2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மகாபாரதக் காலத்திலேயே இணையமும் செய்மதிகளும்’

Editorial   / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணைய வசதியும் செய்மதி வசதிகளும், புதிதாக வந்தவையல்ல எனவும், மகாபாரதக் காலத்திலேயே அவை இருந்தன எனவும், திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்த கருத்து, இணையத்தளங்களில் அதிக கேலிகளைச் சம்பாதித்துள்ளது.

தனது மாநிலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், கணினிமயமாக்கம், சீர்திருத்தம் குறித்து உரையாற்றும் போதே, இக்கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

“குருசேத்திரத்தில் 18 நாட்கள் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதுகுறித்த ஒவ்வோர் அத்தியாயத்தையும் சஞ்சய், திருதராட்டிரரிடம் விவரிப்பார். இது, அப்போதே இணைய வசதி இருந்ததைக் காட்டுகிறது. இணையம் மட்டுமல்ல, செயற்கைக்கோள் வசதியும் அப்போது இருந்திருக்கிறது” என, அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இக்கருத்து, சமூக ஊடக இணையத்தளங்களில் கடுமையாகக் கேலி செய்யப்பட்டது. குறிப்பாக, வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் வரலாற்றாசிரியர்களும், இது தொடர்பிலான தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தினர்.

ஆனால் இக்கருத்து, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், உலகின் தொழில்நுட்பங்கள் பல, இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டன என, அண்மைக்காலமாகக் கூறிவரும் கருத்துகளைப் போன்றே காணப்படுகின்றது.

பிரதமர் நரேந்திர மோடி, சில மாதங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவிக்கும் போது, பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை, இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது என்றும், பிள்ளையாருக்கு, யானைத் தலை பொருத்தப்பட்டமை மூலம் இது நிரூபணமாகிறது என்றும் தெரிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .