2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாக்குப்பதிவில் சில சுவாரஸ்யங்கள்

Editorial   / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் வேலூரைத் தவிர்த்து 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று (18) வாக்குப்பதிவு நடைபெற்றன.  இதைத் தவிர 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதில், இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் சில…

உயிரை துறந்த வாக்காளர்கள்

சென்னையில்,  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாததத்தில் ஈடுபட்ட, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டையைச் சேர்ந்த  சிசிலி மோரல், நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 60) சிவகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது, அங்கேயே மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டபோதும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதேவேளை, கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காந்திமாநகர் பகுதியில் வாக்களிப்பதற்காக, வரிசையில் காத்திருந்த பாலகிருஷ்ணன் (வயது 81) அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வாக்களித்த சங்கருக்கு பெயரில்லை

ஒவ்வொரு தேர்தலின்போதும் யாரோவொரு பிரபலத்துக்கு இப்படிப்பட்டச் சிக்கல் வருவது வழக்கமாகவே இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் தோனியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதது, நடிகர் சிவாஜி கணேசனின் வாக்கை வேறு ஒருவர் செலுத்தியது எனப் பல நிகழ்வுகள் கடந்தகாலங்களில் நடந்துள்ளன.

ஆனால், வழக்கத்துக்குமாறாக இந்தமுறை பல பிரபலங்கள், பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், தங்கள் வாக்கைச் செலுத்தாமல் வீடு திரும்பினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ள 159 பேர், கீழ்ப்பாக்கம் அரச மனநலக் காப்பகத்தில் வாக்களித்துள்ளனர்.

அந்தக் காப்பகத்தில், ஏறக்குறைய 900 பேர் உள்நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் சுயமாக வாக்களிக்கத் தகுதியுடைய 159 பேரைத் தேர்ந்தெடுத்தது. அவர்களுக்கு சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

அந்தத் தொகுதியின் வேட்பாளர்கள் யார், அவர்கள் சார்ந்துள்ள கட்சி, அவர்களின் சின்னம் ஆகியவை குறித்து, இரண்டு நாள்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

வரிசையில் நிற்காது வாக்களித்தார் ரங்கசாமி

வாக்குப்பதிவு மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருக்க, வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்களில் வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, தடைசெய்யப்பட்ட 200 மீற்றர் எல்லையைக் கோட்டை தாண்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்துக்குள் தன்னுடைய மோட்டார் சைக்கிளை வாகனத்தை நிறுத்திவிட்டு, வரிசையில் நிற்காமல், நேராக சென்று வாக்கைப் பதிவு செய்தார்.

பரிசுப்பெட்டி பட்டனுக்கு சுகயீனம்

கடலூர் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியிலுள்ள வாக்குப்பதிவு  இயந்திரத்தில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் காசி. தங்கவேல் பெயருக்கு நேராக இருந்த பட்டன் உடைந்து விட்டது.

இதனால் வாக்காளர்கள் அந்த பட்டனை உபயோகிக்க இயலாத சூழல் உருவானது. அ.ம.மு.க சின்னமுள்ள பட்டன் உடைந்ததால் வாக்குப்பதிவு 1 மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

கார்த்திகேயனுக்கு சோதனை

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லாததால், வாக்குச்சாவடிக்குச் சென்று, வாக்களிக்க முடியாத நிலையில் அங்கிருந்து சென்று விட்டனர்.

இறுதியாக, தான் வாக்களித்ததாக சிவகார்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு மட்டும் பணி

திருப்பூர் தொகுதியில் அங்கேரி பாளையத்திலுள்ள மேல்நிலைப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பெண் அலுவலர்கள் மாத்திரமே பணியாற்றினர்.

கழுதையில் வாக்கு இயந்திரம்

தருமபுரிய மாவட்டம், பாலகோடு பகுதியிலுள்ள கரகூர் கிராமத்துக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கழுதைகள் மூலமே கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இக்கிராமத்துக்கு, பாதை வசதிகள் இல்லை என்பதால், மலைப்பாதையில் செல்லும் கழுதைகள் மூலம், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மணமக்களும் வாக்களித்தனர்

புதுச்சேரியில், மக்களவைத் தேர்தல், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், திருமணம் முடிந்த கையோடு, தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட குண்டுபாளையம் வாக்குச்சாவடி மையத்தில், செல்வகுமார், தீபா என்ற மணமக்கள்  தங்களது குடும்பத்தாருடன் வாக்களித்தனர்.

அதேவேளை, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அப்பைநாயக்கர் பட்டியைச் சேர்ந்த சுபாஷ், பிரியா ஆகிய இருவரும் திருமணம் முடிந்த கையோடு, வாக்குப்பதிவு செய்தனர்.

எல்லா பட்டனிலும் இரட்டை இலை

வாக்கு இயந்திரத்தில், எந்த பட்டனை அழுத்தினாலும், இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது  என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதையடுத்து, பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு வாக்கும் பதிவாகவில்லை

மதுராந்தகம் அடுத்த கே.கே.பூதூர் வாக்குச் சாவடியில், நேற்று 3 மணிவரை, ஒரு வாக்கும் பதிவாகவில்லை. மருத்துவக் கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்றுகூறி, நேற்றுடன் 17ஆவது நாள்களாக, கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

8​ பேருக்கு மறுவாக்கு

கூடலூரில் தேர்தல் அலுவலர்களின் குளறுபடியால், துப்புக்குட்டிபேட்டையில் 8 பேருக்கு மறுவாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தேர்தல் அலுவலர்களின் குளறுபடியால் 8 பேரின் வாக்கு பதிவாகவில்லை என புகார் எழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.  இதன் பேரில், கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு, 8 பேருக்கு மறுவாக்கு பதிவுக்கு அனுமதி அளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .