2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

றோகிஞ்சா அகதிகள் 10 பேர் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரிலிருந்து வெளியேற விரும்பும் றோகிஞ்சா முஸ்லிம் அகதிகளை ஏற்றிக்கொண்டு, பங்களாதேஷ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகொன்று, நேற்றுக் கவிழ்ந்ததில், குறைந்தது 10 பேர் பலியானதோடு, மேலும் பலரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. 

மியான்மாரின் ராக்கைனில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கை காரணமாக, அங்கிருந்து தப்பியோடி, பங்களாதேஷுக்கு வரும் அகதிகள், ஆபத்தான பயணங்களையே மேற்கொள்கின்றனர். 

இந்நிலையில், சுமார் 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட படகு, மியான்மாரையும் பங்களாதேஷையும் பிரிக்கும் நஃப் நதியில் மூழ்கியதைத் தொடர்ந்தே, இவர்கள் பலியாகியுள்ளனர்.  

இந்நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, பங்களாதேஷ் எல்லைக் காவல் படையின் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் கேணல் எஸ்.எம். அரிபுல் இஸ்லாம், 10 பேர் பலியாகினர் என்பதை உறுதிப்படுத்தியதோடு, உயிரிழந்தோரில் பெரும்பான்மையினர், சிறுவர்கள் எனவும் குறிப்பிட்டார். சிறிய மீன்பிடிப் படகொன்றில், அதிக எண்ணிக்கையானோர் பயணித்தனர் என, அவர் குறிப்பிட்டார். 

நஃப் நதிப் பகுதியில், மீட்புப் பணிகளில் கரையோரக் காவல் படையினரும் எல்லைக் காவல் படையினரும் தேடுதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 

இன்னொரு எல்லைக் காவல் அதிகாரி கருத்துத் தெரிவிக்கும் போது, பங்களாதேஷ் கரையிலிருந்து சுமார் 180 மீற்றர் தொலைவிலேயே, படகு கவிழ்ந்தது எனத் தெரிவித்தார். 

கடந்த வாரம் இடம்பெற்ற இன்னொரு படகு விபத்தில், குறைந்தது 34 அகதிகள் உயிரிழந்திருந்தனர். தற்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, கடந்த 6 வாரங்களில் மாத்திரம், இவ்வாறு 200 றோகிஞ்சா முஸ்லிம் அகதிகள், படகு விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 

ராக்கைன் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை, இனச்சுத்திகரிப்பு என, ஐக்கிய நாடுகள் வர்ணித்துள்ள நிலையில், அங்கிருந்து தப்பி, இதுவரை சுமார் 537,000 பேர், பங்களாதேஷைச் சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .