2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு எதிராக ஐ.நா தீர்மானம்?

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெருசலேம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும், சட்டரீதியாக ஏற்புடையதல்ல எனவும், அவை மாற்றப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கும், வரைவுத் தீர்மானமொன்றை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஆராயவுள்ளது. இஸ்‌ரேலின் தலைநகராக, ஜெருசலேத்தை அங்கிகரித்து, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிரானதாகவே, இத்தீர்மானம் அமையவுள்ளது.

இத்தீர்மானத்தின் ஆரம்பநிலை வரைவை, எகிப்துப் பிரதிநிதிகள், நேற்று முன்தினம் பரவவிட்டுள்ளனர். இது தொடர்பான வாக்கெடுப்பு, இன்று இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன என, இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஜெருசலேத்தின் உரிமை யாருக்கு என்பது, இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான நீண்டகாலப் பிரச்சினை என்ற அடிப்படையில், ஜெருசலேமே தமது தலைநகரம் என்ற இஸ்‌ரேலின் நிலைப்பாட்டை, சர்வதேச சமூகம் ஏற்பதில்லை. இந்த நிலைப்பாட்டுக்கு எதிராகவே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் அறிவிப்பு அமைந்திருந்தது.

இந்நிலையிலேயே, இது தொடர்பான தீர்மானம், ஐ.நாவின் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜெருசலேம் பிரச்சினை என்பது, இரு தரப்புகளும் இணைந்து மேற்கொள்ளும் பேரம்பேசல்களின் விளைவாகவே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும், ஜெருசலேம் தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து வருத்தமடைவதாகவும், குறித்த தீர்மானம் குறிப்பிடுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் என்று குறிப்பிடப்படுகின்ற போதிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் பெயர், நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இஸ்‌ரேலுக்கான தமது தூதரகங்களை, ஜெருசலேத்தில் அமைக்கக்கூடாது என நாடுகளைக் கோரும் இத்தீர்மானம், ஜெருசலேம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துமாறும் கோரவுள்ளது.

மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, பாதுகாப்புச் சபையில் வைத்து, தோல்வியடைவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரம் கொண்ட ஐ.அமெரிக்கா, இத்தீர்மானத்தைத் தோற்கடிக்குமென்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், பாதுகாப்புச் சபையிலுள்ள ஏனைய 4 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளிட்ட 14 நாடுகளும், இத்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஐ.அமெரிக்காவால் வீற்றோ முறையில் இது நிராகரிக்கப்படுமாயின், ஐ.நா பொதுச் சபையில், ஏனைய முஸ்லிம் நாடுகளின் ஆதரவுடன், தீர்மானமொன்றை பலஸ்தீனம் நிறைவேற்றுமென எதிர்வுகூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .