2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷ் ஊடகவியலாளருக்குச் சிகிச்சையளிக்க நீதிபதி உத்தரவிட்டார்

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை அடக்கும் விதமாகக் கைதுசெய்யப்பட்ட புகைப்பட ஊடகவியலாளரை, வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குமாறு, அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளரான அவர், தடுத்துவைக்கப்பட்ட பின்னர், பொலிஸாரால் துன்புறுத்தப்பட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இருவர், வீதி விபத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பான வீதிச் சட்டங்கள் வேண்டுமெனக் கோரி, அந்நாட்டு மாணவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்கிறது. எனினும், இப்போராட்டத்தை அடக்குவதற்கு அரசாங்கம் முயன்றுவருகிறது,

இதில் ஓர் அங்கமாக, இப்போராட்டம் தொடர்பாக, அல் ஜஸீரா தொலைக்காட்சிக் கருத்துத் தெரிவித்த புகைப்பட ஊடவியலாளரான ஷஹிடுல் அலாம், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். பொய்யான, திரிக்கப்பட்ட கருத்துகளை வெளியிட்டார் எனக் குற்றஞ்சாட்டியே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் போது, வெளியே ஊடகவியலாளர்களின் கருத்துத் தெரிவித்திருந்த அவர், கைதின்போது, பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, 7 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்குமாறு, நீதிமன்றமொன்று கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், ஆச்சரியப்படும் வகையில், அத்தீர்ப்பை இரத்துச் செய்த உயர்நீதிமன்றமொன்று, அவரை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லுமாறு உத்தரவிட்டது.

அதேபோன்று, அலாமின் உடல்நிலை தொடர்பாக ஆராய்வதற்கு, மருத்துவக் குழுவொன்றை உருவாக்குமாறும் உத்தரவிட்ட நீதிமன்றம், இன்றைய (08) தினம், அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.

மாணவர்களின் போராட்டம், பொலிஸாரால் வன்முறையைப் பயன்படுத்தி அடக்கப்பட முயலப்பட்ட நிலையில், புகைப்பட ஊடகவியலாளரின் தடுப்பும் அவர் மீதான சித்திரவதை என்ற செய்தியும், சர்வதேச மட்டத்தில் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், அவரை விடுதலை செய்யுமாறு கோரி வருகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .