2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி

குணசேகரன் சுரேன்   / 2019 ஏப்ரல் 12 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிலக்ஸன், மொனிக் நிதுசன், கஸ்ரோ ஆகியோரின் துடுப்பாட்டம், நேர்த்தியான பந்துவீச்சு மூலம் பொன் அணிகளின் 50 ஓவர்கள் கொண்ட போட்டியை 187 ஓட்டங்களால் சென். பற்றிக்ஸ் கல்லூரி வென்று, வெற்றி எண்ணிக்கையை 20 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணக் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது பிரபல்யம் பெற்ற பொன் அணிகளின் போர் எனப்படும், யாழ்ப்பாணம் பத்திரிசியார் (சென். பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகளின் சமரின் 50 ஓவர்கள் கொண்ட போட்டி, சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

சென். பற்றிக்ஸ் கல்லூரி டீ.ஆர்.பியற்ரி தலைமையிலும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கு ஏ.கஜீபன் தலைமையிலும் களமிறங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென். பற்றிக்ஸ் கல்லூரியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக ஈ.டிலக்ஸன், டீ.ஆர்.பியற்ரி ஜோடி, முதல் விக்கெட் இணைப்பாட்டாக 38 ஓட்டங்களைப் பகர்ந்தனர். பியற்ரி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். மறுமுனையில் டிலக்ஸன் நிலைத்தார். டிலக்ஸனும், எஸ்.பி.கஸ்ரோவும் இணைந்து, 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர். அணி, 163 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, டிலக்ஸன் 96 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து கஸ்ரோவுடன் ஜோ சேர்ந்த மொனிக் நிதுசன் மீண்டுமொரு பலமான இணைப்பாட்டமாக 73 ஓட்டங்களைப் பகர்ந்தனர். அணி, 236 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, கஸ்ரோ 45 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து, மொனிக் நிதுசன் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களை சென்.பற்றிக்ஸ் கல்லூரி பெற்றது. பந்துவீச்சில், கே. பிரகாஸ் 4, எம். சிந்துஜன் 3, எஸ். கேஸவன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

300 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரிக்கு ஆரம்பம் முதல் சரியாக அமையவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி இறுதியில் 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களையே பெற்று 187 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ரி. நிசாந்தன் 15, எஸ். பிரியங்கன் 14, எம். சிந்துஜன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டீ.ஆர். பியற்ரி 3, எஸ்.பி. கஸ்ரோ, டி. டெனீசியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாகவும், சிறந்த துடுப்பாட்டவீரராகவும் ஈ. டிலக்ஸன், சிறந்த பந்துவீச்சாளராக கே. பிரகாஸ், சிறந்த சகலதுறை வீரராக மொனிக் நிதுசன், சிறந்த களத்தடுப்பாளராக சென். பற்றிக்ஸ் கல்லூரியின் இவோன் றொசாந்த் ஆகியோர் தெரிவாகினர்.

பொன் அணிகள் சமரில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 97ஆவது போட்டியில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து பொன் அணிகள் சமர் கைவிடப்பட்டது.

மீண்டும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அரைவாசி வெற்றி இவ்வாண்டு பெறப்பட்டுள்ளது. இரண்டு நாள் போட்டிகள் இந்த வருடம் நடத்துவதற்கான கால அவகாசம் போதாமையால், இரண்டு அணிகளுக்கிடையில் நடைபெறும் 27 ஆவது ராஜன் கதிர்காமர் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டே குறித்த போட்டி இடம்பெற்றிருந்தது.

புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட் தந்தை அ. பீ. திருமகன், யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய கலாநிதி டி.ஏஸ். சொலமன், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இதனை மீண்டும் நடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்திருந்தனர்.

ராஜன் கதிர்காமர் ஒருநாள் போட்டி 1985ஆம் ஆண்டு அப்போதைய சென். பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரால் அப்போதைய யாழ்ப்பாண கல்லூரி அதிபர் ராஐன் கதிர்காமர் பெயரில் ஆரம்பிக்கப்ட்டது. இதுவே வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .