2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது டீப் டைவர்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூலை 30 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

லீக் போட்டிகள் தொடக்கம் இறுதிப் போட்டி வரையில் குலேந்திரன் செல்ரனின் துடுப்பு மிரட்ட, இறுதியில் ஏலாளசிங்கம் ஜெயரூபன் தனது அதிரடியால் முடித்து வைக்க தனித்துவமான அதிரடி வீரர்களை தன்னகத்தே கொண்ட டீப் டைவர்ஸ் அணி நடப்பு ஆண்டின் கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக்கில் சம்பியனாகியது.

கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகம், றொகான் - சங்கர் ஞாபகார்த்தமாக நடத்தும் கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) கிரிக்கெட் தொடரின் மூன்றாவது பருவகாலப் போட்டிகளை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

அணிக்கு 7 பேர், 5 ஓவர்களைக் கொண்டதான இத்தொடரில் ரில்கோ ரைடர்ஸ், ஜவ்னா பந்தேர்ஸ், பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ், டீப் டைவர்ஸ், நோர்த் ட்ரகன்ஸ், அக்ரஸிவ் போய்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்குபற்றின.

அணிகள் ஏ, பி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, முதலில் லீக் சுற்று நடத்தப்பட்டது. லீக் சுற்றிலிருந்து, நோர்த் ட்ரகன்ஸ், ஜவ்னா பந்தர்ஸ், டீப் டைவர்ஸ் அக்ரஸிவ் போய்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குள் நுழைந்தன.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் டீவ் டைவர்ஸ் அணியை எதிர்த்து அக்ரஸிவ் போய்ஸ் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய அக்ரஸிவ் போய்ஸ் அணி, 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 70 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டீப் டைவர்ஸ் அணி, செல்ரன், வினோத் ஆகியோரின் பிரிக்கப்படாத சிறப்பான துடுப்பாட்டம் மூலம், 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது. வினோத் ஆட்டமிழக்காமல் 35, செல்ரன் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நோர்த் ட்ரகன்ஸ் அணியை எதிர்த்து ஜவ்னா பந்தேர்ஸ் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பந்தேர்ஸ் அணி, 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 59 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நோர்த் ட்ரகன்ஸ் அணி, 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கையடைந்தது.

செல்ரனின் அதிரடியில் ஜொலித்த இறுதிப் போட்டி

தொடர்ந்த இறுதிப் போட்டியில், டீப் டைவர்ஸ் அணியும் நோர்த் ட்ரகன்ஸ் அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய நோர்த் ட்ரகன்ஸ் அணி, 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சிறிகுகன் 21, அஜய் 18, சஞ்சயன் 17 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு, 63 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டீவ் டைவர்ஸ் அணி, ஆரம்பம் முதலே செல்ரனின் அதிரடியில் ஓட்டங்களை குவித்தது. எனினும், இடையில் ஓட்டங்களைப் பெறுவதில் தடுமாற்றம் கண்டது. எனினும், 4 ஆவது விக்கெட்டுக்காக களம்புகுந்த ஏ. ஜெயரூபன் தனது அதிரடியான துடுப்பாட்டம் மூலம் 4.2 ஓவர்களில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். துடுப்பாட்டத்தில், செல்ரன் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும், ஏ. ஜெயரூபன் 23 ஓட்டங்களைப் பெற்றனர்.

இத்தொடரின் நாயகனாக அணியின் குலேந்திரன் செல்ரன் (136 ஓட்டங்கள்) தெரிவு செய்யப்பட்டார். இத்தொடரின் நான்கு போட்டிகளில் ஒரு தடவை மாத்திரமே செல்ரனை பந்துவீச்சாளர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. மிகுதி மூன்று போட்டிகளல் செல்ரன் ஆட்டமிழக்கவில்லை.

தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜவ்னா பந்தேர்ஸ் அணியின் எம். விதுனும் சிறந்த பந்துவீச்சாளராக ரில்கோ ரைடர்ஸ் அணியின் பி. தயாளனும் சிறந்த களத்தடுப்பாளராக அக்ரஸிவ் போய்ஸ் அணியின் உத்தமக்குமரனும் தெரிவாகினர்.

தொடரின் சிறந்த அணித்தலைவராக நோர்த் ட்ரகன்ஸ் அணியின் ஆர். சிறிகுகனும் தெரிவானதுடன், சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்திய அணியாக பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ் அணி தெரிவானது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .