2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடில்லை

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இடம்பெற்றுவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாங்கட்ட முயற்சியாக, தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் விசேட தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றுள்ளது. கட்டாரில், கடந்த வாரத்தில், மூன்று நாள்களாக இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

ஐ.அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணி, 2001ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்திருந்த நிலையில், அதன் பின்னர், நாட்டின் கட்டுப்பாட்டைத் தம்வசம் வைத்துக்கொள்ள, தலிபான் முயன்று வருகிறது. அதிலும், 2014ஆம் ஆண்டிலிருந்து, ஆப்கானிஸ்தானில் படை நடவடிக்கைகளை நேட்டோ அமைப்பு முடிவுக்குக் கொண்டுவந்திருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது.

இவற்றுக்கு மத்தியிலேயே, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென முயன்றுவரும் ஐ.அமெரிக்கா, அவ்வாறான பேச்சுவார்த்தைக்குத் தலிபான்களைச் சம்மதிக்க வைக்கும் முகமாகவே, கட்டாரில் இப்பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது.

எனினும், இப்பேச்சுவார்த்தையில் எந்த இணக்கப்பாடுகளும் ஏற்படவில்லை என, தலிபான் குழு விடுத்த அறிக்கை தெரிவித்தது. அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை, “முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள்” என்றும் அக்குழு வர்ணித்திருந்தது.

அதேபோன்று, அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தையே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடுவாக விதிப்பதாக, ஆப்கானிஸ்தானுக்கான ஐ.அமெரிக்க விசேட தூதுவரான ஸல்மே காலில்ஸாட் விதித்திருந்த நிலையில், அக்காலக்கெடுவை நிராகரிப்பதாகவும், தலிபான் குழு அறிவித்துள்ளது.

அதேபோன்று, ஆயுத ரீதியாகத் தம்மால் முன்னேற முடியாது என, தலிபான் குழு ஏற்றுக்கொண்டது என, ஸல்மே தெரிவித்திருந்த போதிலும், அதை நிராகரித்த தலிபான் குழு, அவ்வாறான கருத்தெதனையும் தாம் தெரிவித்திருக்கவில்லை எனவும், அவரின் கருத்துக் குறித்து அதிர்ச்சியடைவதாகவும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .