2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புட்டினுடனான ஊடகச் சந்திப்பு: குத்துக்கரணம் அடித்தார் ட்ரம்ப்

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்த சர்ச்சையான கருத்துகள் தொடர்பில், குத்துக்கரணம் அடித்துள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தவறாகப் பேசிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யா தலையிட்டது என்பது தொடர்பாகவே, ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்டிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது எனவும், ஹிலாரி கிளின்டனைத் தோற்கடித்து, ட்ரம்ப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ரஷ்யா விரும்பியது எனவும், ஐ.அமெரிக்கப் புலனாய்வுத் துறையினர் எடுத்துள்ள முடிவை நம்புகிறாரா எனக் கேட்டபோது, “அது ரஷ்யாவாக இருக்கும் என்பதற்கான காரணமொன்றையும் நான் பார்க்கவில்லை” என, அவர் பதிலளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, நாட்டின் புலனாய்வுத் துறையை நம்பாமல், எதிரி நாடான ரஷ்யாவை நம்புகிறார் என, பலத்த விமர்சனங்கள் எழுந்திருந்தன. அவ்விமர்சனங்களைத் தொடர்ந்து, ஐ.அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், நேற்று முன்தினம் (17) சந்தித்த ஜனாதிபதி ட்ரம்ப், தனது ஊடகக் சந்திப்புத் தொடர்பில் விளக்கமளித்தார்.

அப்போது அவர், “அது ரஷ்யாவாக இருக்க முடியாது என்பதற்கான காரணம் எதையும் நான் பார்க்கவில்லை” என்று தான் கூற விரும்பியதாகவும், மாறிக் கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஐ.அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினரை எப்போதும் நம்புவதாகக் கூறிவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும், ஜனாதிபதியின் குத்துக்கரணம், உண்மையானதா, இல்லாவிட்டால் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சியா என்பது தொடர்பில், கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

குறிப்பாக, ஐ.அமெரிக்க புலனாய்வுத் துறையின் முடிவை ஏற்பதாகக் கூறிய போது அவர், “2016ஆம் ஆண்டு தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற, எமது புலனாய்வுப் பிரிவினரின் முடிவை, நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்து விட்டு, “ஏனைய யாராகவும் கூட இருக்கலாம். பலர் அங்கு இருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார். இதன்மூலமாக, ரஷ்யா தான் தலையிட்டது என்ற, உறுதியான கருத்தை வெளியிட அவர் தயங்கினார் என்றே கருதப்படுகிறது.

அதேபோல், பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர், தனது டுவிட்டர் கணக்கில் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி புட்டினுக்கும் எனக்கும் இடையிலான சந்திப்பு, அதிசிறப்பான வெற்றியாக அமைந்தது. போலியான செய்தி ஊடகங்களில் தான் அவ்வாறில்லை” என்று குறிப்பிட்டார். எனவே, இவ்விடயத்தில் எந்தளவுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் பின்வாங்கினார் என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .