்களின் போது, ஊடகங்களும் ஐக்கிய நாடுகளும் மனித உரிமைக் குழுக்களும் சர்வதேச சமூகமும், மோசமான முறையில் கூறப்பட்டது எனத் தெரிவித்த றிச்சர்ட்ஸன், இக்குழுவிலிருந்து, சரியான ஆலோசனை, அவருக்குக் கிடைக்காது என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .