2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மல்லரின் விசாரணையை இலக்குவைக்கிறார் ட்ரம்ப்

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாட்சிப் புலனாய்வு முகவராண்மையின் (எப்.பி.ஐ) பணிப்பாளராக ஜேம்ஸ் கோமி இருந்த போது, பிரதிப் பணிப்பாளராக இருந்த அன்ட்ரூ மக்கபே, பதவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக என்ன மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கெனவே கடுமையான அழுத்தத்துக்குள் காணப்பட்ட மக்கபே, பிரதிப் பணிப்பாளர் பதவியிலிருந்து விலகி, ஒதுங்கியிருந்ததுடன், நேற்றுடன் பதவி விலகத் திட்டமிட்டிருந்தார்.

எனினும், ஐ.அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு, அவர் பதவி விலக்கப்பட்டார். இதனால், அவரது ஓய்வூதியத்துக்கான வாய்ப்பு இல்லாமல் போகலாம் அல்லது ஓய்வூதியத்தில் இழப்பு ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.

எப்.பி.ஐ-க்குள் அரசியல் சார்பு நிலை காணப்படுகிறது என, ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அன்ட்ரூ மக்கபே தொடர்பில், உள்ளக விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஊடகவியலாளர் ஒருவருக்குத் தகவல்களை வழங்குவதில் தவறிழைக்கப்பட்டது என, முடிவு காணப்பட்டது எனத் தெரிகிறது.

ஆனால், தன் மீதான தவறுகள் இல்லை எனக் குறிப்பிடும் மக்கபே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பாக றொபேர்ட் மல்லரின் விசாரணையில், முக்கியமான சாட்சியாக தான் உள்ள நிலையில், தான் இலக்கு வைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

மக்கபே நீக்கப்பட வேண்டும் எனவும் மக்கபேயிடம் அரசியல் சார்பு இருக்கிறது என்றும், கடந்தாண்டு ஜூலை மாதத்திலிருந்தே, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்து வந்த நிலையில், இந்த நீக்கம், முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

மக்கபேயின் பதவி நீக்கம் தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், முன்னாள் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி மீதான விமர்சனங்களையும் மீண்டும் முன்வைத்தார்.

அதன் பின்னர், இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் பின்னிரவு, மக்கபே மீது மீண்டும் விமர்சனங்களை முன்வைத்த அவர், ஊடகங்கள் தொடர்பாகவும் விமர்சனத்தை வழங்கினார்.

அதன் பின்னர், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை, தனது முன்னைய டுவீட்டுக்குப் பதிலொன்றை வழங்கிய ஜனாதிபதி ட்ரம்ப், மக்கபே தொடர்பான விமர்சனங்களுடன், மல்லரின் விசாரணையைத் தொடர்புபடுத்துவது போல, தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

“[ரஷ்யாவுடனான] ஒத்துழைப்பும் அது தொடர்பான குற்றமும் இல்லை என்பதால், மல்லரின் விசாரணை ஆரம்பித்திருக்கக் கூடாது” என்று குறிப்பிட்டதோடு, இவ்விசாரணைகள் “பழிவாங்கல்” என்ற தன்னுடைய விமர்சனத்தை மீண்டும் முன்வைத்தார்.

அதேபோன்று, மக்கபேயின் பதவி விலக்கல், மல்லரின் விசாரணையோடு சம்பந்தப்பட்டது என்றவாறான கருத்துகளையே, ஜனாதிபதியின் தனிப்பட்ட வழக்கறிஞரான ஜோன் டோவ்ட்-உம் முன்வைத்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மல்லரின் விசாரணை, மக்கபேயாலும் அவரின் பணிப்பாளரான ஜேம்ஸ் கோமியாலும், பொய்யாகப் புனையப்பட்டது என்றவாறு குறிப்பிட்ட அவர், ரஷ்ய விசாரணைகளுக்குப் பொறுப்பாக உள்ள பிரதி சட்டமா அதிபர் றொட் றொசென்ஸ்டெய்ன், இவ்விசாரணைகளை முடிப்பார் என எதிர்பார்ப்பார் என்றவாறும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, ஜனாதிபதி ட்ரம்ப்பின் சார்பில் கதைப்பதாகவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்தின் பின்னர், தனியான அறிக்கையொன்றை வெளியிட்டு, அவை தனது தனிப்பட்ட கருத்துகள் எனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .