2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப்பின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை

Editorial   / 2018 ஏப்ரல் 11 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞரின் வீட்டில், அந்நாட்டின் புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியக (எப்.பி.ஐ) அதிகாரிகள், நேற்று (10) சோதனை நடத்தினர். இச்சோதனையைத் தொடர்ந்து, அது தொடர்பான தனது விசனத்தை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

மைக்கல் கோஹென் என்ற இவ்வழக்கறிஞர், நீண்டகாலமாகவே ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞராக இருந்து வந்தாலும், அண்மையிலேயே அதிக பிரபலத்தை அடைந்திருந்தார். ட்ரம்ப்புடன் 2006ஆம் ஆண்டில் தொடர்புகளைக் கொண்டிருந்தார் எனக் கூறப்படும், பாலியல் திரைப்பட நடிகையான ஸ்டோர்மி டானியல், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது என்பதற்காக, 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், 130,000 ஐ.அமெரிக்க டொலர்களை வழங்கினார் என்ற விடயத்தால், இவர் பிரபலமடைந்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யத் தலையீடு, ட்ரம்ப் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்பு போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துவரும், விசேட வழக்குத் தொடுநரான றொபேர்ட் மல்லரின் பணிப்புரையின் பேரில், கொஹேனின் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இச்சோதனையின் போது, வழக்கறிஞருக்கும் சேவை பெறுநருக்கும் இடையிலான இரகசிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன என, கொஹேனின் வழக்கறிஞர் ஸ்டீவன் எம். றயன் தெரிவித்தார். ஆனால், பாலியல் திரைப்பட நடிகைக்குப் பணம் வழங்கியமை தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன என, ஐ.அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

றொபேர் மல்லரின் விசாரணை, தன் மீதான பழிவாங்கல் நடவடிக்கை எனக் கூறிவரும் ஜனாதிபதி ட்ரம்ப், அதே கருத்தை, தற்போது மீண்டும் வெளிப்படுத்தினார். அத்தோடு, இச்சோதனைகளை “மரியாதைக் கேடு” என வர்ணித்த அவர், “நாட்டின் மீதான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டார்.

கொஹேன், ஜனாதிபதியின் வழக்கறிஞராக இருப்பதோடு மாத்திரமல்லாது, அவரின் நண்பருமாவார். அதேபோன்று, ஆளும் குடியரசுக் கட்சியின் பிரதி நிதித் தலைவர் இவராவார். எனவே, அவரது வீடும் அலுவலகமும் சோதனையிடப்பட்டமை, மிக முக்கியமானதொன்றாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .