2024 மே 08, புதன்கிழமை

‘மகனைக் கொல்ல உத்தரவிடுவேன்’

Editorial   / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மகன் மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமாயின், தனது மகனைக் கொல்வாரென, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகனைக் கொல்லும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்காதபடி பார்த்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

42 வயதான பாவோலோ டுட்டேர்ட்டே, தனது தந்தை மேயராக இருந்த டாவோ நகத்தின் உப மேயராக இருக்கிறார். சீனாவிலிருந்து வந்த மிகப்பெரிய போதைப்பொருள் கொள்கலனைக் கடத்துவதற்கு அவர் உதவினார் என, எதிர்க்கட்சி காங்கிரஸ் உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, செனட் விசாரணைக் குழு முன்பாக, அவர் இம்மாதம் ஆஜராகியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை, நேரடியாகக் குறிப்பிட்டிருக்காத ஜனாதிபதி டுட்டேர்ட்டே, எனினும், தனது பிள்ளைகள் எவரும், போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என, ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தின் போது தெரிவித்த கருத்தை, மீள வலியுறுத்தினார்.

“நான் முன்னரும் கூறியிருக்கிறேன். எனது உத்தரவு என்னவென்றால், ‘எனது பிள்ளைகள் போதைப்பொருளில் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களைக் கொல்லுங்கள். அதன் மூலமாக, இதைப் பற்றி எதுவும் சொல்ல வாய்ப்பிருக்காது’”என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “ஆகவே நான் புலோங்கிடம் (பாவலோவின் செல்லப் பெயர்) கூறினேன், ‘நீங்கள் சிக்கினீர்கள் என்றால், உங்களைக் கொல்லுங்கள் என்பது எனது உத்தரவு. அது (குற்றச்சாட்டு) உண்மையென்றால், உங்களைக் கொல்லும் பொலிஸாரை நான் பாதுகாப்பேன்’ என்றேன்” என்று குறிப்பிட்டார்.

72 வயதான டுட்டேர்ட்டே, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டப் போவதாகக் கூறி, பதவியேற்றிருந்தார். அதன் பின்னர், நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்களையும் பாவனையாளர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையின் காரணமாக, இதுவரை 3,800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது மரணங்களுக்கு, இதுவரை விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.

ஆனால், நாட்டிலுள்ள 3 மில்லியன் போதைப்பொருள் அடிமைகளை, “கொல்வதற்கு மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று, ஜனாதிபதி டுட்டேர்ட்டே தெரிவிப்பதோடு, இந்த நடவடிக்கைகளில் சிறுவர்கள் பலியாகுவதையும் நியாயப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X