2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2018 நொபெல் பரிசுகள்: காலம் கடந்த வாழ்வு

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிசுகளுக்கு ஒரு மரியாதை உண்டு. ஆனால், அது என்னென்றைக்குமானதல்ல. அது சாகித்திய விருது முதல் நொபெல் பரிசு வரை அனைத்துக்கும் பொருந்தும்.   

நம்பகத்தன்மையைத் தக்கவைக்கும் விருதுகள், காலங்கடந்தும் நிலைக்கின்றன. நம்பகத்தன்மையை இழந்த விருதுகள், காலங்கடந்தும் வாழும் போதும், அதன் நிலை அவலமானது. நாடகத் தன்மையுடனும் சடங்காசாரங்களுடனும் அது தன்னைத் தக்க வைக்க முனைகிறது. காலங்கடந்த வாழ்வு, மனிதர்களுக்கு மட்டுமல்ல, பரிசுகளுக்கும் துன்பமானது.   

இக்கட்டுரையை, நீங்கள் வாசிக்கும்போது, சமாதானத்துக்கான பரிசும் இலக்கியத்துக்கான பரிசும் தவிர்த்து, ஏனைய துறைசார் நொபெல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கும்.   

நொபல் பரிசுகள், ஆண்டு தோறும் வழங்கப்பட்டாலும், இப்போது அப்பரிசுகள் குறித்த எதிர்பார்ப்புகள், கடந்த சில ஆண்டுகளாகக் குறைவடைந்து வந்துள்ளன. 

பரிசுகள் நியாயத்தினதும் திறமையினதும் அடிப்படையில் அன்றி, விருப்பத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்ற உண்மை, பெரும்பாலான மக்களைச் சென்று சேர்ந்திருக்கின்றது. இதை ஊடகங்களும் ஓரளவு உணர்ந்துள்ளன.   

சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்படும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில், கடந்த ஆண்டுகள் போல், யாருக்கு இம்முறை விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் இல்லை. நோர்வேஜிய ஊடகங்களும் அடக்கி வாசிக்கின்றன.   

சமாதானத்துக்கான நொபெல் பரிசுக்குழு, நோர்வேஜிய நாடாளுமன்றின் பிரதிநிதிகளின், கட்சிவாரியான பிரதிநிதித்துவத்தைக் கொண்டு அமைய வேண்டும். எனவே, அதன்படி வலதுசாரிய நிலைப்பாடே, பரிசுக்குழுவின் நிலைப்பாடுமாகும்.   

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன், இன்னொரு வகைப்பட்ட அரசியல் நிலைப்பாடுடைய பரிசுக்குழு, எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவுக்கு நொபெல் பரிசைக் கொடுத்து விருதையே கேலிக்குரியதாக்கியதோ, அதேபோல, இம்முறையும் நடந்து விடுமோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது.   

வட, தென் கொரிய இணைப்புக்குப் பாடுபட்டவர் என்று சொல்லி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, இம்முறை விருதைக் கொடுத்து விடுவார்களோ என்ற கவலை, பலருக்கு இருக்கிறது.   

1901ஆம் ஆண்டு முதல், நொபெல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், முன்னெப்போதுமில்லாத அளவுக்கு, அப்பரிசின் மீதான விமர்சனங்களும் நம்பிக்கையீனங்களும் அதிகரித்திருக்கின்றன.   

இலக்கியப் பரிசு: அவப்பெயரா, அவமானமா?  

இம்முறை, இலக்கியத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட மாட்டாது என, இவ்விருதைத் தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட, ‘சுவீடிஸ் அக்கடமி’யின் இலக்கிய அமைப்புத் தெரிவித்துள்ளது.   

பாலியல் குற்றச்சாட்டுகள், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நம்பிக்கையிழந்த அமைப்பாக, இவ்வமைப்பு மாறியுள்ளது. இது, அவ்வமைப்பையே நெருக்கடியில் தள்ளியுள்ளது.   

இதனால், இவ்வாண்டு விருதை வழங்கவியலாது எனவும் அடுத்த ஆண்டு, இருவருக்கு அவ்விருது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

‘ஸ்வீடிஷ் அகடமி’யில், இலக்கியத் துறையைச் சேர்ந்த, 18 நிரந்தர உறுப்பினர்களே, நொபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பர். இந்தக் குழுவின் உறுப்பினரான, கதரினா புரோஸ்டென்சனின் கணவரான, 72 வயதாகும், ஜீன் கிளாட் அர்னால்ட், பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது.   

அவருக்கெதிராகப் பல பெண்கள், ஆர்னல்டால் பாலியல் துன்புறுத்தலுக்கு, தாங்கள் உள்ளானதாக, வெளிப்படையாகப் புகார் கூறினர். இது சுவீடனில் பாரிய பிரச்சினையாகியது.   

இதேவேளை, மொத்தமுள்ள 18 நிரந்தர உறுப்பினர்களில், ஆறு பேருக்கு வயதாகி விட்டதால், அவர்கள் பணிகளில் பங்கேற்பதில்லை. இதேவேளை, நொபெல் பரிசை வழங்கும் அகடமிக்கு எதிராக, பல்வேறு புகார்களைக் கூறி, இரண்டு பேர் சமீபத்தில், தம் பதவிகளில் இருந்து விலகியுள்ளார்கள். இதனால், இப்போது பணியாற்றக் கூடிய நிலையில், 10 பேர் மட்டுமே உள்ளனர்.   

அமைப்பின் எந்தவொரு முடிவும் 2/3 பெரும்பான்மையால் எடுக்கப்படவேண்டியுள்ளதால், குறைந்தது 12 பேர் இருத்தல் அவசியமாகிறது. எனவே, இதுவும் விருது வழங்குவதைச் சாத்தியமற்றதாக்கி இருக்கிறது.   

இவ்விருது, 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன், 1949இல், வழங்க வேண்டிய விருது, 1950இல் அறிவிக்கப்பட்டது. அதற்கு, 68 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, விருது வழங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.   

ஸ்டீபன் ஹவாக்கிங்: விஞ்ஞானத்தின் அரசியல்  

இவ்வாண்டு காலமான இயற்பியலாளரான ஸ்டீபன் ஹவாக்கிங்ன்ஸுக்கு பௌதீகவியலுக்கான நொபெல் பரிசு வழங்கப்படவில்லை. அல்பர்ட் ஐயன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக, உலகின் தலைசிறந்த விஞ்ஞான சிந்தனையாளர் என அறியப்பட்ட ஸ்டீபன் ஹவாக்கிங், தன் வாழ்நாளில் நொபெல் பரிசைப் பெறவில்லை. 

இது அவருக்குக் கிடைக்காத அங்கிகாரம் என்பதை விட, அவ்விருதை ஸ்டீபன் ஹவாக்கிங்ஸுக்கு வழங்கி, விருது பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. கடந்த ஒரு தசாப்த காலமாக, பௌதீகவியல் விருதுகள் மிகுந்த சிக்கல்களை உடையனவாக உள்ளன.   

விஞ்ஞானத் துறையில் விருது கிடைக்காதவர்களின் பட்டியல் பெரிது. அதில் மிக முக்கியமானவர் ரஷ்ய இரசாயனவியலாளரான டெமித்ரி மென்டலீவ். 

இன்று எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஆவர்த்தன அட்டவணையைக் கண்டுபிடித்தவர் டெமித்ரி மென்டலீவ்தான். இவ்வட்டவணையின் சிறப்பு யாதென்றால், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களுக்கு மட்டுமன்றி, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படவுள்ள மூலகங்களுக்குமான இடத்தை மென்டலீவ், அவரது அட்டவணையில் குறிப்பிட்டிருந்தார்.   

இவருக்கு, 1906ஆம் ஆண்டு, இரசாயனவியலுக்கான நொபெல் பரிசை வழங்குவதற்கு, ‘ஸ்வீடிஸ் நொபெல் குழு’ தீர்மானித்தது. இருந்தபோதும், 1903ஆம் ஆண்டு, இப்பரிசை வென்ற சுவீடன் நாட்டு இரசாயனவியலாளரான ஸ்வான்தே ஆர்கெனியஸ், பரிசுக்குழுவில் உள்ளவர்களுடான நட்பைப் பயன்படுத்தி, மென்டலீவ்வுக்கு இவ்விருது கிடைக்காமல் பார்த்துக் கொண்டார். சுவீடிஸ் நாட்டுக்காரர் என்பதே, ஆர்கெனியஸ் விருது வெல்வதற்குப் பிரதான காரணமானது.   

இன்று ஆர்கெனியஸை யாருக்கும் தெரியாது. ஆனால், எல்லா இரசாயன ஆய்வுகூடங்களிலும் ஆவர்த்தன அட்டவணை தொங்குகிறது. எல்லா இரசாயன மாணவர்களும் மென்டலீவ்வைக் கற்கிறார்கள்.   

இதில் முரண்நகை என்னவென்றால், 1906ஆம் ஆண்டுக்கான இரசாயன நொபெல் பரிசு, புளோரினைக் கண்டுபிடித்தமைக்காக, பிரெஞ்சு இரசாயனவியலாளருக்கான ஹென்றி மொயஸனுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கண்டுபிடிக்காத மூலகமாகவிருந்த புளோரினுக்கு, 1869ஆம் ஆண்டே, தனது ஆவர்த்தன அட்டவணையில் இடம் வைத்தார் மென்டலீவ்.   

இதேபோல, மருத்துவத்துறையில் காந்த அதிர்வுப் படவுருக்கான நுட்பத்தையும் அதற்கான அறிவியலையும் கண்டுபிடித்த ரேய்மண்ட் டமாடியனுக்கு மருத்துவத்துக்கான விருது கிடைக்கவில்லை. ஆனால், இக்கோட்பாட்டைப் பயன்படுத்தி விரிவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு 2003ஆம் ஆண்டு, மருத்துவத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டது.   

இதேபோல விஞ்ஞானத் துறைகளில் நொபெல் பரிசு கிடைக்காத மிக முக்கியமான, அதேவேளை உலகெங்கும் நன்கறியப்பட்டவர்களில் முதன்மையானவர் தோமஸ் அல்வா எடிசன். அடுத்தவர், தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகம் பெல். மூன்றாமவர், நாம் இன்று பயன்படுத்தும், ஆடலோட்ட மின்னோட்டத்தைக் கண்டுபிடித்த நிக்கோலா டெஸ்லா.   

2018 சமாதானத்துக்கான நொபெல் பரிசு  

இவ்வாண்டுக்கான சமாதானத்துக்கான நொபெல் பரிசு, யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஒவ்வோர் ஆண்டைப்போலவே இவ்வாண்டும் உண்டு. இவ்வாண்டும், ஏதோ ஓர் அமைப்புக்குக் கொடுப்பதன் மூலம், சர்ச்சைகளிலிருந்தும் விமர்சனங்களில் இருந்தும் தப்பிக்க நோர்வேஜிய நோபெல் குழு முனையுமா, இல்லையா என்பதே எம்முன்னுள்ள வினா.   

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், அல்பிரட் நொபெலின் உயிலில், ‘விருதுகள் தனிமனிதர்களுக்கே வழங்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது, ‘ஒன்று தொடக்கம் மூன்று வரையான மனிதர்களுக்கு வழங்கப்படலாம்’ என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர, அங்கு அமைப்புகளுக்கு வழங்க இடமில்லை.  

 நோர்வேஜிய நொபெல் குழுவே அமைப்புகளுக்கும் வழங்கவியலும் என்ற வியாக்கியானத்தை முன்வைத்து, பல அமைப்புகளுக்கு, சமாதானத்துக்கான நொபெல் பரிசை வழங்கி வருகிறது.   

இரண்டு நிகழ்வுகள், சமாதானத்துக்கான நொபெல் பரிசை வழங்கும் குழுவை, ஆட்டங்காண வைத்திருக்கின்றன. 

முதலாவது, மியான்மாரில் றோகிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டமிட்ட வன்முறைகள் நடந்தேறுகின்ற நிலையில், அவ்வாட்சியின் தலைமைப்பீடத்தில் சமாதானத்துக்கான நொபெல் பரிசை வென்ற ஆங் சான் சூ கி அமர்ந்திருக்கிறார்.   

அவர், அங்கு நடக்கின்ற கொலைகளை ஒருபுறம் மூடிமறைக்கிறார். மறுபுறம், அக்கொலைகளை நியாயப்படுத்துகிறார். ஆங் சான் சூ கிக்கு வழங்கப்பட்ட நொபல் பரிசைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றிருப்பது, நொபெல் பரிசுக் குழுவுக்குச் சங்கடத்தை உருவாக்கியிருக்கிறது.   

இரண்டாவது, 2010ஆம் ஆண்டு சீனாவின் லியு ஜியாபோவுக்குப் பரிசை வழங்கியதற்கான கொடுந்தண்டனையைப் பல ஆண்டுகளாக, நோர்வே அனுபவித்தது.   

சீனாவின் மனித உரிமைப் போராளி என்றும் சீன அரசின் மனித உரிமைமீறல்களை வெளிக்கொணர்ந்தவர் என்றும் காரணம் காட்டப்பட்டு, லியு ஜியாபோவுக்குப் பரிசு வழங்கப்பட்டது. குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த லியு ஜியாபோவுக்கு, இவ்விருதை வழங்குவதன் மூலம் அவரை விடுதலை செய்யவியலும் என்ற நம்பிக்கையில், இவ்விருதை பரிசுத் தெரிவுக்குழு அறிவித்தது.   

இச்செயலை, வன்மையாகக் கண்டித்த சீனா, பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் செயலை, பரிசுக்குழு செய்துள்ளது என்றுகூறி, நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தது. இது உலக அரசியல் அரங்கிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்புகளையும் நோர்வேக்கு ஏற்படுத்தியது.  

 மிக நீண்டகால இராஜதந்திர நகர்வுகளின் பின்னர், 2017ஆம் ஆண்டே,மீண்டும் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், முழுமையாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதோடு, நோர்வே தூதுவராலயம், சீனத் தலைநகரில் திறக்கப்பட்டது.   

நோர்வேயின் தேசிய அரசியலுடனும் அதன் வெளியுறவுக் கொள்கையுடனும் நொபெல் பரிசுக்கு நெருங்கிய தொடர்புண்டு. பெண்கல்வி முக்கியப்படுத்தப்பட்ட 2014ஆம் ஆண்டு, மலாலாவுக்கு விருது கிடைத்தது. 

நோர்வேயில் பெண்களின் பங்களிப்பு முக்கிய பேசுபொருளான வேளை (2011), வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு விருது கிடைத்தது.   

நோர்வே முன்னெடுத்த மத்தியஸ்த முயற்சிகள், சமாதான உடன்படிக்கையைச் சாத்தியமாக்க, கொலம்பிய ஜனாதிபதிக்கு விருது வழங்கப்பட்டது. 

அதேவேளை, மறுபுறத்தே சமாதானத்துக்கு உடன்பட்ட பார்க் அமைப்பின் தலைவருக்கு, அவ்விருது அளிக்கப்படவில்லை. இம்முறை விருதையும் அதன்வழியே நோக்க வேண்டும்.   

இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல, இம்முறை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கிவிடுவார்களோ என்றவொரு கவலை, பலரிடத்தில் உண்டு. இருந்தபோதும், மூன்று விடயப் பரப்புகள் நோர்வேஜிய அரசியற்பரப்பின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பில், முக்கிய இடம் வகிக்கின்றன. அவைசார்ந்தவர்களுக்கு, விருதுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.   

முதலாவது, நோர்வேயிலும் ஏனைய மேற்குலக நாடுகளிலும் ‘MeToo’ இயக்கம் உருவாக்கிய தாக்கம் பெரியது. 2017ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில், பாலியல் ரீதியான தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளான பெண்கள், தாமாகவே முன்வந்து, தாம் துன்புறுத்தப்பட்டதை, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அதை ஓர் இயக்கமாக மாற்றினர்.   

இதில் புகழ்பெற்ற நடிகைகள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் எனப் பல பெண்கள், தாங்கள் பாதிக்கப்பட்ட கதையைச் சொன்னார்கள். இது, பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் எவ்வளவு பாரதூரமானவையென்றும் சர்வவியாபகமானவை என்றும் தெரிய வந்தது.   

‘MeToo’ நோர்வேஜிய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. இவ்வியக்கத்தின் வழி வைக்கப்பட்ட, குற்றச்சாட்டுகளின் விளைவால், முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் தொழிற்கட்சியின் உபதலைவருமாகிய Trond Giske தனது பதவிகளைத் துறக்க நேர்ந்தது. 

பழைமைவாதக் கட்சியின் இளையோர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Kristian Tonning Riise தனது பதவிகளை இழக்க நேர்ந்தது. 

அதேபோல, அதிவலதுசாரி முற்போக்குக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Ulf Leirstein விடுப்பில் போக நிர்ப்பந்திக்கப்பட்டார். 

பொதுவெளியில், குறிப்பாக வேலைத்தளத்தில் பெண்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை வெளிக்கொணர்ந்த பெருமை, ‘MeToo’க்கு உண்டு. ஆனால், இதற்கு விருது வழங்குவதில் மூன்று சிக்கல்கள் உண்டு.   

ஒன்று: நோர்வேஜிய அரசியலையே ஒரு கலக்குக் கலக்கிய ஒன்றுக்கு, விருது வழங்கத்தக்க அளவுக்கான பக்குவம் நொபெல் குழுவிடம் கிடையாது. எனவே, அதைத் தவிர்ப்பதற்கான சாட்டுகளைத் தேட அது நிர்ப்பந்திக்கப்படும்.   

இரண்டு: ‘MeToo’ ஒரு மக்களின் சமூக வலைத்தள இயக்கமான உருவாகிய ஒன்று. எனவே, அதற்கான விருதை யாருக்கு வழங்குவது என்பது, அது, தேடிய ஒரு சிக்கலான சாட்டாகும்.    

மூன்று: இலக்கியத்துக்கான நொபல் பரிசையே பிற்போட்டிருக்கின்ற பாலியல் குற்றச்சாட்டுகள், ‘MeToo’வின் விளைவால் வெளிக்கொணரப்பட்டவையே. எனவே, உள்ளமைப்பையே நெருக்கடிக்குள் தள்ளிய ஒன்றுக்கு, விருதை அளிப்பதானது, சுவீடிஸ் நொபல் குழுக்கு, நோர்வேஜியக் குழு கொடுத்த அடியாகக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்கவே நொர்வேஜியக் குழு விரும்பும் என நம்பலாம்.  

இம்முறை, பரிசை வெல்லக்கூடிய இரண்டாவது விடயப்பரப்பு, போர் ஏற்படுத்திய வன்முறையும் பெண்களுக்கெதிரான வன்முறையும் என்பதுமாகும். 

இவ்விடயம், இன்று நோர்வேயில் மிகுந்த கவனம் பெறுகிறது. எனவே, நீண்டகாலமாக விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கொங்கோ நாட்டு வைத்தியர் டெனிஸ் முக்வேகேயுக்கு (Denis Mukwege) விருது கிடைக்கலாம்.   

அதேவேளை, அவருக்குத் தனியே வழங்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் சிறைப்பிடிக்கப்பட்டு, மீண்ட நாடியா முராட்டுக்கும் (Nadia Murad) சேர்த்து வழங்கப்படலாம். 

நாடியா, வடக்கு ஈராக்கின் குர்திஷ் இனக்குழுமத்தின் யட்சி சிறுபான்மையைச் சேர்ந்தவர். தனது 19ஆவது வயதில், மாணவியாக இருந்த போது, ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமையாக ஓராண்டுகாலம் சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர், அங்கிருந்து தப்பிய அவர், போரில் பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கான சாட்சியமாக இருக்கிறார்.   

பரிசு கிடைக்கக்கூடிய மூன்றாவது விடயப்பரப்பு, அகதிகள் இடப்பெயர்வு ஆகும். அகதி வாழ்வில் உணவு நெருக்கடி, மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொள்ளல் போன்ற பிரச்சினைகள் ஆகும்.   

இவ்விடயப்பரப்பில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவை எல்லாம் அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், உலக உணவு ஸ்தாபனம் (World Food Programme), எல்லைகளற்ற வைத்தியர்கள் (Doctors without Borders), சர்வதேச மீட்புக் குழு (International Rescue Committee) ஆகியன முன்னிலை வகிக்கின்றன.   

கடந்த சில காலமாகப் பாதுகாப்பான தெரிவாக, அமைப்புகளைத் தெரிவதைப் பரிசுக்குழு வழக்கமாகக் கொண்டுள்ளது. 2013,2015,2017 ஆகிய வருடங்களில் அமைப்புகளே தெரியப்பட்டன. அவ்வகையில், 2018இல் அமைப்புக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்று கருதுவோரும் உண்டு. ஆனால், 2012, 2013 ஆகிய இரண்டு அடுத்தடுத்த ஆண்டுகளில், அமைப்புகளே விருது பெற்றன.   

மேற்சொன்னவற்றை விட, வேறொரு தெரிவை நொபெல் பரிசுக் குழு தெரிவதற்கான வாய்ப்புகளும் உண்டு. எதுவாக இருப்பினும், இத்தெரிவு நொபெல் பரிசின் நம்பிக்கையை, மீட்கப் போதுமானதல்ல.  
 ஒருவேளை, இம்முறையும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எட்வேட் ஸ்னோடனுக்கு விருதை வழங்கினால், விருதின் மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. 

அமெரிக்காவால் தேடப்படுகின்ற ஒருவருக்கு, விருதை வழங்குவதற்கு நோர்வே இன்னமும் தயார் இல்லை.  

 எனவே, அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அதேவேளை, எழுச்சியடையும் ரஷ்யாவைக் கண்டு, நோர்வேயும் அஞ்சுகிறது. 

ஆதனால், ரஷ்யாவின் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றுக்கு, விருதை வழங்கவியலும். அவ்வாறு வழங்கினால், சீனா செய்ததை, ரஷ்யா செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

எவ்வகையிலும் காலங்கடந்த வாழ்வு, துயரமானது என்பதை, நொபெல் பரிசு மீண்டுமொருமுறை உணர்த்துகின்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .