2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகத்தில் மாற்றங்கள்

Editorial   / 2018 ஜூலை 24 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி தொடர்பான சர்ச்சையை, அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் கையாண்ட விதம் தவறானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், தனது அலுவலகத்தில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

மே தினத்தன்று இடம்பெற்ற போராட்டமொன்றில், போராட்டக்காரர் ஒருவரை, ஜனாதிபதி மக்ரோனின் பாதுகாப்பு உதவியாளரான அலெக்ஸான்ட்ரே பெனல்ல தாக்கும் காணொளி வெளியானதைத் தொடர்ந்தே, பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. 

கடமையில் இருந்திருக்காத அலெக்ஸான்ட்ரே, கலகம் அடக்கும் தலைக்கவசமொன்றையும் பொலிஸ் அடையாளங்களையும் அணிந்தபடி, போராட்டக்காரர்களைத் தாக்கும் காணொளி, பிரான்ஸ் பத்திரிகையொன்றால் கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் இரண்டாவது காணொளி, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது. 

ஜனாதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவின் தலைவரான அலெக்ஸான்ட்ரேவை, ஜனாதிபதி மக்ரோன், கடந்த வெள்ளிக்கிழமையே நீக்கியிருந்த போதிலும், சர்ச்சைகள் தொடர்ந்திருந்தன. 

இந்நிலையிலேயே, இது தொடர்பாக தனது அமைச்சரவையிடம் உரையாற்றிய ஜனாதிபதி மக்ரோன், இச்சம்பவம் குறித்த தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, இதைப்போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமலிருக்க, தனது தனிப்பட்ட அலுவலகத்தை மீள ஒழுங்கமைக்குமாறும் பணித்துள்ளார். 

ஏராளமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 14 மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற ஜனாதிபதி மக்ரோன், தனது ஆட்சிக்காலத்தில் சந்தித்த முக்கியமான சர்ச்சையாக இது கருதப்படுகிறது. 

குறிப்பாக, அலெக்ஸான்ட்ரே மீது, ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படாமை; முதலில் வழங்கப்பட்ட தண்டனை மிகக்குறைவானதாக இருந்தமை; சட்டரீதியற்ற முறையில், குறித்த சம்பவம் தொடர்பான காணொளிகளை, அலெக்ஸான்ட்ரே பெற்றார் என்ற குற்றச்சாட்டுப் போன்றவை, பிரான்ஸ் முழுதும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .