2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

றோகிஞ்சாக்களின் பிரச்சினையைத் தீர்க்க மும்முனைத் திட்டம்

Editorial   / 2017 நவம்பர் 21 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, மும்முனைத் திட்டமொன்றை, சீனா முன்மொழிந்துள்ளது. அதன் முதலாவது அம்சமாக, பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்த மக்கள், மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவதற்காக, ராக்கைன் மாநிலத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவது அமைந்துள்ளது.

இது தொடர்பான தமது திட்டத்தை, சீன வெளிவிவகார அமைச்சு, நேற்று (20) வெளியிட்டது.

பாதுகாப்புப் பிரிவினரின் முகாம்கள் மீது இவ்வாண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆயுததாரிகளை இலக்குவைத்து மேற்கொள்வதாகத் தெரிவித்து, மியான்மார் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை, இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை என, ஐக்கிய நாடுகளால் வர்ணிக்கப்படுகிறது. இந்நடவடிக்கை காரணமாக, 600,000க்கும் மேற்பட்ட றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷைச் சென்றடைந்துள்ளனர்.

இவர்களை, மீண்டும் ராக்கைனுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை, பங்களாதேஷ் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, சீனாவின் உதவியையும், அந்நாடு கோரியிருந்தது.

இந்நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, தமது திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன் முதலாவது அம்சமாக, ராக்கைனில் போர்நிறுத்தத்தைக் கொண்டுவருவது அமைந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, பெறக்கூடிய தீர்வொன்றைப் பெறுவதற்காக, இருதரப்புக் கலந்துரையாடல் இடம்பெற வேண்டும் எனவும், மூன்றாவதும் இறுதியுமான கட்டமாக, வறுமையை ஒழிப்பதற்கான நீண்டகாலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என, சீனா கோரியுள்ளது.

ராக்கைனில் ஏற்பட்டுள்ள வன்முறைகளுக்கு, வறுமையே காரணம் என்பது, சீனாவின் நிலைப்பாடாக, இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மியான்மாரின் ஏனைய பகுதிகளை விட, ராக்கைனில் வறுமை அதிகமாக உள்ள போதிலும், ராக்கைனில் பெரும்பான்மையாக வாழும் றோகிஞ்சா முஸ்லிம்களை, பிரஜைகளற்றவர்களாக மியான்மார் அரசாங்கம் மாற்றியமையைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவாகவே, இவ்வறுமை கருதப்படுகிறது. எனவே, சீனாவின் இந்தத் திட்டம், எந்தளவுக்கு யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற கேள்வி காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .