2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடகொரியர்களைப் போன்று அமெரிக்கர்களா?

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியத் தலைவரை, அந்நாட்டு மக்கள் செவிமடுப்பது போல, ஐக்கிய அமெரிக்க மக்களும் தன்னைச் செவிமடுக்க வேண்டுமென்ற வகையில், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்தால், கடுமையான சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் வைத்து, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னைச் சந்தித்த ஜனாதிபதி ட்ரம்ப், அச்சந்திப்புத் தொடர்பான தனது கருத்துகளை, ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஃபொக்ஸ் அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலொன்றில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியத் தலைவரைப் பற்றி உரையாடும் போது, “அவர் கதைக்கும் போது, அவரது மக்கள், கவனத்துடன் அமர்ந்து கேட்கின்றனர். எனது மக்களும், அதைச் செய்ய வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

வடகொரியத் தலைவர் கிம், தனது ஒருவழிச் சகோதரர், தனது மாமனார், தனது ஆட்சியிலுள்ள உயர்நிலை அதிகாரிகள், எதிர்க்கும் பொதுமக்கள் ஆகியோரைக் கொன்றுள்ளார் என, மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

எனவே, சர்வாதிகாரியெனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கிம்மை உதாரணமாகக் காட்டி ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றியமை, பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப்பிடம், பின்னர் கேட்கப்பட்ட போது, “நான் நகைச்சுவையாகச் சொன்னேன். உங்களுக்கு, நையாண்டி புரிவதில்லை” என்று குறிப்பிட்டார்.

ஆனால், சர்வாதிகாரிகள் மீதும் கடும்போக்கு ஆட்சியாளர்கள் மீதும், ஜனாதிபதி ட்ரம்ப், வியப்புடன் உரையாற்றி வருவது, தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால், சர்ச்சைக்குரிய விடயங்களைக் கூறிவிட்டு, அவை தொடர்பில் எதிர்ப்பு எழுந்ததும், நகைச்சுவை என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஏற்கெனவே, சீன ஜனாதிபதிப் பதவியில், ஒருவர் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்ற சட்ட மாற்றம் தொடர்பில் வியப்பை வெளியிட்டமை; தனது உரைக்கு எழுந்து நிற்காத ஜனநாயகக் கட்சியினர், தேசத்துரோகம் செய்தவர்கள் எனக் கூறியமை போன்றவற்றின் போது கூட, இதே சர்ச்சை எழுந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .