2024 மே 11, சனிக்கிழமை

பாலியல் தொழிலுக்குள் றோகிஞ்சா சிறுமிகள் தள்ளப்படுகின்றனர்

Editorial   / 2018 மார்ச் 22 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் காணப்படும் சிறுமிகள், பங்களாதேஷிலுள்ள அகதிகளின் முகாம்களிலிருந்து, பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர் என, பி.பி.சி செய்திச் சேவை மேற்கொண்ட புலனாய்வுச் செய்திச் சேகரிப்பிலிருந்து தெரியவந்துள்ளது.

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பிய றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். சுமார் 700,000 பொதுமக்கள் இவ்வாறு பங்களாதேஷைச் சென்றடைந்துள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மேலதிகமாக, சமூகச் சிக்கல்களும் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

அதில், 14 வயதேயான ஒரு சிறுமி, தனது குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு விட்ட நிலையில், பங்களாதேஷில் வைத்து வீதிகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த போது, வாகனமொன்றில் வந்த பெண்கள் சிலர், அச்சிறுமியை ஏற்றிக் கொண்டு சென்றனர் எனக் கூறப்படுகிறது. புதிய வாழ்க்கைக்கான பாதுகாப்பான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தாலும், இறுதியில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு அனுப்பியுள்ளனர்.

அதற்கு அச்சிறுமி மறுக்க, இறுதியில் வன்புணர்வை மேற்கொண்டுள்ளனர் என, அச்சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான அனுபவங்கள், அங்குள்ள பல சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ளது என, தகவல் மூலங்கள் குறிப்பிடுகின்றன.

அதேபோல், கடத்தல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளிலும் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலும், வீட்டு வேலைகளை வாங்கித் தருவதாக வாக்குமூலமளிக்கும் சில குழுக்கள், அவர்களைப் பாலியல் தொழிலுக்குள் தள்ளி விடுகின்றன என வெளிப்படுத் -தப்படுகிறது.

இவ்வாறு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட சில சிறுமிகள் மீட்கப்பட்டு, அவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்படுகின்ற போதிலும், ஏனையோர் தொடர்பில் தகவல்களே இல்லாத நிலைமையே காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .