2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போகோ ஹராமிடமிருந்து 76 மாணவிகள் மீட்பு

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரிய இராணுவத்தினர் நடத்திய அதிரடி இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது, பாடசாலை மாணவிகள் 76 பேர் மீட்கப்பட்டதோடு, மேலும் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன என, அதிகாரிகளும் பெற்றோரும் அப்பகுதியில் வசிப்போரும் தெரிவிக்கின்றனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபேயில் உள்ள டப்சி என்ற கிராமத்தின் மீது, போகோ ஹராம் ஆயுதக்குழுவால், கடந்த திங்கட்கிழமை மாலை, தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுநாள், அப்பகுதிப் பாடசாலையில் உள்ள மாணவிகளின் வரவைப் பார்த்தபோது, 91 மாணவிகள் காணாமல் போயிருந்தனர் என்பது வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும், குறைந்தது 13 பேரைக் காணவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாணவிகள், கடத்தப்பட்டனர் என்பதற்கான ஆதாரம் கிடையாது என, பொலிஸாரும் மாநில அதிகாரிகளும் குறிப்பிட்டனர். எனினும், பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட யோபே மாநில அரசாங்கம், மீட்கப்பட்ட மாணவிகளில் சிலர், போகோ ஹராம் ஆயுதக்குழுவிடமிருந்தே மீட்கப்பட்டனர் என்று குறிப்பிட்டது.

ஆனால், போகோ ஹராமால் இவ்வாறு மாணவிகள் கடத்தப்படும் போது, அவ்விடயத்தைப் பற்றிப் பெரிதாக முக்கியத்துவம் வழங்காது விடுதல், நைஜீரிய அதிகாரிகளுக்கு வழக்கமானதாகும். எனவே, அனைவருமே, போகோ ஹராம் ஆயுதக்குழுவாலேயே கடத்தப்பட்டனர் என்றே கருதப்படுகிறது.

ஏற்கெனவே, சிக்பொக் நகரிலிருந்து, 2014ஆம் ஆண்டில் 270க்கும் மேற்பட்ட பாடசாலைச் சிறுமிகள் கடத்தப்பட்ட விடயம், உலகளாவிய ரீதியில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. அவர்களுள் பலர் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் சுமார் 100 பேர், போகோ ஹராமின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகின்றனர் எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .